2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’முதுகில் குத்துவதைப் பற்றிப் பேச திகாவுக்கு அருகதையில்லை’

Kogilavani   / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

'நம்பிக்கை துரோகம்; முதுகில் குத்துவது போன்ற விடயங்களைப் பற்றிப் பேசுவதற்கு திகாம்பரத்துக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது. மத்திய மாகாண சபையினூடாக ஓர் அரசியல் முகவரியை ஏற்படுத்திக்கொடுத்த அமரர் பெ. சந்திரசேகரனின் முதுகில் குத்தியவர் தான் திகாம்பரம்.   அதன் பின்பு மஹிந்தவின் முதுகிலும்  பிறகு ரணிலின் முதுகிலும் குத்தியதோடு, தற்போது ஆளுந்தரப்போடு இணைவதற்கு முயற்சித்து வருகிறார்' என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் சாடியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தமிழ்மிரருக்கு வழங்கியுள்ள நேர்காணலின் முழுவடிவம் பின்வருமாறு,

 

கேள்வி:- அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக, உங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களும் எதிர்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் தாங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் :-  கடந்த தேர்தல் பிரசாரங்களின் போது, நான் எமது மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருக் கின்றேன். எனக்கு கிடைத்த வாக்குகளில் 10 சதவீதமான வாக்குகள் மட்டுமே ஐக்கிய மக்கள் சக்திக்கான வாக்குகளாகும்.

மிகுதி 90 வீதமான வாக்குகளும் அரவிந்தகுமார் என்ற பெயருக்குக் கிடைத்த வாக்குகளாகு மென்று உறுதியாக நம்புகின்றேன். ஆனால், நான் போட்டியிட்ட கட்சி வெற்றியடைவில்லை.

இந்நிலையில் நான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு என்னாவது?. எனவே எமது மக்களுக்கு சேவையாற்றுவதற்காக, அரசாங்கத்துக்கு ஆதரவளித்தேன்.

2015ஆம் ஆண்டு முதல் எமது ஆட்சி முடியும்வரை பாரிய அபிவிருத்தி வேலைகள், கல்வி மேம்பாட்டுக்கான எனது பங்களிப்பு, சமூக நலன் சார்பான ஏனைய விடயங்கள் போன்றவற்றில் அதிக செயல்பாடுகளை மேற்கொண்டவன் நான்.

இதனை தேர்தல் காலத்தில் ஆவண வடிவில் நிரூபித்து, மக்களுக்குக் காட்டியு ள்ளேன்.

எனது செயற்பாடுகள் காரணமாக மக்கள் மனதில்   பெரும் வரவேற்பை நான் பெற்றிருக்கின்றேன்.

அடுத்து வரும் 5 வருடங்களுக்கு எதிர்க் கட்சியில் அமர்ந்துகொண்டு, எனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. ஒருவருக்கேனும் அரச தொழில் வாய்ப்பைக்கூட  என்னால் பெற்றுக்கொடுக்க இயலாமல் போய்விடும்.

இதேவேளை, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நிலை, ஏனைய மாவட்டத்துடன் ஒப்பிடும்போது, மிகவும் பின் தங்கிய நிலைமையிலேயே உள்ளது.

நான் சுயநலவாதியாக இருந்திருந்தால், கொள்கைகளைப் பேசிக்கொண்டும் அறிக்கை விட்டுக்கொண்டும் சுகபோகமாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால், என்னால் அப்படியிருக்க முடியாது.

நாளாந்தம் இரவு 12.00 மணிவரை மக்கள் பணியாற்றி பழகியவன் நான். கடந்த 3 மாதங்களாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், எமது மக்களின் பிரச்சினை தொடர்பாக, அந்தந்த பொலிஸ் நிலையங்களோடும் அரச

திணைக்களங்களோடும் தொடர்புகளை மேற்கொண்டபோது,  அவற்றிற்கு சரியான தீர்வு கிடைக்காத ஒரு தன்மையை   உணரக் கூடியதாகவிருந்தது. எமது மக்களின் பிரச்சினைகள் ஏராளம். இவற்றுக்குத் தீர்வு காண வேண்டுமாயின் ஆளும் அரசாங்கத்தின் ஆதரவு தேவை யென்பதையும் உணர்ந்தேன்.

பதுளை மாவட்டம் என்பது ஒரு பெரும்பான்மை சமூகத்தின் மாவட்டமாகும். இதில் சிறுபான்மை சமூகத்தின் விகிதாசாரம் மிக குறைவானதே. இவ்வாறான நிலையில், 

அரசாங்கத்துக்குள்  சிறுபான்மை மக்களின் பிரதிநிதியாக நான் இருக்க வேண்டும் என்ற விடயம் எனது மனதில் ஆழமாக பதிந்தது. இவை அனைத்தை யும் கருத்திற் கொண்டு, நான் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன்.

எனவே,  இந்த முடிவில் என்ன தவறு இருக்கின்றது. எனது அரசியல் எதிரிகளே, காழ்ப்புணர்ச்சிகளோடு என்னை விமர்சித்து வருகின்றனர். இன்று இவ்வாறு விமர்சிப்பவர்கள் எதிர்காலத்தில் தங்களின் தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்கு போட்டி போட்டுக்கொண்டு வந்து என் முன்னால் நிற்பர்.

அவ்வாறானவர்களுக்கும் எனது சேவை நிச்சயமாக தொடரும்.  அதேவேளை,  நான் ஒரு சாணக்கியமான முடிவை மேற்கொண்டு இருக்கின்றேனென்று பாராட்டுகளும்,  வாழ்த்துகளும் குவிந்த வண்ணமே உள்ளன. இதனை எனக்கு ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும்.

கேள்வி:-   அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பது தொடர்பில், மலையக மக்கள் முன்னணி, மலையகத் தொழிலாளர் முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய அமைப்புகளில் எவருக்காயினும் அறிவித்தீர்களா?

பதில் :- நான் மலையக மக்கள் முன்னணியைச் சார்ந்தவன். எமது முன்னணியின் மத்தியக் குழுவிலோ அல்லது அரசியல் உயர்பீடத்திலோ 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்க வேண்டும் என்ற

முடிவை எச்சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளவில்லை. எனவே, எனது மனச்சாட்சியின்படி எமது மக்கள் நலன்கருதி நான் வாக்களித்தேன். எவரிடமும் ஆலோசனை கேட்கவேண்டிய  அவசியமும் ஏற்பட்டிருக்கவில்லை.

 

கேள்வி:- பேரம் பேசலுக்குப் பின்னால் பல கோடிகள் புரளுவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் உங்களது கருத்து என்ன? 

பதில் :-  பேரம் பேசலுக்குப் பின்னால் பல கோடிகள் புரளுவதாகக்  கூறப்படுவது உண்மைதான். ஏனெனில், அரச உயர்மட்டத்தாராரோடு நான் பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது  பதுளை மாவட்டத்துக்கு மாத்திரமன்றி, நுவரெலிய மாவட்டம் உள்ளிட்ட எமது சமூகம் வாழும் அனைத்துப் பிரதேசங்களின் அபிவிருத்தி வேலைகளுக்கும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் கோடிக்கணக்கான நிதியொதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு பேரம் பேசினேன்.

நான் பணத்துக்கு அடிமையானவன் கிடையாது. கடந்த காலங்களில்  பெருமளவான அரச நியமனங்களை எமது இளைஞர், யுவதிகளுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றே ன்.ஏனையவர்களைப் போல, அவற்றை நான் விலைக்கு விற்கவில்லை. கோடிக்கணக்கான நிதியொதுக்கீட்டின் ஊடாக, அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டேன். 

கேள்வி:-  தாங்கள் அரசுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் அமைச்சுப் பதவியாவது கிடைக்குமென்று எதிர்ப்பார்க்கின்றீர்களா?

பதில் :-  நான் ஆளுந்தரப்போடு பேரம் பேசும்போது அமைச்சுப் பதவிகளையோ அல்லது வேறு சலுகைகளையோ எதிர்பார்க்கவில்லை. ஆனால்,  எமது மக்கள் நலன் சார்பான விடயங்களுக்கு, எனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு முன்னிலைப்படுத்தி வலியுறுத்தினேன்.

அதேவேளை, அமைச்சு பதவி ஒன்று கிடைக்குமாயின், அதனூடாக மக்களுக்கு அதிக சேவைகளை மேற்கொள்ள முடியும். எனவே அமைச்சுப் பதவி கிடைத்தால் அதை எனக்கு தேவையில்லையென்று நான் ஏன் சொல்ல வேண்டும்.

கேள்வி:- தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து நீக்கப்பட்டதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் உங்களது கருத்து என்ன?   

பதில் :-   இதைப்பற்றி நான் இம்மியும் அலட்டிக்கொள்ளவில்லை. இவ்வாறான முடிவுகள் மேற்கொள்ளப்படுமென்று தெரிந்தேதான்  20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன்.

கேள்வி:-  முன்னாள் அமைச்சர் திகாம்பரம், நீங்கள் அரசுக்கு ஆதரவளித்ததைக் கொச்சைப்படுத்தி காட்டிக்கொடுத்தமை பற்றி விமர்சித்துள்ளாரே, அது குறித்து  என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில் :-  நம்பிக்கைத் துரோகம், முதுகில் குத்துவது போன்ற விடயங்களைப் பற்றிப் பேசுவதற்கு திகாம்பரத்துக்கு எந்த அருகதையும் கிடையாது. மத்திய மாகாண சபையினூடாக ஓர் அரசியல் முகவரியை ஏற்படுத்திக்கொடுத்த அமரர் பெ. சந்திரசேகரனின் முதுகில் குத்தியவர்தான் திகாம்பரம்.

முதலில் அவரது முதுகில் குத்திய திகாம்பரம், அதன் பின்பு மஹிந்தவின் முதுகிலும் பின்பு ரணிலின் முதுகிலும் குத்தியதோடு தற்போது  ஆளுந்தரப்போடு இணைவதற்கு முயற்சித்து வருகிறார்.

தற்போது ஆளுந்தரப்போடு இணைவதற்கு இவரால் மேற்கொள்ளப்பட்ட பேரம் பேசலில் ஒரு பிசகல் ஏற்பட்டது. இவர் எதிர்பார்த்தது நடந்திருந்தால் இவரால் முதுகில் குத்தியவர்களின் பட்டியிலில் சஜித் பிரேமதாஸவும் உள்வாங்கப்பட்டிருப்பார். 

டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அனைவரும் ஆளுந்தரப்புடன் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.  இதற்கு நான் மட்டும் விதிவிலக்க. மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு அடுத்ததாக,

மலையக மக்கள் முன்னணியே இரண்டாம் சக்தியாகவிருந்தது. ஆனால், கூட்டணி கூட்டணி என்று கூறிக்கொண்டு மிகவும் கபடத்தனமாக புற்றுநோயைப் போல் எமது பலத்தை சிறிது சிறிதாக குறைத்த பெருமை அவரையே சாரும்.

மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களையும்  அபிமானிகளையும்   எமது தொழிற்சங்கத்தின் அங்கத்தவர்களையும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தனது அமைப்போடு இணைத்துகொண்ட செயற்பாட்டை மேற்கொண்டவர் அவர்.

கூட்டணியோடு இணையாமல் இருந்திருந்தால், மலையக மக்கள் முன்னணி தனது பலத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கும். இவ்விடயம் இன்றும்கூட மலையக மக்கள் முன்னணியினரால் மிகுந்த ஆதங்கத்தோடும்  விசனத்தோடும் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

ஒருவருக்கு எதிராக மற்றவரை மூட்டிவிடும் குள்ளநரித்தனமான செயற்பாடுகளை, கடந்த காலத்தில் நான் பார்த்தேன். மலையக மக்கள் முன்னணி இன்று பகடைக்காயாக மாறியிருக்கியிருக்கின்றது. இதிலிருந்து, இக்காலம் தாழ்த்திய நிலையிலாவது நாம் விடுபட வேண்டும் என்பதே, எனது நிலைப்பாடாகும். 

ஒவ்வொரு வேட்பாளரையும் தத்தமது செயற்பாட்டின் ஊடாகவே மக்கள் அங்கிகரிக்கின்றனர். இதற்கு கண்டியில் வேலுகுமார் எம்.பியின் வெற்றியும் இரத்தினபுரியில் வெற்றி பெறாவிட்டாலும் 37,000 வாக்குகளைப் பெற்ற சந்திரகுமாரும் சிறந்த முன்னுதாரணங்களாவர்.

கேள்வி:- கட்சியின் தீர்மானத்தையும் மீறி அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்தமைக்கு எதிராக, மலையக மக்கள் முன்னணி உங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்து உங்களது கருத்து என்ன?

பதில் :-  முறையாக இயங்கும் ஒவ்வொரு ஸ்தாபனமும் இவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது முறையாகும். அந்த வகையில், சிறந்த நிர்வாகக் கட்டமைப்பைக்கொண்ட மலையக மக்கள் முன்னணி, இவ்வாறான முடிவை மேற்கொண்டதை நான் பிழையாகக் கருதவில்லை.

ஒரு சந்தர்ப்பத்தில், எமது தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணனின் மகனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் போது அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப் பட்டார்.  அதன் பின்பு அவர் அளித்த விளக்கத்தைக் கட்சி ஏற்றுக் கொண்டது. அவ்வாறான முடிவை எனது விளக்கத்தின் பின்பும் எமது அமைப்பும் எடுக்கும் என்று நான் கருதுகின்றேன்.

கேள்வி:- மலையக மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்ட அனுஷா சந்திரசேகரனோடு இணைந்து புதிய அமைப்பொன்றை  உருவாக்கும் யோசனைகள்  உண்டா?

 

பதில் :- நிச்சயமாக இல்லை. இக்கூற்றில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது. ஆனால், அவ்வாறான ஒரு முடிவு மேற்கொள்ள நான் நிர்ப்பந்திக்கப்பட்டால், அப்போது இதனை பற்றியும் யோசிக்கலாம்.

கேள்வி:- மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்படல் வேண்டுமென்ற ஜனாதிபதிக்கு அனுப்பபட்டுள்ள மனுவொன்றில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டது பெரும் தவறு என மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளதே இதனைப் பற்றி கூறுவீர்களா?

பதில் :- 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்தவன் என்ற வகையில், ஆளும்தரப்பு உறுப்பினராக நான் முத்திரை குத்தப்பட்டுள்ளேன். அவ்வகையில், விரும்பியோ விரும்பாமலோ இதில் ஒப்பமிட வேண்டும் என நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் கையொப்பம் இட்டனர் என்பதை நீங்கள் அவர்களிடமே கேட்க வேண்டும். எமது தமிழ் இளைஞர்கள் பல தசாப்தங்களாக பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

கொள்கை, வீரம், தன்மானம் போன்ற உணர்ச்சிமிக்க வீர வசனங்களை பேசுபவர்கள் எமது  இளைஞர்களின் விடுதலைக்காக துமிந்த சில்வாவின் விடயத்தை ஒரு பேரம் பேசும் துரும்பாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X