Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2016 மே 07 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து மீண்டும் புகைச்சல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. வழக்கம்போலவே, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் சுரேஷ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக, அதாவது இரா.சம்பந்தனுக்கு எதிராகவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராகவும், குரலை எழுப்பியிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட மே தினப் பேரணி, இணுவிலில் ஆரம்பித்து, மருதனார்மடத்தில் முடிவடைந்ததையடுத்து, மே தினக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசுக் கட்சி மாத்திரமே பங்கேற்றிருந்தது. ஏனைய கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்தநிலையில் தான், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனித்துச் செயற்பட முனைவதாகவும் கூட்டமைப்பை உடைக்க முனைவதாகவும் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
வழக்கமாக கூட்டமைப்பு நடத்தும் கூட்டங்களுடன் ஒப்பிடும் போது, மருதனார்மடத்தில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தில், அதிகளவானோர் பங்கேற்றிருந்தனர் என்பது முக்கியமான விடயம். யாழ்ப்பாணம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தில் மிகப்பெரிய மே தினக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
1987ஆம் ஆண்டில் நல்லூரிலும் அதற்குப் பின்னர், 1990 களின் தொடக்கத்தில், யாழ்.பல்கலைக்கழக மைதானத்திலும் விடுதலைப் புலிகள் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட மே தினக் கூட்டங்கள் மற்றும் மிக நீண்ட பேரணிகளில், இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதற்குப் பின்னர், இதுவரையில் ஆயிரக்கணக்கானோரை மே தின நிகழ்வுகளில் ஒன்று திரட்டுவது யாராலுமே சாத்தியமாகவில்லை. வேலைவாய்ப்பு, நிதியுதவி என்று வாகனங்களில் ஆட்களை ஏற்றி ஊர் ஊராகப் பவனிவரச் செய்த ஈ.பி.டி.பியாலோ, வேறெந்தக் கட்சியாலோ, அதுபோன்ற மே தின நினைவுகளை நினைத்தும் பார்க்க முடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2002ஆம் ஆண்டு மருதனார்மடத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் கூட மைதானத்தின் சிறுபகுதியில் தான் ஆட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தனர். அதற்குப் பின்னர், கூட்டமைப்பு நடத்திய மே தினங்களை விட, இம்முறை நடத்திய மே தின நிகழ்வில் ஒப்பீட்டளவில் அதிகமானோரைக் காண முடிந்தது. ஆனாலும், இந்த மே தினப் பேரணியில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் என்று எதையுமே காணவில்லை. தனியே தமிழ் அரசுக் கட்சி மாத்திரம் பங்கேற்றது. அந்தக் கட்சியின் சார்பில் தெரிவான நாடாளுமன்ற, மாகாணசபை, உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டனர்.
இந்தச் சிக்கலினால் தானோ, தெரியவில்லை, முதலமைச்சர் விக்னேஸ்வரனும், உடல்நிலை சரியில்லை என்று கொழும்பில் போய் இருந்து கொண்டார். தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் இரா. சம்பந்தனும், அந்தக் கட்சியின் சின்னமான வீடு போன்று அமைக்கப்பட்ட ஓர் ஊர்தியில் தான்,இணுவிலில் இருந்து மருதனார்மடத்துக்கு பேரணியாக அழைத்து வரப்பட்டனர்.
ஏனைய கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே தமிழ் அரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில், கணிசமான ஆட்களைத் திரட்டி ஒரு பேரணியை கூட்டத்தை நடத்தியிருப்பது, கூட்டணிக் கட்சிகளுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சிலவேளை அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். தமிழ் அரசுக் கட்சி மெல்ல மெல்ல கூட்டமைப்புக்குள் தனிஆதிக்கத்தை வலுப்படுத்தி வருகிறது என்ற பங்காளிக் கட்சிகளின் வழக்கமான குற்றச்சாட்டையும், அச்சத்தையும், இந்த மே தினப் பேரணி மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம் என்று, வெளியிடப்பட்ட அறிக்கை கூட, தமக்கு காட்டப்படவில்லை என்று ஏனைய எல்லாக் கட்சிகளுமே தெரிவித்திருக்கின்றன. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், சுரேஷ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந்த பின்னர், தான் கூட்டமைப்புக்குள் பிளவுகள் வலுவாக வெளித் தெரிய ஆரம்பித்தன. கூட்டமைப்புத் தலைமையை சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாக விமர்ச்சித்ததுடன், கூட்டமைப்பின் கடந்தகாலச் செயற்பாடுகளில் தனக்குப் பங்கில்லாதது போன்றும், அவர் பேசத் தொடங்கினார்.
இந்த முரண்நிலையின் ஒரு வடிவமாகவே, தமிழ் மக்கள் பேரவையும் உருவாக்கப்பட்டது. மாற்று அரசியல் சக்தியாக உருவெடுக்கும் நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட இந்த தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தங்களைக் கொடுத்த போதிலும், ஏதோ ஒரு வகையில் அது வெறும் மக்கள் அமைப்பாக குறுகிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது, தமிழ் மக்கள் பேரவையின் அழுத்தங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குறைந்து போயிருக்கின்ற சூழலில் தான், மீண்டும், சுரேஷ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்புத் தலைமையுடன் சம்பந்தனுடன் நேரடியாக முட்டி மோதத் தொடங்கியிருக்கிறார்.
பொதுவாகவே இதுபோன்ற உள்முரண்பாடுகளை ஜனநாயகத்தின் பண்பு என்று விபரித்து விட்டு நழுவிக் கொள்ளுகின்ற இரா.சம்பந்தன், கடந்த மாத நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு காட்டமான பதிலை அளித்திருந்தார். அதற்குப் பின்னர், சுரேஷ் பிரேமச்சந்திரன் பதிலடி கொடுத்தாலும், சம்பந்தன் அதனைக் கண்டு கொள்ளவில்லை.
மே தின நிகழ்வுகளுக்காக சம்பந்தன் மீண்டும் யாழ்ப்பாணம் சென்றிருந்த நிலையில் தான், தமிழரசுக் கட்சி மீதும், கூட்டமைப்பின் தலைமை மீதும், காட்டமான விமர்சனங்களை சுரேஷ் பிரேமச்சந்திரன் முன்வைத்திருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், தமிழ் அரசுக் கட்சி தனிக்காட்டு ராஜாவாக, ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு புதியதல்ல. ஏற்கெனவே பலமுறை கூறப்பட்ட குற்றச்சாட்டுத்தான். அந்தக் குற்றச்சாட்டில் தவறு இருப்பதாகவும் கருத முடியாது.
கடந்த ஆண்டு இறுதியில், தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பங்காளிக் கட்சிகளை அரவணைத்துச் செயற்படுவோம் என்றும், கடந்தகாலத் தவறுகள் இனிமேல் நடக்காது என்றும், வாக்குறுதிகள் இரா. சம்பந்தனால் கொடுக்கப்பட்டன. அதற்குப் பின்னர், கொழும்பில் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. ஆனாலும், இறுதியான முடிவு எடுக்கப்படாமல் அந்தப் பேச்சுக்கள் முடிந்தன. மீண்டும், அதேவழியில் தமிழ் அரசுக் கட்சி செயற்படத் தொடங்கியிருக்கிறது. இந்த விடயத்தில் தமிழ் அரசுக் கட்சி எத்தகைய நியாயங்களை முன்வைத்தாலும், அது ஏற்புடையதாக இருக்காது.
அதேவேளை, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான விடயங்களை அனைத்தையும், சம்பந்தன் இரகசியமாகவே கையாள்வதாகவும், குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன். இது கூட உண்மையானது தான். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இதுவரையில் அதிகாரபூர்வமான எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படாத நிலையில், கூட்டாக இணைந்து செயற்படுவதில் எந்த வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை.
சம்பந்தனைப் பொறுத்தவரையில், சமஸ்டி, வடக்கு கிழக்கு இணைப்பு ஆகிய விடயங்களில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்பதை உறதியாகவே கூறி வந்திருக்கிறார். அவற்றுக்கு அப்பாற்பட்ட ஒரு தீர்வை நோக்கி அவர் நகர்கிறார் என்றால், அதனை இரகசியமான பயணம் என்று கூறலாம். அல்லது அவ்வாறானதொரு பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், குற்றம்சாட்டலாம். ஆனால், அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் எதுவும், முன்னெடுக்கப்படாத நிலையில், இரகசியமான விடயங்களைக் கையாள்வதாக குற்றம்சாட்டுவது பொருத்தமானதொன்றாகத் தெரியவில்லை.
அடுத்த விடயம், முக்கியமானது, கடந்த தேர்தலின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் எட்டப்படும் என சம்பந்தன் கூறியதை வைத்தே மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தனர் என்றும், தனியாக கட்சிகள் சார்பில் மக்கள் வாக்களிக்கவில்லை எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். தமிழ் மக்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை விரும்புகின்றனரே தவிர, அது, 2016ஆம் ஆண்டுக்குள் சாத்தியப்படும் என்று ஒருபோதும் நம்பவில்லை.
இரா.சம்பந்தன், இதனை ஒரு வாக்குறுதியாக முன்வைத்திருந்தாலும், இதற்காகத் தான் தமிழ் மக்கள் வாக்களித்தனர் என்று யாரையும் நம்பவைக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழ் மக்கள் வாக்களித்து வந்திருக்கிறார்கள். புலிகளின் காலத்தில் மட்டுமன்றி, அதற்குப் பின்னரும் வாக்களித்திருக்கிறார்கள். கட்சிகளுக்காக கூட்டமைப்புக்கு வாக்களிக்கவில்லை, சம்பந்தனின் ஒற்றை வாக்குறுதிக்காகத் தான் மக்கள் வாக்களித்தனர் என்றால், அவரை ஏதோ ஒரு உச்சத்தில் வைத்திருக்கின்றனர் என்றல்லவா பொருள்படும்.
2016இல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, சம்பந்தனின் நம்பிக்கை மட்டுமே. அதற்காக அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதில்லை என்று இங்கு கூறவரவில்லை. ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுத்த அந்த வாக்குறுதிக்காகத் தான், தமிழ் மக்கள் வாக்களித்தனர் என்பது மிகையானது.
தமிழ் மக்களின் காலம் காலமான நம்பிக்கையையும், அரசியல் நிலைப்பாட்டையும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மாற்றுவதற்கு முனையக் கூடாது. இனப்பிரச்சினைத் தீர்வானது 2016க்குள் சாத்தியப்படுவதில் எந்தளவுக்குச் சிக்கல்கள் இருக்கிறதோ, அதைவிடப் பெரிய சிக்கல்கள், கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள விரிசல்களைச் சரிப்படுத்துவதில், காணப்படுகின்றன. உள்முரண்பாடுகளில் சிக்கியுள்ள நிலையில், கூட்டமைப்பினால், யாரை நோக்கி அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்பது கூட அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு மறந்து போய் விடுகிறது.
தமக்குள் முட்டி மோதிக் கொள்வதிலேயே நேரத்தைச் செலவிடும் பங்காளிக் கட்சிகளால், பிரதான இலக்கு அநேகமாக மறக்கப்பட்டு விடுகிறது போலவே தோன்றுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago