2025 ஒக்டோபர் 27, திங்கட்கிழமை

சினிமாவுக்குள் நுழையும் நெப்போலியனின் மகன்

Editorial   / 2025 ஒக்டோபர் 27 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான நெப்போலியன் துரைசாமி, தனது மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்றவர், தற்போது அங்கேயே ஐடி நிறுவனம் மற்றும் விவசாயப் பண்ணை அமைத்து, வெற்றிகரமான தொழில் அதிபராகப் பிரம்மாண்ட வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், பிரபல தொகுப்பாளர் கோபிநாத், நெப்போலியன் குடும்பத்தைச் சந்தித்து, அவர்கள் ஒரு முக்கிய சினிமாத் தகவல் குறித்துப் பேசியது, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நெப்போலியன், தனது அழுத்தமான நடிப்பால் மக்கள் மனதில் இடம்பிடித்தார். நடிப்புடன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அன்பைப் பெற்ற இவர், தீவிர தி.மு.க. அரசியல்வாதியாகவும் மாறி, மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வரை உயர்ந்தார்.

தனது இரண்டு மகன்களில் மூத்த மகனான தனுஷுக்கு தசை சிதைவு நோய் (Muscular Dystrophy) வந்த காரணத்தால், சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு, அவரது சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்று, அங்கேயே குடும்பத்துடன் குடியேறிவிட்டார். மகனின் சிகிச்சைக்கு முதலிடம் கொடுத்த இவரது தந்தை பாசம் பலராலும் பாராட்டப்பட்டது.

மகனின் சிகிச்சைக்காகச் சென்ற நெப்போலியன், ஒரு கட்டத்தில் அங்கேயே நிரந்தரமாகக் குடிபெயர்ந்துவிட முடிவெடுத்தார். அமெரிக்காவில் ஒரு ஐ.டி. கம்பெனி மற்றும் மிகப்பெரிய விவசாயப் பண்ணை ஆகியவற்றை நிறுவி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதில் வரும் வருமானத்தைக் கொண்டு தனது குடும்பத்தை அவர் கவனித்து வருகிறார்.

கடந்த ஆண்டு அவரது மூத்த மகன் தனுஷ்க்கும், அக்‌ஷயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. ஜப்பானில் நடைபெற்ற இந்தத் திருமணத்திற்காக மட்டும், இந்திய மதிப்பில் சுமார் 100 கோடிகள் வரை செலவு செய்திருப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆடம்பரமும், பிரம்மாண்டமும் நிறைந்த இந்தத் திருமணத்தின் செலவு குறித்து பேசு பொருளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்குச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்தப் பிரபலங்கள் பலரும், நெப்போலியன் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கமாகிவிட்டது. அந்த வரிசையில், இம்முறை பிரபலத் தொகுப்பாளர் கோபிநாத் நெப்போலியன் வீட்டுக்குச் சென்று சந்தித்துள்ளார். இது தொடர்பாக நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "கடந்த அக்டோபர் 25ஆம் தேதி நாஷ்வில்லே-வில் 'அமெரிக்க வாழ்க்கை சுகமா, சுமையா..?' என்ற தலைப்பில், கோபிநாத்துடன் ஒரு விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்காக நாஷ்வில்லே-க்கு வந்தபோது, எங்கள் வீட்டிற்கு அவர் வருகை தந்தது எங்கள் குடும்பத்திற்குக் மகிழ்வாகவும், மனநிறைவாகவும் இருந்தது" என்று பதிவிட்டுள்ளார்.  

இந்த சந்திப்பின்போதுதான் நெப்போலியன் தனது மகன், சினிமாவுக்கான கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார் என்றும், கிட்டத்தட்ட முடித்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

நெப்போலியன் இவ்வாறு கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள், சினிமாவுக்கான கதை எழுதுவது மூத்த மகன் தனுஷா அல்லது இளைய மகன் குணாலா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். பிரம்மாண்ட வாழ்க்கைக்கு நடுவே, நெப்போலியன் மகன் மூலமாக ஒரு புதிய சினிமாப் படைப்பை எதிர்பார்க்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .