Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஜனகன் முத்துக்குமார்
கடந்த ஆண்டு இறுதிப்பகுதியிலும் நடப்பாண்டின் நடுப்பகுதிவரையிலும், பயங்கரவாதம் தொடர்பாக சர்வதேச அரங்கில் பேசப்பட்ட நாடுகளின் வரிசையில், மாலி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பிரதானமாக நாட்டின் பயங்கரவாதக் குழுக்களையும் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைகளையும் களைதல், சர்வதேச பாதுகாப்புக்கான உதவிகளைப் பெறுதல் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மாலி முன்வைக்கும் அதேவேளை, உள்நாட்டு பயங்கரவாதச் செயற்பாடுகள், தொடர்ச்சியாக பிராந்தியத்துக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியவண்ணமே உள்ளன.
2012ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் இருந்து, பயங்கரவாதத்துக்கு எதிராக முனைப்பாகப் போராடவேண்டிய நிலையில் மாலி உள்ளது. ஆசாவாட்வின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் (MNLA) தலைமையின் கீழ், ஒரு கிளர்ச்சி, வடக்கு மாலியில் வெடித்ததைத் தொடர்ந்தும், அதன் பின்னராக பமாகோவில் அரசாங்கம் ஆட்சிக் கவிழ்ப்பொன்றுக்கு முகம்கொடுக்க நேர்ந்ததைத் தொடர்ந்தும், நிலைமை மேலதிக சிக்கலானதானது. அதே நேரத்தில் MNLA, இஸ்லாமிய மக்ரெப்புக்கான அல்கொய்தா (AQIM), மேற்கு ஆபிரிக்காவுக்கான ஒற்றுமை மற்றும் ஜிஹாத் (MUJAO) ஆகிய இயக்கங்களுடன் நட்புறவை வளர்த்திருந்ததும், 2015ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அல்ஜீயர்ஸ் சமாதான மற்றும் நல்லிணக்க உடன்படிக்கையை MNLA மீறியமையும், நாட்டில் கொந்தளிப்பான நிலைமை உருவாகவும், வன்முறைக் குழுக்கள் மாலியன் கிடல், காவ், திம்புக்டு நகரங்கள் உட்பட சாஹல் (Sahel) மீது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தவும் காரணமாய் அமைந்திருந்தது.
மறுபுறத்தில், 9/11 தாக்குதலுக்குப் பின்னரான காலப்பகுதியில், பயங்கரவாதத்தைக் களைதல் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளில் ஒன்றான மாலி, சர்வதேச ரீதியாக பயங்கரவாதச் செயற்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக, மிகவும் கூடியளவு உதவிகளைப் பெற்றிருந்தது. உதாரணமாக 2003இல், பான்-சாஹல் முன்னெடுப்பு (Pan-Sahel Initiative) திட்டத்தின்அடிப்படையில், மாலியில் சுமார் 7.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை, மாலியிலும் அதனை அண்டிய பிரதான புவியியலிலும் கவனம் செலுத்துவது தொடர்பில், ஐ.அமெரிக்கா முதலீடு செய்திருந்தது. 2005ஆம் ஆண்டில், சஹாராவுக்கு அப்பாலுள்ள பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டமைப்பானது (TSCTP), ஐ.அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட வேளையில், 2013 வரையான காலப்பகுதியில், மாலியில் கிட்டத்தட்ட 80 மில்லியன் டொலர்களை, பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாட்டுக்காக, ஐ.அமெரிக்கா ஒதுக்கீடு செய்திருந்தது. 2013ஆம் ஆண்டில், “சேர்வல் நடவடிக்கை” (Operation Serval) எனும், பயங்கரவாதத்தை எதிர்க்கும் இராணுவ நடவடிக்கைகளை மாலியின் அரசபடைகளுடன் இணைந்து பிரான்ஸ் மேற்கொண்டிருந்தது. மேலே குறிப்பிடப்பட்ட முயற்சிகள், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காகவும், பமாகோவில் இராஜதந்திர பிரதிநிதித்துவங்களை ஊக்குவிக்கும் முகமாகவும் ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச, பிராந்திய, தேசிய திட்டங்களின் பரந்த தொடர்ச்சியான வடிவங்களாகவே பார்க்கப்படுகின்றன.
எது எவ்வாறிருந்த போதிலும், மாலியின் குறித்த நிலைமைக்கு பன்முகப்பட்ட காரணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றமை அவதானிக்கத்தக்கது. உண்மையில், தற்போதைய சூழ்நிலை பிராந்திய புவிசார் அரசியல் இயக்கங்களின் செல்வாக்கு, ஆயுதக் குழுக்களின் முன்னேற்றம், பயங்கரவாதத்துக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் என்பவற்றுக்கு இடையிலான தொடர்புநிலை வளர்ச்சியடைந்தமை, வரலாற்று ஓரங்கல் விளைவிப்பு, இனப் பதற்றங்கள், சிற்றின இருப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும், கடுமையான பொருளாதார சமனின்மை, மோசமான நிர்வாகத்தின் விளைவுகள் அடிப்படையிலுமே தோற்றம் பெற்றதெனலாம்.
சமூகப் பொருளாதார சமத்துவமின்மை, இன ரீதியான ஒடுக்கு முறைகள், உண்மையாகவே மாலியில் ஏற்பட்டுள்ள மோதலில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன என்பது வெளிப்படையானது. நாட்டின் தெற்குக்கும் வடக்குக்கும் இடையேயான பதற்றங்கள், நாட்டினுடைய சுதந்திரத்துக்கு பின்னராக காலப்பகுதியில் அதிகரித்ததுடன், 1962ஆம் ஆண்டில் மாலியின் அரசாங்கத்துக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி வெடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, மேலதிகமாக மூன்று கிளர்ச்சிகள் வெடித்திருந்தன. இது, பமாகோவின் மத்திய அரசாங்கத்தால் வடகிழக்கு வரலாற்று ஓரங்களிப்பு; பரந்த பிரதேசத்தை நிர்வகிப்பதில் மாலி அரசாங்கம் எதிர்கொண்ட சவால்கள் - குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை அங்கிகரிக்க மறுத்த டூரெக், அரபு சமூகங்களை அதிகாரத்துக்குள் தக்கவைத்திருத்தல் என்பன, கடினமான ஒன்றாகவே காணப்பட்டது.
மேலதிகமாக, அசாவட் பிராந்திய கிளர்ச்சியாளர்கள், வறுமை மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி சேகரிக்கும் வகையில், சட்டவிரோத நடவடிக்கைகளிலும் சட்டவிரோத வர்த்தகங்களையும் தொடர்ச்சியாக பேணியதுடன், குற்றங்களையும் ஆட்கடத்தல்களையும் செய்வதற்கும், போதைப்பொருட்கள் விற்பனையையும் ஏற்றுமதியையும் செய்யவும் தலைப்பட்டிருந்தனர். அதற்காக, சஹாரா போன்ற ஒரு பாலைவன மண்டலம், வரையறுக்கப்பட்ட பொருளாதார வாய்ப்புகளை வழங்குகின்ற போதிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, இப்பகுதி போதைப்பொருட்களைக் கடத்தல், ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்குமான புலம்பெயர்ந்தோரின் கடத்தல் ஆகியவற்றுக்கு முக்கியமானதொரு வழியாக மாறிவிட்டது.
பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் நடவடிக்கைகளுக்கு இலாபங்களைப் பெற சட்டவிரோத வர்த்தகத்தைப் பயன்படுத்தி வருகின்றன. AQIM-இன் முன்னோடி என அறியப்படும் பிரசங்கி மற்றும் காம்பாட்-க்கான குழு, அல்ஜீரியாவிலிருந்து வடக்கு மாலியில் 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதன் நிதி வருவாய்கள் கடத்தல் உட்பட்ட நடவடிக்கைகளை மாற்றியிருந்தது. இந்நிலையில் AQMI இப்பொழுது, “வறிய வனாந்தர இளைஞர்களுக்கு கவர்ச்சிகரமான ஒரு முதலாளி” எனச் சித்திரிக்கப்படுகின்றமை, குறித்த பிராந்திய மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வரும் என எண்ணமுடியாமல் உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago