2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

மீண்டுமொரு சதி, குழி பறிப்பு

R.Tharaniya   / 2025 நவம்பர் 06 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தம் தவம்

இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து அதன் முக்கியஸ்தரும் தமிழ் தேசியப்பற்றாளருமான  சிவஞானம் சிறீதரனை வெளியேற்றி விட வேண்டும் என 
பல்வேறு சதி நடவடிக்கைகளில் இறங்கிய  தமிழரசுக்கட்சியின் முக்கிய 
சில கறுப்பு ஆடுகள் அதில் தோல்வி கண்ட நிலையில்,

பாராளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று விடக்கூடாதென மீண்டும் குழிபறிப்புக்களில்  இறங்கி அதிலும் தோல்வி கண்டும் அடங்காது தற்போது அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகவுள்ள சிறீதரனை அதிலிருந்தாவது அகற்றி ஆறுதல் வெற்றியையாவது பெற்று விட வேண்டுமென நினைத்து  மீண்டுமொரு  சதி, குழி பறிப்பு  நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்த தமிழரசுக் கட்சியின் சில முக்கிய கறுப்பு ஆடுகளின்  சதியின்  ஒரு நடவடிக்கையாகவே  அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினராகவுள்ள சிறீதரனை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்  பதவியிலிருந்து நீக்க வேண்டும்  என்ற சிறப்புரிமை மீறல் பிரச்சினையை புதிய  ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட சிங்கள எம்.பியான சாமர சம்பத் தசநாயக்க  அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை இந்த பிரேரணையை அவர் முன்வைத்த  போது, “இது சிறப்புரிமை மீறல் பிரச்சினையில்லை. அதற்கான போதிய விபரங்கள் இதில் இல்லை” என கூறி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நிராகரித்த நிலையில்  அந்த பிரேரணையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான. இரா.சாணக்கியன் போர்க்கொடி தூக்கியமை அந்தப் பிரேரணையின் பின்னணியை வெளிப்படுத்தியது.

இரா.சாணக்கியனதும்   சாமர சம்பத்  தசநாயக்கவினதும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இதில்  எவ்வித ஒழுங்குப் பிரச்சினையும் இல்லை. சாமர சம்பத் தசநாயக்க முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையில், அவரது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை முறையாகக் குறிப்பிடப்படவில்லை.

அவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு சிறப்புரிமை  மீறல் பிரச்சினையை மீண்டும் சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்தார். இதனையடுத்து, மிகச் சிறந்ததொரு சட்டத்தரணியால் சட்ட வியாக்கியானங்களோடு  இருவிரவாகத் தயாரிக்கப்பட்ட சிறீதரனுக்கு எதிரான சிறப்புரிமை மீறல் பிரச்சினையை மறுநாள்  சாமர சம்பத் தசநாயக்க எம்.பி. முன்வைத்தார்.

அதனை சபாநாயகரும் ஏற்று  பாராளுமன்ற சிறப்புரிமைக் ரிமைக்குழுவுக்கு ஆற்றுப் படுத்தினார்.  புதிய  ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட  எம்.பியான சாமர சம்பத் தசநாயக்க முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையில்,   “அரசியலமைப்பு பேரவைக்குச் சிறுபான்மை எதிர்க்கட்சிகளால் சிறீதரன் பரிந்துரைக்கப்பட்ட போதிலும்,

அரசாங்க தரப்புகளுடன்  அவர் இணைந்து செயல்படுவது அவர் மீது வைக்கப்பட்டுள்ள கூட்டு நம்பிக்கையை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் அவர் பிரதிநிதித்துவப்படுத்த நியமிக்கப்பட்டவர்களின் விருப்பத்தைக் காட்டிக் கொடுக்கிறது.

தமக்கு எதிரான இலஞ்சக் குற்றச்சாட்டுகளை மறைத்து,விசாரணையின் கீழ் இருக்கும்போது அரசாங்கத்துடன் இணைந்து வாக்களிப்பதன் மூலம் சிறீதரன் தனது அரசமைப்புப் பொறுப்பை தனிப்பட்ட பாதுகாப்பாக மாற்றியுள்ளார்.

பொறுப்புக்கூறல் நிறுவனத்தைத் தனது சொந்த தவறான நடத்தைக்கான கேடயமாக மாற்றியுள்ளார். தன்னை பரிந்துரைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துக்கு மாறாக வாக்களித்த சிறீதரன்  அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறியுள்ளார், சிறுபான்மை எதிர்க்கட்சி பிரதி நிதித்துவத்தை காட்டிக் கொடுத்துள்ளார்.

எனவே, அரசியலமைப்பு பேரவையிலிருந்து சிறீதரன் நீக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.ஜனாதிபதி அனுரகுமார  திசாநாயக்கவின் ஆட்சியில் அரசியலமைப்பு பேரவைக்கு சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறீதரன் நியமிக்கப்பட்டார்.

ஆனால், அரசியலமைப்பு பேரவைக்கு சிறீதரன் எம்.பி. தெரிவாகிவிடக்கூடாது என்பதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின்  வாரிசான நாமல் ராஜபக்‌ஷவும் தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு ‘கறுப்பு ஆடு’களும் சதி செய்த போதும், அது அப்போது வெற்றியளிக்கவில்லை.

அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர். இதன் தலைவராக சபாநாயகர்  செயற்படுவார்.  பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இதில் நிரந்தர உறுப்புரிமையை பெற்றிருப்பர்.

ஜனாதிபதியின் பிரதிநிதியாக தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் 
எம்.பியான ஆதம்பாவா  நியமிக்கப்பட்டார்.  எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட எம்.பியான அஜித் பி.பெரேரா  நியமிக்கப்பட்டார்.

பிரதமரும் தனது பிரதிநிதியாக ஒருவர் நியமிக்க முடியும். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சாராத கட்சி உறுப்பினர் ஒருவருக்கும் இடமளிக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக  கட்சி சாராத மூன்று சிவில் பிரதிநிதிகளும் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறான நிலையில்தான் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக ஒருவரை  தெரிவு செய்ய வேண்டிய நிலையில் அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின்  பிரதிநிதியாக இலங்கைத்தமிழரசுக்கட்சியை சேர்ந்த யாழ்  மாவட்ட எம்.பியான சிவஞானம் சிறிதரனின் பெயரை  அதேகட்சியை சேர்ந்த அம்பாறை மாவட்ட எம்.பியான கவீந்திரன் கோடீஸ்வரன் முன்மொழிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவரும் யாழ். மாவட்ட எம்.பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்தார்.

இதனையடுத்து, சிறீதரன் நியமிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக செயற்பட்ட நாமல் ராஜபக்‌ஷ எம்.பி. சிறீதரனை தோற்கடிக்க வேண்டும். அதேவேளை, மலையகத்தமிழர்களுடன் தமிழர்களை மோதவிட வேண்டும் என்ற  இனவாத சிந்தனையில் அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின்  பிரதிநிதியாக

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்  செயலரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பியுமான ஜீவன் தொண்டமானின் பெயரை  முன்மொழிய ரணில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட எம்.பியான  சாமர சம்பத் வழிமொழிந்தார்.

இவ்வாறான நிலையில், அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் எம்.பியான சிறீதரனை தெரிவு  செய்வதா அல்லது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமானை தெரிவு செய்வதா என்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்த இரகசிய வாக்கெடுப்பில் 25 எம்.பிக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது,  சிறீதரன் எம்.பி. 11 வாக்குகளையும் ஜீவன் தொண்டமான் எம்.பி. 10 வாக்குகளையும் பெற்ற நிலையில் சிறீதரன் எம்.பி. அரசியலமைப்பு பேரவையின் சிறியகட்சிகளின்  பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரோஹித அபேகுணவர்தன், அனுராத ஜயரத்ன மற்றும் இரு எம்.பிக்கள் பங்கேற்கவில்லை. அதேவேளை, இந்த வாக்களிப்பில் தமிழ் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இரு ‘கறுப்பு ஆடுகள்’ ஜீவன் தொண்டமானுக்கு வாக்களித்துள்ள தகவல்   பின்னர் வெளியே கசிந்தது. அதாவது,

சிறீதரன் எம்.பி. தெரிவாகிவிடக் கூடாது என்பதில் இந்த இரு தமிழ்த் தேசிய கறுப்பு ஆடுகளும் உறுதியாகவிருந்த நிலையில், இரு முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவுடனேயே சிறீதரன் எம்.பி. வெற்றிபெற்றார்  என்ற தகவல்களும் அப்போது   வெளிவந்தன .

அரசியலமைப்பு பேரவைக்கு  ஆளும் தரப்பு மற்றும் பிரதான எதிர்க்கட்சி ஆகியவற்றைச் சாராத 24 எம்.பிக்களின் சார்பாகவே சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 

“இந்த 24 எம்.பிக்களில் தமிழரசுக் கட்சியின் 8 எம்.பிக்கள் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வம் அடைக்கலநாதன் ஆகிய 2 எம்.பிக்கள் உட்பட 10 தமிழ் 
எம்.பிக்களைத் தவிர்ந்த மற்றைய 14 பேரும் தங்கள் சார்பில் அரசமைப்பு பேரவையை  பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிதரன், அங்கு பெரும்பாலும் ஆளும் தரப்பின் நிலைப்பாட்டையே ஆதரித்துச் செயற்படுகின்றார்.

என்ற  குற்றச்சாட்டை முன்வைப்பதாகச் சிலர் கூறுகின்றனர். அரசியலமைப்பு பேரவையைப் பொறுத்தவரை, 2 முக்கிய முடிவுகளில் சிறீதரனின் பங்களிப்பு, அரசுத் தரப்புக்கு இயைவாகச்செயற்பட்டார் என்ற ரீதியில்,  சர்ச்சைக்குரியதாகி உள்ளதாம்.

ஒன்று, இலஞ்ச, ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட விடயம்.

அரசுத் தரப்புடன் சேர்ந்துசிறிதரன் அளித்த ஒரு மேலதிக வாக்கின் மூலம் அவரது பெயர்  அரசியலமைப்பு  பேரவையால் பிரேரிக்கப்பட்டுள்ளமை . இந்தப் பதவிக்குப் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன் ன் போட்டியிட்டிருந்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான வழக்குகளில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஓரளவு நேர்மையோடு செயல்பட்டவர் மாதவ தென்னக்கோன். அத்தகைய மாதவ தென்னக்கோனை இப்பதவிக்குப் பரிந்துரைக்க முடியாமல்போன மைக்கு சிறிதரன் மீது  அவரது கட்சியினரே குற்றம்சாட்டுகின்றனர்.

அடுத்தது  இழப்பீடுகள் தொடர்பான அலுவலகத்துக்கு உறுப்பினர்களாக படைத்தரப்பு பின்னணி  கொண்டவர்கள் நியமிக்கப்பட்டமைக்கு சிறீதரன்  ஆதரவு வழங்கியுள்ளார்.

படைத்தரப்பு நடவடிக்கைகளால்பாதிக்கப்பட்ட  தமிழ்மக்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் பிரேரிக்கும்  ஐவர் குழுவில் மூவர் படைத் தரப்பினராக அமைகின்ற வாய்ப்பை அரசியலமைப்பு பேரவை  உறுப்பினராக இருந்து கொண்டு சிறீதரனும் சேர்ந்து ஒத்துழைத்துவழி செய்தார்  என்றும் அவரது கட்சியினரே குற்றஞ்சாட்டுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X