Thipaan / 2016 ஜூலை 06 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், ஐ.நா மனித உரிமை பேரவையில் அண்மையில் சமர்ப்பித்த இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை, இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் கலந்து கொள்வதைப் பற்றிய சர்ச்சையை மீண்டும் அரங்குக்கு கொண்டு வந்துள்ளது.
வழமையாக அரசியல் களத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையிலேயே சர்ச்சைகள் உருவாகும். ஆனால் இந்த விடயத்தில் நிலைமை சற்று வித்தியாசமாக இருக்கிறது. ஆளும் கட்சியில் உள்ளவர்களும் எதிர்க் கட்சியில் உள்ளவர்களும் இரண்டாக பிரிந்து ஒரு சாரார் வெளிநாட்டு நீதிபதிகள் வேண்டும் என்கிறார்கள்| மற்றொரு சாரார் வேண்டாம் என்கின்றனர்.
ஆளும் கட்சியில் அங்கம்வகிக்கும் அமைச்சர்களே இதில் வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர வெளிநாட்டு நீதிபதிகள் வேண்டும் என்கிறார். அவர் கடந்த மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளை அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் உரையாற்றும் போதும் அந்தக் கருத்தை முன்வைத்து இருந்தார்.
அதனை அடுத்து தேசிய இயக்கங்களின் ஒன்றியம் என்ற சிங்கள தீவிரவாத அமைப்பு வெளிநாட்டமைச்சர் தெரிவித்த கருத்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தா என அரசாங்கத்திடம் கேட்டிருந்தது. ஆனால் அரசாங்கத்தில் எவரும் அதற்கு பதிலளிக்க முற்படவில்லை.
ஆனால் மங்கள சமரவீர இந்தக் கருத்தைத் தெரிவித்த அதே நாட்களில் அதற்கு மாறான கருத்தை பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தானவும் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனாசிங்கவும் வெளியிட்டு இருந்தனர். அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதற்கு முன்னர் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமில்லை என்ற கருத்தை தெரிவித்திருந்தனர்.
இந்த விடயத்தில் மற்றுமொரு முக்கியமான பக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது கடந்த பெப்ரவரி மாதம் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமில்லை என்று ஜனாதிபதி வெளியிட்டிருந்த கருத்தை ஏறத்தாள ஏற்றுக் கொண்டிருந்தார். ஆனால் இம்முறை தமது அறிக்கையில் அவர் மீண்டும் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இளவரசர் ஹுஸைன், இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஜனவரி 21 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பி.பி.சி.யின்
சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்த பேட்டியொன்றின்போது, வெளிநாட்டு நீதிபதிகள் மனித உரிமை தொடர்பான விசாரணைகளில் ஈடுபடுவதற்கு தாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை எனக் கூறியிருந்தார். 'எமது உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு அளவுக்கும் அதிகமான நிபுணர்களும் அறிவாற்றல் உள்ளவர்களும் எம்மிடம் உள்ளனர். இந்த விசாரணை நாட்டின் சட்டத்தை மீறாத வகையிலான உள்ளக, தேசிய விசாரணையாக அமைய வேண்டும். இந்த விடயத்தில் நீதித்துறையின் மீதும் சம்பந்தப்பட்ட ஏனைய அதிகாரிகள் மீதும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சர்வதேச சமூகம் இதில் கவலைப்படத் தேவையில்லை' என ஜனாதிபதி அப்போது கூறியிருந்தார்.
இந்தக் கூற்று, இலங்கையின் இணைஅணுசரனையுடன் கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு முரணாக அமைந்ததால் மனித உரிமை உயர்ஸ்தானிகர், தமது இலங்கை விஜயத்தின்போது அதனை நிராகரிப்பார் எனப் பலரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால் தமது விஜயத்தின் இறுதியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய உயர் ஸ்தானிகர் ஒருவரும் எதிர்பாராத ஒரு கருத்தைத் தெரிவித்தார்.
'மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் அலுவலகம் போர்க் குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணை முறைமையைப் பற்றியோ அல்லது வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பைப் பற்றியோ பரி;ந்துரைகளைச் செய்தாலும் என்ன செய்வதென்று முடிவெடுப்பது இலங்கையின் இறையான்மைக்குட்பட்ட உரிமையாகும்' என அவர் கூறியிருந்தார்.
ஆனால், இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்த அவரது வாய்மூல அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 'நீதித்துறை பொறிமுறையில் வெளிநாட்டு நிதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், விசாரணை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்களிப்பைப் பற்றிய முக்கிய பிரச்சினையொன்று இருக்கிறது. மே மாத இறுதியில் பெருந்திரளான உயர் இராணுவ அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், இலங்கையின் உள்ளகப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை நிராகரித்தாக செய்திகள் கூறின. இலங்கையின் நீதித்துறை நிறுவனங்கள் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளத் தேவையான நம்பகத்தன்மையை இழந்துள்ளதால் பொறுப்புக் கூறல் என்ற பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பானது பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில் அப்பொறிமுறையின் சுயாதீனத் தன்மைமைக்கும் நடுநிலைக்குமான அத்தியாவசிய உத்தரவாதமாகும்'
உள்நாட்டு நீதிபதிகள் விடயத்தில் கருத்து தெரிவிக்கும் போது அவர்களின் திறமையைப் பற்றியே ஜனாதிபதி பேசுகிறார். ஆனால் அவர்களது நம்பகத்தன்மையைப் பற்றியே உயர்ஸ்தானிகர் பேசுகிறார் என்பது கவனத்திற் கொள்ளக் கூடிய விடயமாகும். போர்க் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக தமது கடந்த வருட அறிக்கை மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் ஒன்றைப் பரிந்துரை செய்த உயர்ஸ்தானிகர் அதனை நியாயப்படுத்தும் வகையில், அந்த அறிக்கையிலும் இந்த நம்பகத்தன்மைப் பற்றிய பிரச்சினையைச் சுட்டிக் காட்டியிருந்தார். ஆனால் பின்னர் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் இந்த உள்நாட்டு, வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் என்பது வெளிநாட்டு நீதிபதிகள் கலந்து கொள்ளும் உள்நாட்டு நீதிமன்றம் என்று திருத்தப்பட்டது. அதாவது வெளிநாட்டு நீதிபதிகள் கலந்து கொள்ளும் இலங்கையின் சட்டத்திற்குற்பட்ட நீதிமன்றம் என்று திருத்தப்பட்டது.
இவ்வாறு, உயர்ஸ்தானிகர் இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார் போல் தெரிந்த போதிலும் அதற்காக அவரைக் குறைகூற இலங்கை அரசாங்கத்துக்கு முடியாது. ஏனெனில் பொறுப்புக் கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் கலந்து கொள்வர் என்று கூறிய மேற்படி பிரேரணையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது மட்டுமல்லாது அந்தப் பிரேரணைக்கு இணைஅனுசரணையையும் வழங்கியுள்ளது. அதாவது அந்தப் பிரேரணையை அரசாங்கமே சமர்ப்பித்த பிரேரணை போலானது. அதில் உள்ளவற்றை அரசாங்கம் இப்போது மறுக்க முடியாது. அவ்வாறு மறுப்பதானது பொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கையின் நம்பகத்தன்மையை பற்றி உயர் ஸ்தானிகர் கூறுவதை நிரூபித்து விடுகிறது.
வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய பிரச்சினையை உயர்ஸ்தானிகரின் இவ்வருட அறிக்கையின் தொனியோடும் அதில் உள்ள ஏனைய விடயங்களுடனும் ஆராய வேண்டியுள்ளது. கடந்த வருட அறிக்கை நல்லிணக்கத்துக்காகவும் பொறுப்புக் கூறலுக்காகவும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டியிருந்தது. ஆனால் இம்முறை அறிக்கைமூலம் பாராட்டுவதோடு, அடக்கமான இராஜதந்திர மொழியில் அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளைப் பற்றிய சந்தேகத்தை வெளியிட்டு சில துறைகளில் போதிய முன்னேற்றம் இல்லை எனக் குறைகூறியிருக்கிறார்.
அரசியலமைப்பு திருத்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் நிர்வாக சீர்திருத்தங்கள், நீதி வழங்குதல் போன்றவை தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் தொடர்பில் இடை நடுவே நிறுத்தப்படும் அல்லது திசை திருப்பப்படும் அபாயம் இருக்கிறது என அறிக்கை கூறுகிறது. இது ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் வைத்திருந்த நம்பிக்கையின் சிறியதோர் தளர்வை காட்டுகிறது.
'அரசியலமைப்பு மாற்றத்துக்கான அரசியல் நடவடிக்கைகள் பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமை போன்ற விடயங்களில் விட்டுக் கொடுப்புக்களை உள்ளடக்கிக் கொள்ளாது என உயர்ஸ்தானிகர் நம்புகிறார்' என்ற அறிக்கையின் வாசகமும் அதனையே சுட்டிக் காட்டுகிறது.
அண்மைக் காலமாக பொதுபல சேனா போன்ற சிங்களப் பௌத்த தீவிரவாத அமைப்புகள் முஸ்லிம்களுக்கும் சில கிறிஸ்தவ பிரிவுகளுக்கும் எதிராக மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளன. இளவரசர் ஹூசைன் அதனையும் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். வெறிப்பேச்சு மற்றும் வன்முறையைத்
தூண்டுதல் போன்றவற்றுக்கு எதிராக சட்டங்களை இயற்றுவது உட்பட அவ்வாறான வேற்றுமை காட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அறிக்கை கூறுகிறது. இதுவும் அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியாக இல்லை என்று மறைமுகமாக கூறுவதற்கு சமமாகும்.
கடந்த காலத்தைப் போல் மோசமான முறையில் இல்லாவிட்டாலும் கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுதல் இன்னமும் இடம்பெற்று வருவதாக கூறும் ஐ.நா. உயர் ஸ்தானிகர், வெளிநாடுகளில் இருந்து வரும் புலிச் சந்தேக நபர்கள் சித்திரவதை மற்றம் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகுவதாகவும் குறை கூறுகிறார்.
நீதி, நியாயம் வழங்குவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் அவை மிகவும் தாமதித்தே மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் கூறுகிறார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நியாயமான பொறிமுறையொன்றின் மூலம் குற்றஞ்சாட்டப்பட்ட பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களை படைகளில் இருந்து நீக்கும் திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தமது அறிக்கையில் வலியுறுத்துகிறார்.
இந்த வேண்டுகோளை அவர் தனது கடந்த ஆண்டு அறிக்கையிலும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் 'நியாயமான பொறிமுறையொன்றின் மூலம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்' என்று கடந்தாண்டு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. எனவே, மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒருவர் வெறுமனே குற்றஞ்சாட்டப்பட்டதனால் குற்றவாளியாவதில்லை என்றும் ஐ.நா. உயர் ஸ்தானிகர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளைப் போல் படைகளில் இருந்து நீக்க வேண்டும் என்று கோருவது அடிப்படை நியாயத்துக்கு முரணானது என்றும் வாதிட்டனர். அதனை உயர் ஸ்தானிகர் ஏற்றுக் கொண்டுதான் இம்முறை அந்த வாசகத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார் போலும்.
போர்க் காலத்தில் அரச படையினர் கொத்தணிக் குண்டுகளை பாவித்ததாக அண்மையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் கூட்டம் நெருங்கி வரும் போது அரச படைகளுக்கு எதிராக புதுப்புது குற்றச்சாட்டுக்கள் ஊடகங்கள் மூலம் வெளிவருவது வழமையாகும். அதனால் எவரும் அவற்றை மறுக்கத் தேவையில்லை. ஆயினும் கடந்த ஐந்தாண்டுகளாக சரியாக மனித உரிமை பேரவையின் கூட்டங்கள் வரும் போது அவை ஒவ்வொன்றாக முன்வைக்கப்படுவதால் அவற்றின் நம்பகத்தன்மையை ஒருவர் சந்தேகிக்கவும் கூடும். இருந்தபோதிலும் அண்மையில் வெளியான கொத்தணிக் குண்டுகள் பற்றிய செய்திகளை மனித உரிமை உயர் ஸ்தானிகர் பொருட்படுத்தாமல் இருக்கவில்லை. அவற்றைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமும் அதாவது போர் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரும் அரச படைகள் கொத்தணிக் குண்டுகளை வீசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போது இலங்கையில் இருந்த ஐ.நா வதிவிட பிரதிநிதியான கோர்டன் வைஸ், 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி அரச படைகள் கொத்தணி குண்டுகளைப் பாவித்ததாக அறிக்கையொன்றின் மூலம் கூறினார். உடனே இராணுவ பேச்சாளர் அதனை மறுத்து இலங்கைப் படைகளிடம் கொத்தணிக் குண்டுகளை ஏவும் வசதிகள் இல்லை எனக் கூறினார். அன்று மாலையே மற்றொரு அறிக்கையை வெளியிட்ட கோர்டன் வைஸ் இராணுவப் பேச்சாளரின் கருத்தை தாம் ஏற்றக் கொள்வதாக தெரிவித்தார்.
அதன் பின்னர் தான் இப்போது இந்தச் செய்தி அறிக்கைகள் வெளியாகியுள்ளன. புகைப்பட ஆதாரத்துடன் வெளியாகியிருந்த இந்தச் செய்திகளைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும் என்றே இளவரசர் ஹூசைன் கூறுகிறார்.
பொதுவாக புதிய அரசாங்கத்தை கடந்த வருடம் போற்றிப் புகழ்;ந்த மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன்,
இம்முறை அந்த அரசாங்கத்தின் சில செயற்பாடுகளைப் பற்றிய சந்தேகத்தையும் சில மந்தகதியான செயற்பாடுகள் தொடர்பான அதிருப்தியையும் வெளியிட்டு இருப்பதை அரசாங்கம் தீவிரமாக கருத்திற் கொள்வதே நல்லது. 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் மஹிந்தவின் அரசாங்கத்துக்கும் ஐ.நா அதிகாரிகள் இவ்வாறுதான் மிகவும் அடக்கமாகவும் இராஜதந்திர மொழியிலும் பரிந்துரைகளை செய்தனர். மஹிந்தவின் அரசாங்கம் அவற்றைப் பொருட்படுத்தாமல் இருக்கவே நிலைமை மோசமாகியது. எனவே, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் கடந்த வருட அறிக்கையோடு ஒப்பிடுகையில், இவ்வருட அறிக்கை, மைத்திரி-ரணில் அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட ஒரு வித எச்சரிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026