2025 மே 16, வெள்ளிக்கிழமை

மரணம் ஒளிந்து நிற்கும் வீதிகள்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 17 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முகம்மது தம்பி மரைக்கார்

'தெய்வம் தந்த வீடு - வீதி இருக்கு' என்று அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் பாடல் ஒன்று உள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கே.ஜே.ஜேசுதாஸ் அந்தப் பாடலை பாடியுள்ளார். அது ஒரு தத்துவப்பாடல். வாழ்வின் நிலையாமை பற்றி அந்தப் பாடல் மிக அற்புதமாகச் சொல்லும்.

'இருப்பிடம் இல்லாதவனுக்கு வீதிதான் வீடு' என்கிறது அந்தப்பாடல். அதற்காக வீடு போல் வீதிகளைப் பயன்படுத்த முடியாது. வீதிகளை வீடு போல் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு ஆபத்து மிக அதிகம். இப்போதெல்லாம் மரணம், மிக அதிகமாக நிகழும் இடங்களாக வீதிகளே உள்ளன.

வீதிகளில் நிகழும் வாகன விபத்துகளால் இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 07 பேர் மரணிக்கின்றனர். இது பாரதூரமானதொரு எண்ணிக்கையாகும். யுத்தம் நிலவிய காலப்பகுதியில் ஏற்பட்ட சராசரி உயிரிழப்புகளை விடவும், வீதி விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் அதிகமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

வீதி விபத்துகளால் கடந்த வருடத்தில் மட்டும் 2,801 நபர்கள் இறந்துள்ளனர் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவிக்கிறது. 2014ஆம் ஆண்டு 2,436 பேர் மரணித்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிடுகின்றது. இந்த வருடம் ஜனவரியிலிருந்து மே மாதம் வரையான 05 மாதங்களில் மட்டும் 1,144 பேர் வீதி விபத்துகளில் பலியாகியுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன சில நாட்களுக்கு முன்னர் கூறியிருக்கின்றார்.

இலங்கையில் கடந்த 10 வருடங்களில் வீதி விபத்துகளால் 23 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் மரணித்திருக்கின்றார்கள். 50 ஆயிரம் பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். விபத்துகளில் பலியாவோரின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகில் ஒவ்வொரு வருடமும் 12.5 இலட்சம் பேர் வீதி விபத்துகளில் பலியாவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இந்தக் கணக்கின்படி பார்த்தால், ஒவ்வொரு நாளும் 3,472 பேர் வீதி விபத்துகளால் இறக்கின்றனர். இவ்வாறு பலியாவோரில் மிக அதிகமானோர் 15 தொடக்கம் 29 வயதுகளுக்கிடைப்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உலகில் அதிகமாக மரணம் நிகழ்வதற்குரிய காரணங்களில் வீதி விபத்து ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதன்படி உலகில் நிகழும் மரணங்களில் 2.2 சதவீதமானவை, வீதி விபத்துகளால் ஏற்படுகின்றவையாகும். 2030ஆம் ஆண்டளவில் இது 07ஆவது இடத்தை எட்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது. இன்னொருபுறம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள நாடுகளிலேயே வீதி விபத்துகளால் 90 சதவீதமான மரணம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களைக் கொண்ட நாடுகளில் போக்குவரத்துக்கு அத்தியாவசியமான உட்கட்டுமான அபிவிருத்திகள், கொள்கை மாற்றங்கள் போன்றவை சிறப்பாக இல்லை. மேலும், வாகனங்களின் வேகம் குறித்த அமுலாக்கல்களும் திருப்திகரமாக இருப்பதில்லை என்று கூறப்படுகிறது.

அதிகமான வீதி விபத்துகள் ஏற்படுவதற்கு மிகப் பிரதான காரணங்களில் ஒன்று குடித்துவிட்டு வாகனம் செலுத்துவதாகும். அதிக வேகம், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துவது, இருக்கைப்பட்டி அணியாமல் வாகனங்களைச் செலுத்துவது, சிறுவர்கள் வாகனங்களைச் செலுத்துவது மற்றும் அலைபேசிகளில் உரையாடிக் கொண்டு வாகனங்களைச் செலுத்துவது போன்ற செயற்பாடுகளினாலும் அதிகமான வீதி விபத்துகள் நிகழ்கின்றன.

சாரதிகளின் அலட்சியமான செயற்பாடுகளால் நிகழும் வீதி விபத்துகளின்போது, வீதி ஒழுங்கைப் பேணியவாறு பயணித்த பல பாதசாரிகள் உயிரிழந்துள்ளமையை நாம் கண்டிருக்கின்றோம். ஒரு சாரதியின் சிறிய தவறு, மற்றொருவரின் உயிரைப் பலிகொள்வதென்பது மிகப் பெரும் கொடுமையாகும்.

இன்னொருபுறம் வாகனங்களைச் செலுத்திச் செல்லும் சாரதிகள் தங்களின் அலட்சியமான நடத்தைகளால் விபத்துக்குள்ளாகுவதுடன், தமது உயிர்களையும் பலிகொடுத்து விடுகின்றனர்.  வீதி ஒழுங்குகளையும் போக்குவரத்துச் சட்டங்களையும் மதித்து நடக்கும்போது, வீதி விபத்துகள் பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன. அதிகமான போக்குவரத்துச் சட்டங்கள், சாரதிகளுக்குப் பாதுகாப்பாக உள்ளன. ஆனால், அவை தொடர்பில் எம்மில் அதிகமானோர் புரிந்துகொள்வதேயில்லை. தலைக்கவசம் அணிவதென்பது பொலிஸாருக்காக என்று பலர் புரிந்து வைத்துள்ளனர்.

பொலிஸாரிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மட்டுமே தலைக்கவசம் அணிகின்ற பலரை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால், ஒரு விபத்து நிகழும்போது, தலைக்கவசம் அணிந்து செல்லும் மோட்டார் சைக்கிள் சாரதி, உயிராபத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் சாத்தியங்கள் பல மடங்கு அதிகமாக உள்ளது. அநேகமாக, விபத்தின்போது தலையில் ஏற்படும் காயங்கள் மற்றும் தலைக்குள் ஏற்படும் இரத்தக் கசிவுகள் போன்றவை உயிரிழப்புகளுக்கு பிரதான காரணங்களாக அமைந்து விடுகின்றன.

சாரதியொருவர் வாகனம் செலுத்தும்போது, அவரின் கவனம் முழுக்க வாகனம் செலுத்துவதில் ஒருநிலைப்பட்டிருக்க வேண்டும். கவனம் சிதறும்போது, விபத்துகள் ஏற்படுகின்றன. அநேகமாக, வாகனங்களைச் செலுத்திக்கொண்டே அலைபேசியில் உரையாடும்போது, சாரதியின் கவனம் ஒருநிலையில் இருப்பதில்லை. அவர் கவனச் சிதறலுக்கு உள்ளாகின்றார். அவ்வாறான வேளைகளில் அவர் விபத்தை ஏற்படுத்தி விடுவதற்கு அதிகபட்ச சாத்தியங்கள் உள்ளன.

தலைக்கவசத்துக்கும் காதுக்கும் இடையில் அலைபேசியைச் சொருகிக்கொண்டு, அதில் உரையாடியவாறு பயணிக்கும் மோட்டார் சைக்கிள் சாரதிகளை இப்போதெல்லாம் நாம் அதிகம் காணலாம். போதாக்குறைக்கு இவர்கள் படுவேகத்திலும் பயணிக்கின்றார்கள். இவ்வாறானவர்கள் கவனச் சிதறலுக்கு உள்ளாகுவதுடன், கட்டுப்பாட்டையும் இழந்து விடுகின்றனர். இறுதியில் இவர்கள் விபத்தையும் மரணத்தையும் ஏற்படுத்தி விடுகின்றனர் அல்லது எதிர்கொள்கின்றனர்.இவ்வாறான சாரதிகள் மஞ்சள் கோட்டில் பயணிப்போரையும் அடித்துத் தள்ளிவிட்டு, விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அலைபேசியில் உரையாடிக்கொண்டு வருகின்ற இவர்களின் கவனம், மஞ்சள் கோடுகளில் இருப்பதில்லை.

அண்மையில் மஞ்சள் கோட்டில் பயணிக்க முயற்சித்த பாதசாரியொருவரை, ஹோன் அடித்து நிறுத்திவிட்டு, பயணித்த ஒரு வாகனத்தை காணக்கிடைத்தது. மஞ்சள் கோடு பற்றிய எந்தவித அறிவும் அந்தச் சாரதிக்கு இருந்திருக்க முடியாது. அல்லது வீதி ஒழுங்கு மற்றும் சட்டம் குறித்து அலட்சியமான மனநிலையைக் கொண்டவராக அந்தச் சாரதி இருக்க வேண்டும்.

இலங்கையில் போக்குவரத்துச் சட்டம் இன்னும் இறுக்கமாக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அண்மையில் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பயணித்த ஒரு வாகனம், வீதியைக் கடக்க முயற்சித்த ஒரு சிறுவனை மோதி அந்த இடத்திலேயே பலியெடுத்துவிட்டு, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றைச் சேதப்படுத்தியவாறே, அருகிலிருந்த கட்டிடமொன்றையும் உடைத்துத் தள்ளியது. வாகனத்தைச் செலுத்தி வந்தருக்கு எதுவும் ஆகவில்லை. வாகனத்திலிருந்த காற்றுப்பை உரிய நேரத்தில் இயங்கியதால் சாரதி உயிர் பிழைத்தார்.

மேற்படி விபத்தை ஏற்படுத்திய சாரதி, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டார். இனி, இந்த விபத்து தொடர்பான வழக்கு நடக்கும். இவ்வாறான பல வழக்குகளின் முடிவில், சிறிய தண்டனைகளுடன் சாரதிகள் தப்பித்துக்கொண்டமையை நாம் கண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்ட அல்லது உயிரிழந்த தரப்புக்கு சொல்லிக்கொள்கின்றால் போல் நட்டஈடு எவையும் கிடைப்பதில்லை.

எனவே, விபத்துகளையும் அவற்றினூடாக மரணங்களையும் ஏற்படுத்தும் சாரதிகளுக்கு உச்சபட்சத் தண்டனைகளை வழங்குவதுடன், பாதிக்கப்படும் தரப்புகளுக்கு அதிகபட்ச இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும் இலங்கையில் போக்குவரத்துச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்.

வீதி விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் இவ்வாறிருக்க, உலகளவில் ஒவ்வொரு வருடமும் 20 தொடக்கம் 50 மில்லியன் வரையிலானோர் வீதி விபத்துக் காரணமாக காயமுற்றும் அங்கவீனமடைந்தும் வருவதாகவும்  புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது.

இலங்கையில் வாகனங்களின் பாவனை அதிகரித்துள்ளமையானது வீதி விபத்துகள் அதிகரித்துள்ளமைக்கு ஒரு காரணமாகும். இன்னொருபுறம், அநேகமான வீதிகள் கார்ப்பட் வீதிகளாக மாற்றப்பட்டுள்ளமையும் வீதி விபத்துகள் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. வாகனங்கள் அதிக வேகத்தில் பயணிப்பதற்கு கார்ப்பட் வீதிகள் ஏதுவாக உள்ளன. இவ்வாறான வீதிகளிலேயே  அதிகமான விபத்துகள் நிகழ்கின்றமையும் இங்கு கவனிப்புக்குரியது.

'வேகம் கொல்லும்' என்கிற வாசகங்கள் வீதியோரங்களில் இடப்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே, கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் தமது வாகனங்களைச் செலுத்துகின்ற சாரதிகள் புத்திசாலிகளாக இருக்க வாய்ப்பில்லை. தமது எதிர்காலம், குடும்பம் பற்றிய அக்கறைகளைக் கொண்ட எந்தவொரு சாரதியும் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பயணித்து உயிராபத்தை  ஏற்படுத்திக்கொள்ள மாட்டார்.

வீதி விபத்துகளில் பலியாவோரில் அதிகமானோர் இளைஞர்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையானது மிகவும் கவனிப்புக்குரியது. இளைஞர்களிடமுள்ள விளையாட்டுக் குணம், மிகை ஆர்வம், பின் விளைவுகளை அலட்சியம் செய்யும் மனோபாவம் போன்றவற்றின் உந்துதலினால், அவர்கள் வாகனங்களை அதிக வேகத்தில் செலுத்துகின்றனர். அநேகமான தருணங்களில் அதிவேகம் அவர்களைக் கொன்று விடுகிறது.

இலங்கையில் ஒவ்வொரு நாளும் வீதி விபத்துகளினால் ஏற்படும் 07 மரணங்களின்போதும், ஆகக்குறைந்தது ஒரு குடும்பம் தனது வீட்டுத் தலைவனை இழக்க நேரிடலாம். ஒரு குழந்தை அநாதையாகக்கூடும். தமக்கு உழைத்துக் கொடுக்கும் ஒரு சகோதரனை அல்லது சகோதரியை ஒரு குடும்பம் இழந்து தவிக்கக் கூடும். இத்தனைக்கும் ஒரு சாரதியின் அலட்சியமான நடத்தையே காரணமாக இருக்கக் கூடும்.

அந்த சாரதி நீங்களாக இருந்து விடக் கூடாது என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .