Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூக்கணாங்கயிறு அறுந்த மாடுகள், அது இணைக்கப்பட்டுள்ள வண்டிலை விட்டு அல்லது தாம் போக வேண்டிய பாதையை விட்டு விலகித் தறிகெட்டு ஓடுவது போல, முஸ்லிம் மக்களுக்கான அரசியல் ஓடிக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் அரசியல்வாதிகளை வழிப்படுத்தவும், நெறிப்படுத்தவும், வெளியில் இருந்து அழுத்தம் கொடுத்து கேள்வி கேட்கவும் யாருமில்லாத காரணத்தினால், தாம் விரும்புகின்ற திசைகளில் எல்லாம் அவர்களது அரசியல் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால் சமூகம் இழந்த, இழந்து கொண்டிருக்கின்ற விடயங்கள் ஏராளம்.
இந்த பத்தியில் முஸ்லிம்களுக்கான அரசியல் என குறிப்பிடப்படுவது,
முஸ்லிம் கட்சிகளின் அரசியலை மட்டுமல்ல, முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல், பெருந்தேசியக் கட்சிகளில் உள்ள முஸ்லிம் எம்.பிக்கள் அரசியல் வாதிகளின் அரசியல் மற்றும் சிறு அணிகளாக உருவெடுக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் எல்லாவற்றையும் உள்ளடக்கியே இந்த சொல்லாடல் இப்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றது.
என்னதான் இலங்கையர் என்றும், இனப் பாகுபாடுகளைக் கடந்த பார்வை, சமத்துவம், எனவும் பேசிக் கொண்டாலும், நிஜமாகப் பார்த்தால் நமது நாட்டில் சிங்கள மக்களுக்கு என்று ஒரு அரசியல் இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு என்று அரசியல் இருக்கின்றது.
தமிழ் மக்களின் அரசியலை வடக்கு, கிழக்கிற்கான அரசியல் கொழும்பு மைய தமிழர் அரசியல் என உப பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம். அதேபோல,
மலையக மக்களுக்கான அரசியல் ஒன்று பெயரளவில் மட்டும் இருக்கின்றது.
இந்த அரசியல் சக்திகளில் பெரும்பான்மைச் சமூகத்தை மையப்படுத்திய சிங்கள அரசியலுக்கு ஒரு அடிப்படை திட்டமும் நோக்கமும் இருக்கின்றது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அதிலிருந்து விலகிச் செல்ல முடியாது. அப்படிச் செல்ல முயன்றால், வெளியில் இருந்து மூக்கணாங்கயிறு இறுக்கப்படும் என்பது யாவருக்கும் தெரியும்.
சிங்கள பௌத்த நலன்களை பாதிக்கக்கூடிய அரசியல் நகர்வுகளை யார் எடுத்தாலும், அதனை அந்தச் சமூகத்தில் உள்ள அழுத்தக் குழுக்கள் வலுவாகத் தட்டிக் கேட்பதைக் கண்டிருக்கின்றோம். கொழும்பு மற்றும் களனி உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகங்கள், புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் சிங்கள மக்கள் என இதற்கு நீண்டதொரு பட்டியல் இருக்கின்றது.
பெரும்பான்மைச் சமூகத்தின் நலன்களை இரண்டாம் பட்சமாக்கும் முடிவுகளை ஒரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிதான் எடுத்தாலும், அடுத்த கணமே மகா நாயக்க தேரர்கள், பௌத்த பீடங்கள் அதனைச் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.
அழுத்தம் கொடுக்கவும், உறைக்கச் சொல்வதற்கும் அவர்கள் நல்ல நேரம் பார்ப்பது கிடையாது.
இந்த நிலைமை சிங்கள சமூகத்தை விடவும் தமிழ்ச் சமூகத்தில்தான் வெளிப்படையாகத் தெரிகின்றது. அதற்காக, பெரும்பான்மைச் சமூகம் தூங்கிக் கொண்டிருக்கின்றது என்று கருத முடியாது.
தமிழ்ச் சமூகத்தில் எந்தளவுக்கு அழுத்தக் குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை உலகமே பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. அச்சமூகத்தில் கவிஞர்கள். எழுத்தாளர்கள் அழுத்தக் குழுக்களாக இருந்த காலமுண்டு. ஒரு கோணத்தில் பார்த்தால் சில காலம் புலிகளும் இதுபோல செயற்பட்டதாக சொல்லப்படுவதுண்டு.
இப்போது யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்கள், புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், விடுதலைப் போராட்டத்துடன் தொடர்பில் இருந்து
புது அவதாரம் எடுத்தவர்கள், கல்வியியலாளர்கள் தொடக்கம் சில போதுகளில் சாதாரண மக்கள் கூட தமிழர் அரசியலை நெறிப்படுத்த வீதிக்கு இறங்குகின்றனர்.
இது விடயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் இரு தரப்பினர். ஒன்று மலையக தோட்டப்புற மக்கள். இரண்டாவது வடக்கு, கிழக்கிலும் அதற்கு வெளியிலும் வாழ்கின்ற ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்கள் ஆவர்.
இலங்கைச் சூழலில் பௌத்த மக்கள் மைய அரசியலைக் கட்டுப்படுத்தும்
பலத்தை முக்கியமான தேரர்கள், பௌத்த பீடங்கள் கொண்டுள்ளன. கிறிஸ்தவ, கத்தோலிக்க சமூகத்தில் அரசியல் ரீதியான அமைப்பாக்கம் ஒன்று இல்லாவிட்டாலும், ஆன்மீக ரீதியான கட்டுக்கோப்பு இருப்பதைக் கடந்த சில வருடங்களாகக் காண்கின்றோம்.
ஆனால், முஸ்லிம் சமூகத்தில் மேற்குறிப்பிட்ட எந்த தரப்பினரும் ஒரு அழுத்தக் குழுவாக இதுவரை இயங்கவில்லை என்பது பெருங்குறையாகும்.
முஸ்லிம் கட்சிகளின் அரசியல்வாதிகளும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமக்கு விரும்பியதை, தம்முடைய கட்சிக்குப் பொருத்தமானவை ஆளுக்கொரு கோணத்தில் செய்து கொண்டு போகின்றார்களே தவிர, இலங்கை முஸ்லிம்களுக்கான பொதுவான அரசியல் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவில்லை.
அதேபோன்று, எந்தக் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவரோ, பாராளுமன்ற உறுப்பினரோ தவறிழைத்தால், அதனைச் சுட்டிக்காட்டி அவரை நெறிப்படுத்துவதற்கான எந்த ஏற்பாடும் முஸ்லிம் சமூகத்திற்குள் கிடையாது.
முஸ்லிம்களின் பிரச்சினை, அபிலாஷை, அடுத்த இருபது வருடங்களுக்கான திட்டம் ஒன்று ஒட்டுமொத்த சமூகத்திடமும் இருக்க வேண்டும். அதற்கான செயல்படுத்தல் திட்டத்திற்கு அமைவாக செயற்படாத அரசியல்வாதி யாராக இருந்தாலும், அவரைத் தட்டிக் கேட்பதற்கான அருகதையும், தகுதியும் தைரியமும் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட அழுத்தக்குழுக்கள் நமது நீண்டகால தேவையாக உள்ளன.
முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் சமூகம், பல்கலைக்கழக சமூகம், படித்தவர்கள் மார்க்க அமைப்புக்கள் ஒரு பொதுவான அழுத்தக் குழுவாக உருவாகி, முஸ்லிம்களுக்கான அரசியலின் மூக்கணாங்கயிற்றைத் தேவையான போது இறுக்கிப் பிடிக்கத் தவறி விட்டன.
குறிப்பாக, தனித்துவ அடையாள அரசியலின் வழிவந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளை நெறிப்படுத்துவதிலும் அரசியல்வாதிகளைத் தட்டிக் கேட்பதிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழம் உள்ளடங்கலாகப் பல்கலைக்கழக முஸ்லிம் விரிவுரையாளர்கள். மாணவர்களை உள்ளடக்கிய கல்விச் சமூகம் தனது
பணியை நிறைவேற்றவில்லை.
அரசியலுக்காகப் பள்ளிவாசல்களும் சிலபோது சமய போதகர்களும் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், எல்லாக் கட்சிகளிலும் உள்ள முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்கள் தவறிழைத்த போது, பிரதேச ரீதியாக உள்ள பள்ளிவாசல்கள் முதற்கொண்டு ஜம்மியத்துல் உலமா சபை வரையான மதக் கட்டமைப்புக்கள் தட்டிக்கேட்டு அவர்களை வழிப்படுத்த
தவறி விட்டன.
பணத்துக்காக, பொருளுக்காக, போலி வாக்குறுதிக்காக, கட்சிப் பாடலுக்காக வாக்குப் போடும் ஒரு மோசமான கலாசாரம் குறிப்பாக, கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் உருவெடுத்துள்ள பின்னணியில், முஸ்லிம் கட்சியின் எம்.பியோ, பெரும்பான்மைக் கட்சியொன்றின் எம்.பியோ யார் தறிகெட்டு ஓடினாலும், தடுத்து நிறுத்த முன்வராத ஒரு நிலைக்குள் முஸ்லிம்கள் மாறி விட்டிருக்கின்றனர்.
இதுதான் நமது அரசியல் இப்படித்தான் நீங்கள் செயற்பட வேண்டும் என்று அழுத்திச் சொல்வதற்கு ஆள் இல்லாத காரணத்தால் முஸ்லிம் கட்சிகளின் அரசியல்வாதிகளும் சரி, என்.பி.பி. போன்ற பெருந்தேசியக் கட்சிகளின் முஸ்லிம் எம்.பிக்களும் சரி, தங்களுக்கு பிடித்தமான அரசியலைச் செய்து கொண்டிருப்பதைப் பட்டவர்த்தனமாகக் காண்கின்றோம்.
மாடுகள் தான் வண்டில்களை இழுத்துச் செல்கின்றன. மாடுகளை நம்பித்தான் வண்டிலில் அமர்ந்திருப்பவர்களின் பயணத்தின் இலக்கை அடைவதற்கான சாத்தியங்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்பது அடிப்படையாகும்.
ஆனால், மாடுகள் தானாக - சரியான, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணிக்காத போது, புல்லைக் காண்கின்ற, வைக்கோலைக் காண்கின்ற திசையை நோக்கி அல்லது இலக்குத் தவறிப் பயணிக்கும் மாடுகளை தம்பாட்டில் விட்டு விட முடியாது.
அவ்வாறான நிலைமைகளின்போது, அந்த வண்டிலில் பயணிப்போருக்கு இரண்டு தெரிவுகள் இருக்கும்.
ஒன்று, மூக்கணாங்கயிற்றை இழுத்துப் பிடித்து, சரியான வழியில் மாடுகளை வழிநடத்த வேண்டும். அதற்கான கை வித்தை மாட்டுக்காரனுகளுக்கு
(அதாவது மக்களுக்கு) தெரிந்திருக்க வேண்டும்.
இரண்டாவது தெரிவு, அந்த மாடுகளை அப்படியே வண்டிலில் இருந்து கழற்றி விட வேண்டும் அல்லது நபர்கள் (மக்கள்) அதிலிருந்து இறங்கிவிட வேண்டும். இது முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் பொருந்தும்.
மூக்கணாங்கயிற்றை தூக்கி வீசி விட்டு அல்லது அதன் பிடியை நழுவ
விட்டுவிட்டு, மாடுகள் தங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும் என
முஸ்லிம்கள் இனியும் நம்பிக் கொண்டிருக்க முடியாது. எல்லா அரசியல்வாதிகளையும் கூட்டாகக் கட்டி வழிநடத்தக் கூடிய மூக்கணாங்கயிறு ஒன்று இப்போது அவசரத் தேவை என்பதை இனியாவது முஸ்லிம் சமூகம் உணர வேண்டும்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago