2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

‘மிஸ்டர் கிளீன்’ இமேஜை சிதைக்கும் சதி

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தன் தவம் 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது இலங்கை அரசியலில் கொதி நிலையை உருவாக்கியுள்ளதுடன்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும்   ஏற்படுத்தி விட்டுள்ளது.

அதுமட்டுமன்றி ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்தின் ஆளுமைத்திறனையும் அரசியல் அனுபவத்தையும் மக்கள் நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்தி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடும் ஒரு சாதாரண அரசாங்கமாகவே அருவருப்புடன் பார்க்க வைத்துள்ளது.

“சட்டம் அனைவருக்கும் சமம்.முன்னாள் ஜனாதிபதியாகவிருந்தாலும் தவறு செய்திருந்தால் சட்டம் பாயும்’’என   ஜே .வி.பி.-என்.பி.பி.அரசாங்கம் பீற்றிக்கொண்டாலும் அவ்வாறு பீற்றிக்கொள்வதற்கு  அவர்களுக்கு தகுதியுண்டா என்பது முதல் கேள்வி.

ஏனெனில்  ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைவதற்குள்ளேயே இந்த அரசின் அமைச்சர்கள் சிலர்  ஊழல்,மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுக்குள்ளான நிலையில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

 ஜே .வி.பி.-என்.பி.பி.அரசாங்கம் அமைந்தவுடன் சபாநாயகராக நியமிக்கப்பட்ட அசோக சபுமல் ரன்வல நாட்டையும் மக்களையும் சொந்தக்கட்சியையும் ஏமாற்றி  ‘’போலி கலாநிதிப் பட்டம்’’சமர்ப்பித்த நிலையில்  அது அம்பலமாகி    அவர் பதவி விலகியபோதும் அவர் மீது இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை.

அதுமட்டுமன்றி ரில்லியன்,பில்லியன் கணக்கில்  பண மோசடி செய்தவர்கள், கணக்கு வழக்கின்றி செலவு செய்தவர்கள், வெளிநாடுகளில் வைப்பிலிட்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள் பலர் இருக்கின்றனர்.

கடந்த காலத்தில் ஊழல், மோசடி, லஞ்சம், கடத்தல், காணாமல் ஆக்குதல், படுகொலை செய்தல் இவ்வாறு பல்வேறுபட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள்  பலர்  வெளியில் சுதந்திரமாக இருக்கின்றனர் .இவர்கள் மீதும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறானவர்களையெல்லாம் விட்டு விட்டு  தனிப்பட்ட செலவு ஒன்றினை பொதுச் செலவாக காட்டி இருக்கின்றார் அதாவது அவரது மனைவியின் ஒரு பட்டமளிப்பு விழாவுக்கு பிரிட்டனுக்கு  சென்ற போது அதற்காக ஒரு கோடியே 66 இலட்சம் ரூபா  செலவு செய்திருக்கின்றார் என்பதற்காகவே முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்த அற்பத்தனமான குற்றச் சாட்டில்   ‘’மிஸ்டர்  கிளீன்’’ என அழைக்கப்படும்  முன்னால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ததன் பின்னணியில் அரசியல் வன்மமும் அரசியல் பழிவாங்கலும்  மட்டுமே உள்ளது.

பட்டலந்தை வதைமுகாம் சூத்திரதாரி, மத்தியவங்கி பிணமுறி மோசடியில் தொடர்புபட்டவர் , உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறியவர்  என்ற குற்றம்சாட்டுகளுக்குள்ளான முன்னாள்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அந்த குற்றச் சாட்டுக்கள் எவை தொடர்பிலும் கைது  செய்யாது .

‘’ஒரு கோடியே 66 இலட்சம் ரூபா  தனிப்பட்ட செலவு செலவு செய்திருக்கின்றார்’’ என்ற குற்றச்சாட்டில்  கைது செய்தமை ‘’மிஸ்டர் கிளீன்’’என்ற அவரது இமேஜை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையில் குற்றம் செய்தவரா என்பதற்கான எந்த விளக்கம் கோரல்கள்,  எதுவுமின்றி  அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் உத்தியோகபூர்வ பயணமாக அமெரிக்காவுக்கு சென்று திரும்பும் போது லண்டன் ஊடாக வந்த அவர் உத்தியோகபூர்வ அழைப்பொன்றை ஏற்று இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதுடன், பல்கலைக்கழக உபவேந்தரின் 25 வருட பூர்த்தி இராபோசன விருந்து நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

இதற்கான ஆதராங்கள் இருக்கின்ற போதும், முறையான பொலிஸ் விசாரணைகள் இன்றி அந்த விசாரணைகள் முடிவு செய்யப்படாமல் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் வெள்ளிக்கிழமையில் திடீர் கைதை மேற்கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை கைது செய்தால் சனி ஞாயிறு தினங்களில் நீதிமன்றங்கள்  செயற்படாது,

ஆகவே ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு இரு நாட்களுக்காவது சிறையில் இருக்க வேண்டும் என்று  நன்கு திட்டமிட்டே வெள்ளிக்கிழமை  ரணில் விக்கிரமசிங்கவை விசாரணைக்கு திகதி குறிப்பிட்டு அழைத்து கைது செய்து நீண்ட நேரத்தின் பின்னரே   நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கும் திடீர் மின்தடையை ஏற்படுத்தி நீதிமன்ற நடவடிக்கையினை தாமதப்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவுக்கு  பிணை வழங்குவதனை  தடுத்து விளக்கமறியலில் வைத்தனர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்தில் 
ஜே .வி.பி.அமைச்சர்கள் மட்டுமே பெரிதாக வீராப்பு பேசிக்கொண்டிருக்கின்றனர்

.என்.பி.பி. அணியினர் அடக்கியே வாசிக்கின்றனர்.இதனால்தான் ஜே .வி.பி.யின் பெலவத்தை தலைமையகத்தின் தேவைக்காகவே இந்தக் கைது இடம் பெற்றுள்ளதாக  குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு முன்னாள் ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தற்போதைய  ஜனாதிபதி  . ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்ட பின்னரே ஒரு கருத்து முன்வைத்துள்ளார். அதுவரையில் அவர் வாய் திறக்கவில்லை.

அதுமட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச , மைத்திரி பால  சிறிசேன , கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில்  அவர்களையெல்லாம் விட்டு விட்டு ராஜபக்சக்களினால் வங்குரோத்து  நிலைக்கு தள்ளப்பட்ட நாட்டை மீட்டெடுத்த,அதன்மூலம் தற்போது ஜே .வி.பி. -என்.பி.பி. அரசாங்கம் பெரிதாக சிக்கலின்றி நாட்டை முன்னெடுத்தது

செல்லக்கூடிய நிலையை ஏற்படுத்திய  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்துள்ளமை  பட்டலந்தை வதைமுகாமில் பலியான தமது தோழர்களுக்காக பழிதீர்க்கும் அரசாங்கத்தின் ஒரு  நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகின்றது.

அப்படியானால் பட்டலந்தை வதை முகாம் வழக்கு தொடர்பில் கைது செய்திருக்கலாமே  என்ற கேள்விகள் எழும். அப்படி அந்த வழக்கில் கைது செய்தால் அது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் எனக் கருதப்படும் .

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் கைது செய்தால் தமது அண்டவாளங்களும் தண்டவாளம் ஏறி விடும், மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் கைது செய்ய முடியாது என்பதால்தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரச பணத்தை தனிப்பட்ட ரீதியில் செலவிட்ட  குற்றச்சாட்டில் கைது செய்து அவரை அவமானப்படுத்தி பழி தீர்த்துள்ளனர்.  

ஆக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதன்  மூலம் இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவரை சிறிய குற்றச்சாட்டுக்காகவே கைது செய்த அரசு என்ற வரலாற்று பதிவை ஜே .வி.பி.-என்.பி.பி.அரசு பதிவு செய்துள்ள நிலையில் அரச அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அரசியலமைப்பு சர்வாதிகாரத்தின் மூலம் ‘’மிஸ்டர் கிளீன்’’என அரசியல் எதிரிகளினால் கூட மதிக்கப்படும் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்து அரசியல் பழி  தீர்த்த மோசமான ஓர் அரசாங்கம் என்ற வரலாற்று பதிவையும்  ஜே .வி.பி.-என்.பி.பி.அரசாங்கம் பதிவு செய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X