2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

மு.கா: பட்டம் பதவிகளுக்கான ஏணி

Thipaan   / 2016 மார்ச் 30 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்சியொன்றின் வருடாந்த மாநாடு என்பது, அக்கட்சியின் மிகவும் முக்கியமான உள்வாரிக் கூட்டமாகும். ஏனெனில், அங்கு தான் முக்கியமான அரசியல் முடிவுகள், தீர்மானங்கள் ஆகியவை உறுப்பினர்களால் உறுதிப்படுத்தப்படுகின்றன. முக்கிய பதவிகளுக்கும் அங்கத்தவர்களின் அங்கிகாரம் வழங்கப்படுகிறது.

எனவே, கட்சியொன்றின் மாநாடானது, கட்சிக் கொள்கைகளையும் யாப்பையும் மறுபரிசீலனை செய்வதற்காகவும் அங்கிகாரம் பெற்ற கொள்கைகளை அமுலாக்கும் வேலைத் திட்டங்களுக்கான, அங்கத்தவர்களின் அங்கிகாரத்தைப் பெறுவதற்காகவும் இருக்கும் இடமாகும்.

ஆனால், அம்பாறை மாவட்டத்தின் பாலமுனையில், கடந்த மார்ச் 19ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது மாநாட்டைப் பற்றிய ஊடகச் செய்திகளில், கொள்கைப் பிரச்சினைகள் தொடர்பாகவோ அல்லது அரசியல் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவோ எவையும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, மு.கா.வின் சில தலைவர்களிடையிலான சண்டையொன்றைப் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையுமே ஊடகங்களில் காணக்கூடியதாக இருந்தது.

அது, ஊடகங்களின் பிழையல்ல. மாறாக, அவை கட்சியின் இன்றைய உண்மையான நிலையையே பிரதிபலித்தன. அதேவேளை, மாநாட்டின் போது முக்கிய அரசியல் தீர்மானங்கள் எவையேனும் எட்டப்பட்டதாகவும் தெரிய வரவில்லை. தற்போது அரசியல் அரங்கில் முக்கிய விடயமாக அலசப்படும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக, மு.கா மாநாட்டில் ஏதாவது முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டதாவும் தெரியவரவில்லை.

தற்போது மு.கா.வுக்குள் நிலவும் சண்டையானது கட்சியை மேலுமொருமுறை பிளவுபடுத்திவிடுமோ என்ற பலத்த சந்தேத்தை, கட்சி உறுப்பினர்களிடையேயும் ஏனைய பொது மக்களிடையேயும் உருவாக்கியிருக்கிறது. கட்சியின் பிரதான இரு பதவிகளான தவிசாளர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகிய இரண்டை வகிக்கும் இருவரும் கட்சித் தலைவருடன் சண்டையில் ஈடுபட்டு இருப்பதே அவ்வாறு சந்தேகிப்பதற்கான பிரதான காரணமாகும்.

இந்தச் சண்டையைப் பற்றிய செய்திகள், சில வாரங்களாக சிறிது சிறிதாகக் கசியத் தொடங்கியிருந்தன. ஆனால்,
மு.கா.வின் 19ஆவது மாநாடு, அதனை உத்தியோகபூர்வமாகவே உறுதி செய்துவிட்டது. கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி ஆகிய இருவரும், மாநாட்டின் உத்தியோகபூர்வ அமர்வில் கலந்துகொள்ளாமையும் தலைவர் ரவூப் ஹக்கீம், மாநாட்டு மேடையிலேயே அவ்விருவரையும் விமர்சித்தமையும், இந்தச் சண்டை இரகசியமற்றது என்பதை எடுத்துக் காட்டியது.

ஊடகங்களில் வெளியான செய்திகளின் படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்ட மாநாட்டின் முதல் அமர்வான வைபவ அமர்வில் கலந்துகொண்ட தவிசாளர் பஷீர் சேகுதாவூத், பின்னர் வெளியேறியுள்ளார். பொதுச் செயலாளர் ஹசன் அலி மொத்தமாக இரண்டு அமர்வுகளையும் பகிஷ்கரித்துள்ளார்.

இவ்விருவரினதும் ஆதரவாளர்கள், மாநாட்டின் போது பிரச்சினைகளை உருவாக்குவார்கள் என மாநாட்டுக்கு முன்னர் தமிழ்மொழி மூல இணையத்தளங்கள் சில, குறிப்பாக முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வரும் இணையத்தளங்கள் எதிர்வு கூறின. ஆனால், மாநாட்டில் அவ்வாறு கட்சித் தலைவர் அசௌகரித்துக்கு உள்ளாகும் வகையிலான எதுவும் நடைபெறவில்லை.

தாம் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வரும் என்ற பயத்தினாலேயே மு.கா தலைவர், ஜனாதிபதியையும் பிரதமரையும் மாநாட்டுக்கு அழைத்தார் என மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருந்து, அப்பதவியை அண்மையில் இராஜினாமாச் செய்த அசாத் சாலி கூறியிருந்த போதிலும், ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துகொள்ளாத உத்தியோகபூர்வ அமர்விலும் எவ்வித சலசலப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

ஆனால், உண்மையிலேயே கட்சித் தலைவர் ஹக்கீமுக்கு எதிராக கட்சிக்குள் ஒரு சதி நடந்திருப்பதாகவும் தெரிகிறது. ஏற்கெனவே ஊடகங்கள், அது தொடர்பாக செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன. அந்த சதியில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஒருவரே, அது தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஹக்கீமிடம் கொடுத்திருப்பதாக கூறப்படும் செய்தி உண்மையாக இருந்தால், கருணா அம்மான், புலிகளிடமிருந்து பிரிந்த காலத்தில் நிலவியது போன்று, யார் யாரை நம்புவது, யாரை நம்பாதிருப்பது என்ற நிலைமை மு.கா.வுக்குள் உருவாகியிருக்கிறது போல்த் தான் தெரிகிறது.

வீடியோ ஆதாரங்களின் பிரகாரம், இரண்டு மௌலவிகள் கட்சியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், கட்சியின் உயர்பீட உறுப்பினர் எனவும் செய்திகள் கூறின. பொதுச் செயலாளர் ஹசன் அலியும் இடைநிறுத்தப்பட்டு இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

கட்சித் தலைவர் ஹக்கீம், சமூகப் பிரச்சினைகளின் போது பொறுப்புடன் செயற்படவில்லை என்று அர்த்தப்பட அவருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேவேளை, தாம் வகிக்கும் பொதுச் செயலாளர் பதவிக்குரிய சில அதிகாரங்களை ஹக்கீம் பறித்துக்கொண்டார் என்றும் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மாநாட்டுக்கு முன்னர் மீண்டும் வழங்கப்படும் என அவர் தமக்கு வாக்குறுதியளித்தார் என்றும் அது நிறைவேறாத காரணத்தினாலேயே தாம் மாநாட்டை பகிஷ்கரித்ததாகவும் மாநாட்டுக்குப் பின்னர், ஊடகங்களிடம் ஹசன் அலி கூறியிருந்தார்.

அவர் கூறுவதில் உண்மை இருக்கலாம். ஆனால், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த சண்டைக்கான அடிப்படைக் காரணம், இவற்றை விட கட்சிக்குக் கிடைத்த இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் என்பவை அனேகமாக எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்த உண்மையை மறைப்பதற்கே பலர் தத்துவம் பேசுகிறார்கள். தேசியப் பட்டியல் என்பது மு.கா.வில் எப்போதும் சண்டைக்குரிய விடயமாகவே இருந்து வந்துள்ளது. இம்முறையும் கிடைத்த இரண்டு ஆசனங்களைக் கேட்டு, ஆரம்பத்தில் பலர், ஹக்கீமைத் தேடிப் படையெடுத்தனர்.

முஸ்லிம் அரசியலில் பிரதேசவாதமும் ஓரளவு ஆதிக்கம் செலுத்துவதால், பலர் தமக்கு அல்லது தமது பிரதேசத்தைச் சேர்ந்தவருக்கு அந்த ஆசனங்கள் கிடைக்க வேண்டும் எனக் கருதினர். சிலர், வட மாகாண முஸ்லிம்களுக்காக அவை வழங்கப்பட வேண்டும் என்றனர். வேறு சிலர் வரப்போகும் அரசியலமைப்பு திருத்த விடயத்தில் முஸ்லிம்களுக்காக வாதாடக்கூடிய ஒருவர் வேண்டும் என்றனர். தாம் அல்லது ஏதாவது ஒரு வகையில் தம்மைச் சார்ந்தவர் நியமிக்கப்பட வேண்டும் என்பதே இந்தக் கோரிக்கைகள் அனைத்திலும் உள் நோக்கமாக இருந்தது என்பதும் அனைவருக்கும் தெரியும்.

எந்தவொரு கட்சியிலும் இடம்பெறாத வகையில், தற்காலிகமாக இருவர் தேசிய பட்டியல் எம்.பி பதவிகளுக்காக நியமிக்கப்பட்டதும், இந்தச் சர்ச்சைக்கு உடனடித் தீர்வு இல்லாமை காரணமாகவே பின்னர், தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் ஹபீஸ், கடந்த ஜனவரி மாதம் எம்.பி பதவியை இராஜினாமாச் செய்தார். அவருக்குப் பதிலாக முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் நிமிக்கப்பட்டார். மற்றைய ஆசனத்துக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட
எம்.எச்.எம்.சல்மான், இன்னமும் பதவி விலகவும் இல்லை மற்றொருவர் நியமிக்கப்படவும் இல்லை. இரண்டு ஆசனங்களுக்குமான சண்டை இன்னமும் ஓய்ந்த பாடுமில்லை.

மாநாட்டின் போது ஹக்கீம், சேகுதாவூத்தையும் ஹசன் அலியையும் தாக்கிப் பேசியிருக்கிறார். அவ்வாறிருந்தும் பலர் மாநாட்டுக்கு முன்னர் கூறியது போல், எவரும் ஹக்கீமை எதிர்த்துப்பேசவில்லை. மாநாட்டில் பிரச்சினை ஏற்படவுமில்லை. இது கட்சிக்குள் ஹக்கீம் பலமாக இருக்கிறார் என்பதையே எடுத்துக்காட்டுகிறது என ஊகிக்கலாம்.

இடதுசாரி கட்சிகளைப் போலன்றி, குர்ஆனை அடிப்படையாகக் கொண்ட கட்சி யாப்பை வைத்திருப்பதாகக் கூறப்படும் மு.கா.வின் வரலாற்றில் இடம்பெற்ற உட்கட்சி சண்டைகள் அனைத்தும், பட்டங்கள் பதவிகளுக்குமான சண்டைகளே. நாத்திகம் பேசும் இடதுசாரி கட்சிகளில் அவ்வாறான நிலைமை மிகவும் குறைவாகவே உள்ளது.
உதாரணமாக, லங்கா சம சமாஜக் கட்சியிலிருந்து, 1939ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி பிரிவதற்கு, சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின் - டுரொட்ஸ்கி இருவருக்கிடையில் இடம்பெற்ற தத்துவார்த்த மோதலே காரணமாகியது.

1963ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க என்.சண்முகதாசனைத்
தூண்டியது, சீனாவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான தத்துவார்த்த மோதலே. 1964ஆம் ஆண்டு, 21 அம்சக் கோரிக்கைகள் தொடர்பான மோதலை அடுத்தே, சம சமாஜக் கட்சியிலிருந்து நவ சம சமாஜக் கட்சி பிரியக் காரணமாகியது. புரட்சிக்கான ஏற்பாடுகள் இல்லை என்று சண்முகதாசனைக் குற்றஞ்சாட்டியே, 1965ஆம் ஆண்டு சண்முகதாசனிடம் இருந்து பிரிந்து, மக்கள் விடுதலை முன்னணியை விஜேவீர தோற்றுவித்தார்.

ஆனால், இலங்கையில் முஸ்லிம் அரசியலின் நிலைமை அந்த நாத்திக கட்சிகளிலிருந்து வேறுபடுகிறது. முதலாவதாக 1989ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா.வுக்கு கிடைத்த ஓர் ஆசனத்தை, அந்த மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இரண்டு ஆண்டுகள் வீதம் அந்த மூன்று பிரதேசங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த முடிவின் படி ஹிஸ்புல்லாஹ் விலகாததால், 1991ஆம் ஆண்டு முதலாவது பதவிப் பிரச்சினை உருவாகியது.

மு.கா ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவை அடுத்துத் தான், ஏனைய பதவிச் சண்டைகள் அனைத்தும் ஏற்பட்டன. மாவனெல்லைக்கு அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அஷ்ரப் மரணமடைந்தவுடன் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு அந்தஸ்த்து பற்றி பிரச்சினை ஏற்பட்டது. அவர்கள், பேரியல் அஷ்ரபை அரசியலுக்கு கொண்டு வந்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வு தேட முயன்றனர். அதனால், கட்சி பிளவுபட்டது. ஹக்கீம் மு.கா தலைவரானார். பேரியல், அவரது கணவரான அஷ்ரபின் மற்றொரு கட்சியான தேசிய ஐக்கிய முன்னிணியின் (நுஆ) தலைவியானார்.அவருக்கு கெபினட் அமைச்சர் பதவி கிடைத்தது.

சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில், ரிஷாட் பதியுதீன் ஏதோ ஒரு காரணத்துக்காக ஹக்கீமிடமிருந்து பிரிந்துச் சென்றார். ஆனால், அது அரசியல் கொள்கை தொடர்பான பிரச்சினையாக எமது நினைவில் இல்லை. பின்னர் அவர் தொலைக்காட்சியில் தோன்றி ஹக்கீமை விமர்சித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரும் ஒரு கட்சியை உருவாக்கினார். அவருக்கும் இப்போது ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி கிடைத்து வருகிறது.

அப்போது ஹக்கீமுடன் இருந்த ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், 2003ஆம் ஆண்டு தமக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக பிரிந்து சென்று, மற்றொரு கட்சியை உருவாக்கினார். அவருக்கும் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வரும் வரை கெபினட் அமைச்சர் பதவி கிடைத்தது.

பின்னர், தேசிய பட்டியல் பிரச்சினையொன்றின் விளைவாக, ஜனநாயக ஐக்கிய முன்னணி (துஆ) உருவாகியது. அதன் தலைவராக இருந்த நஸீர் அஹ்மத், பின்னர் தக்க தருணத்தில் மீண்டும் மு.கா.வில் இணைந்து கொண்டார். அது அவருக்கு நட்டம் போகவில்லை. அவர் இன்று, கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

பட்டம் பதவிகளுக்கான தமது தகுதி, தகைமை எதுவானாலும் எம்.பி, அமைச்சர், மேயர் பதவி கிடைக்கதாவர்கள் அனைவரும் பிரிந்து போவோம், கட்சியை உடைப்போம் என்று கூறும் ஒரு நிலைமை நீண்ட காலமாக மு.கா.வுக்குள் நிலவி வருகிறது. பலர் அதனை செய்தும் காட்டுகிறார்கள். மு.கா.விலிருந்து ஆளும் கட்சியில் சேர்ந்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது உறுதி என்றால் பிரிந்து செல்கிறார்கள்.

இரு பெரும் கட்சிகளில் ஒன்றில் இருக்கும் போது மு.கா.வைப் பார்த்து இனவாதக் கட்சி என்று கூறியோர்களும் பட்டம் பதவிகள் கிடைக்கும் நிலை இருந்தால் அக்கட்சியில் சேர்கிறார்கள்.

மு.கா.வும் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்காக பெரிதாக ஏதும் குரல் கொடுத்ததாகக் கூறுவதற்கில்லை. ஆனால், அது முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான முஸ்லிம் கட்சியாக ஏனைய தேசிய கட்சிகளாலும் வெளிநாடுகளாலும் கருதப்படுவதால், அக்கட்சித் தலைவர்களுக்கும் அமைச்சர் பதவிகள் 'ரெடி மேட்' ஆக இருக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .