2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மரங்கள் ஊடாக மத நல்லிணக்கம்

Johnsan Bastiampillai   / 2022 மே 24 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

வ. சக்திவேல்

shagthivel@gmail.com

 

 

‘மரங்கள் இல்லையேல் மழைக்காக எங்கே போய் மனுச் செய்வது? மரங்கள் இல்லையேல் மண்ணின் மடிக்குள்ளே ஏதப்பா ஏரி? பறவைக்கும் விலங்குக்கும் மரம் தரும் உத்தரவாதம் மனிதர் நாம் தருவோமா? மனிதனின் முதல் நண்பன் மரம்! மரத்தின் முதல் எதிரி மனிதன்! ஆயுதங்களை மனிதன் அதிகம் பிரயோகித்தது மரங்களின் மீதுதான்’ என கவிப்போரரசு வைரமுத்து தனது வரிகளில் மரங்களைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

எனினும், தற்காலத்தில் மரங்கள், காடுகள் என அழிக்கப்பட்டு வருவதும், ஆங்காங்கே ஒரு சில குழுக்களால் மரங்கள் நடப்பட்டு வரப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
இன மத பேதமின்றி கனி தரும் நீண்டகால மரங்களை வளர்ப்பதனூடாக மத நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக மட்டக்களப்பு எஹெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பல் சமய ஒன்றிய அமைப்பின் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் அண்மையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் முதலாம் கட்டம் தமிழ், முஸ்லிம் பாடசாலைகளிலும் இந்து, கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களிலும் இடம்பெறுகின்றன.

தமிழ், முஸ்லிம் மாணவர்கள் கற்கும் பாடசாலை வளாகங்களிலும் மத வழிபாட்டுத்தல வளாகங்களிலும் நடுவதற்கு நீண்ட கால கனிவர்க்க மரங்களான மா, பலா, கொய்யா, மாதுளை போன்ற மரக்கன்றுகள் விநியோகிக்கப்படுகின்றன.

எஹெட் கரித்தாஸ் நிறுவனம் பல் சமய ஒன்றியத்தை உருவாக்கி இன ஐக்கிய சகவாழ்வு முறையை ஊக்குவிப்பதற்கான செயற்றிட்டங்களை அமலாக்கி வருகின்றது.
இயற்கையைப் பேணி உலகத்தை உயிர்வாழ வைப்பதும் மரங்கள் என்ற படியால் இன மத பேதமின்றி அனைவரும் இணைந்து இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்.

இயற்கை இன மதபேதமின்றி மனிதர்களை வாழ வைக்கும் ஒரு அருட்கொடையாகும். அதனை இன மத பேதமின்றி அனைவரும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என பல் சமய ஒன்றிய அமைப்பின் இணைப்பாளர் எஸ்.கமல் என தெரிவிக்கின்றார்.

கரையோர வளங்களை பாதுகாக்கும்  வேலைத்திட்டம்

அதுபோன்று, சுற்றுசூழல் தேசிய பாதுகாப்பு செயற்பாடுகளுக்கமைய அதே எகெட் கரித்தாஸ் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்,  கரையோர வளங்களை பாதுகாக்கும்  வேலைத்திட்டத்துக்கு அமைய செடெக் நிறுவனத்துடன் இணைந்து கண்டல் தாவரங்களை நடும் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு  ‘லயிட் ஹவுஸ்’ சூழல் பாதுகாப்பு விழிப்பு குழு தலைவர் வி.கே.முத்துலிங்கத்தின் ஆலோசனையுடன் எகெட் கரித்தாஸ் நிறுவன  இயக்குநர் அருட்பணி எ.ஜேசுதாசன் தலைமையில் பாலமீன்மடு, திராய்மடு மீனவ சங்கம், மற்றும் கிராம அபிவிருத்தி குழுவுடன் இணைந்து மக்கள் தொடர்பாடல் பொலிஸாரின் பங்களிப்புடன்  பாலமீன்மடு, திராய்மடு கிராம சேவையாளர்  பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை பகுதியில் கண்டல் தாவரங்களை அண்மையில் நடப்பட்டன.
ஆனந்தகிரி அறப்பணி சபையினால் வேம்பு மரக்கன்றுகள் நடுகை செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

எகெட் கரித்தாஸ் அமைப்பின் சுற்றுக் சூழலைப் பாதுக்கும் செயற்பாடுகள் இவ்வாறு அமைகின்ற இந்நிலையில், மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும், ‘ஆனந்தகிரி’ அறப்பணி சபையின் ஏற்பாட்டில், ‘ஆளுக்கொரு மரம் நடுவோம்; இயற்கையை நேசிப்போம்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில் வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டு வரப்படுகின்றன. அதற்கிணங்க கோவில்கள், பொது இடங்கள், வீதிஓரங்கள் உள்ளிட்ட பலஇடங்களிலும் மரங்கள் நடப்பட்டன.

இதுவரைக்கும் சுமார் 2,000 இற்கு மேற்பட்ட கற்பக விருட்சமாகவுள்ள வேம்புமரக் கன்றுகளை நட்டுள்ளதாகவும், எதிர்வரும் மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின், பதுளை வீதி, பாசிக்குடா வீதி, கோட்டமுனை மைதானம், வாழைச்சேனை பௌத்த விகாரை உள்ளிட்ட பலஇடங்களில் கொன்றை மரங்களை நடுவதற்குத் திட்டமிட்டுள்தாகவும், அவ்வமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

கிழக்குப் பல்கலைகழகத்தின் சௌக்கிய பராமரிப்புப் பீடத்தின் ஆரம்ப சுகாதார பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இலுப்பை மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம்.

குடும்பநல வைத்திய நிபுணரும் சிரேஷ்டவிரிவுரையாளருமான டொக்டர். கந்தசாமி அருளானந்தத்தின் வழிகாட்டலில் மருத்துவபீட மாணவர்களின் சமூக செயற்பாட்டின் ஓர் அங்கமாக மரநடுகை செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் காணப்படும் ஆறு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கும் சௌக்கிய பராமரிப்புப் பீடத்தின் சமூக செயற்றிட்டப் பகுதியில் பொருத்தமான இடங்களில் நீண்டகாலப் பயன்தரக்கூடிய மரங்களை நடுவதன் மூலம் எதிர்காலத்தில் அப்பிரதேசத்தினை ஒரு பசுமையான உற்பத்திப் பிரதேசமாக மாற்றும் நோக்கத்திற்கமைவாக ஆரம்பக்கட்டமாக கொக்குவில் கிராம சேவகர் பிரிவில் காணப்படும் பொதுக்காணியினைச் சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டன. அத்தோடு மருத்துவபீட மாணவர்கள் தங்களின் களக்கற்கைக்காக வழங்கப்பட்டிருக்கும் குடும்பங்களின் வீடுகளில் நடுவதற்கான மரக்கன்றுகளும் மாணவர்களிற்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மருத்துவக்குணம் மிக்கதும், நீண்டகாலப் பயன்தரக்கூடியதும் மற்றும் சூழலுக்கு அழகினையும் வளியில் ஒட்சிசன் வாயுவின் செறிவை அதிகரிக்கக்கூடியதுமான பலநற்குணங்களைக் கொண்ட இலுப்பைக் கன்றுகள் நடப்பட்டதோடு, இவ்வாறு மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக குறித்த பிரதேசத்தில் நடாத்துவதற்கு கிழக்குப் பல்கலைகழகத்தின் சௌக்கிய பராமரிப்புப் பீடத்தின் ஆரம்ப சுகாதார பராமரிப்பினால் திட்டமிடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் எல்லைப்புறப் பகுதியாகவுள்ள கச்சக்கொடி சுவாமிமலை, வெவுளியாமடு, மைலத்தமடு, மாதவனை உள்ளிட்ட பல பகுதிகளில் பயிற்செய்கை என்ற போர்வையில் காடுகளையும். இயற்கை வனப்புகளையும் வெட்டி வீழ்திவிட்டு, அத்துமீறிய குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்ற இக்காலகட்டத்தில், இவ்வாறு சுற்றாடலையும், சுற்றுப்புறச் சூழலையும் நேசிகும் எஹெட் கரித்தாஸ், ஆனந்தகிரி அறப்பணி சபை, கிழக்குப் பல்கலைகழகத்தின் சௌக்கிய பராமரிப்புப் பீடம், உள்ளிட்ட அமைப்புகளால், அவ்வப்போது மாவட்டத்தின் ஓரு சில இடங்களில் மரக்கன்றுகளை நடுவதுவும், பாடசாலை, மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களை மையப்படுத்தி மரக்கன்றுகளை நடுவது மாத்திரமின்றி அதனை தொடர்ச்சியாக பராமரிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருவதானது மிக மிக வரவேற்கத்தக்கதாகும்.

இது ஒருபுறமிருக்க மட்டக்களப்பின் எல்லைப் புறங்களில் இடம்பெற்றுவரும் காடழிப்புகளை உடன் நிறுத்த வேண்டும், இயற்கையைப் பாதுகாக்கும், விசேட வேலைத்திட்டங்களை மேலும் பொது அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்.

பாடசாலைகள் தோறும், சுற்றாடல் கழகங்களை ஸ்தாபித்து பாடசாலை மட்டத்திலிருந்து மரநடுகைகளை ஊக்குவிக்க வேண்டும்.  வாகன பாவனையல் வெளியிடப்படும் காபசீரொட்சைட்டின் வீதம் அதிகரித்துச் செல்லும் இக்காலகட்டத்தில், ஒரு புறம் காடழிப்பும், மறுபுறம் ஆங்காங்ககே மரநடுகைகளும் நடைபெறுவதானால் பிராண வாயுவான ஒட்சிசனின் செறிவைச் சமப்படுத்த முடியாது. எனவே கிராமங்கள் தோறும் மென்மேலும் மர நடுகைத் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தல் வேண்டும்.

இதற்கு அரச சார்பற்ற அமைப்புகள் மாத்திரமின்றி, பொதுமக்கள், பொதுஅமைப்புகள், அரச நிர்வாகம், உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து காடழிப்புகளைத் தடுத்து நிறுத்துவதோடு, மென்மேலும் மரக்கன்றுகளை நடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்பதுவே சூழலியலாளர்கள் உள்ளிட்ட அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X