Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 03 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முகம்மது தம்பி மரைக்கார்
'யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்பார்கள். எந்த வகையில் பார்த்தாலும், யானை பெறுமதியான மிருகமாகும். மனிதனுக்கு அடுத்த புத்திக்கூர்மையுள்ள விலங்குகளில் யானையும் ஒன்றெனக் கூறப்படுகிறது. இப்படியான ஒரு விலங்கினத்தின் அருமையும் பெருமையும் தெரியாமல், அவற்றை இன்று நாம் கொன்று கொண்டிக்கின்றோம். யானையை தனக்கு விரோதமான ஒரு விலங்கினமாக மனிதன் பார்க்கின்றான். இதன் விளைவால், இலங்கையில் யானைகள் இல்லாமல் போய்விடுமோ என்கிற ஒரு நிலை உருவாகியுள்ளது.
எமது நாட்டில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல், சில ஆண்டுகளாக மிகவும் உச்ச நிலையை அடைந்துள்ளது. இவற்றில் யானைகளால் கொல்லப்படும் மனிதர்களை விடவும், மனிதர்களால் கொல்லப்படும் யானைகளின் தொகை அதிகமாக உள்ளன. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்குக் குறையாத யானைகள், மனிதர்களால் கொல்லப்படுவதாக பத்தாண்டுகளுக்கு முன்னரான கணக்கெடுப்பொன்று கூறியது. ஆனால், பின்னரான காலப்பகுதிகளில் அந்தக் கணக்கு இன்னும் அதிகமானது. 2010ஆம் ஆண்டு 227 யானைகளும் 2011ஆம் ஆண்டு மட்டும் 255 யானைகளும் மனிதர்களால் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 2011ஆம் ஆண்டு யானைகளால் 48 மனிதர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால், 2012ஆம் ஆண்டு இந்தத் தொகை இன்னும் அதிகமானது. கிட்டத்தட்ட 300 யானைகள், மனிதர்களால் கொல்லப்பட்டன.
அநேகமாக காடுகளை விட்டு வெளியேறாமல் யானைகள் வாழ்ந்துவந்த காலங்களில், யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்களும் அவற்றினால் ஏற்படும் இழப்புகளும் மிகவும் குறைவாகவே இருந்தன. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் அழிக்கத் தொடங்கிய பின்னர், காடுகளிலிருந்து வெளியேற ஆரம்பித்த யானைகள், மனிதர்களை நேரடியாக எதிர்கொள்ளும் நிலைக்கு உள்ளாகின. அவ்வாறான வேளைகளில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்கள் உருவாகின. அந்த மோதல்கள் இன்று உச்சம் பெற்றுள்ளன.
யானைகளின் வாழ்விடங்களை மனிதன் அழிக்காத வரையில், மனிதனின் வாழ்விடங்களை நோக்கி யானைகள் அநேகமாக வந்ததில்லை. மனிதன் தனது சுயநலத்தை மட்டும் மனதில் கொண்டு, யானைகளின் வாழ்விடமான வனங்களை அழிக்கத் தொடங்கிய பின்னரே, மனிதன் வாழும் பகுதிகளை நோக்கி யானைகள் நகர ஆரம்பித்தன. யானைகள் வாழும் காடுகளை மனிதன் அழித்த பிறகே, தமக்கான உணவையும் நீரையும் தேடி யானைகள் வெளியில் வந்து அலையத் தொடங்கின. மனிதர்களின் பயிர்களையும் தானியங்களையும் யானைகள் உட்கொண்டன. இந்தத் தருணங்களில் எதிர்ப்படும் மனிதர்களை யானைகள் தாக்கின. இவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாத மனிதன், யானைகளை கொல்ல ஆரம்பித்தான்.
இலங்கையில் கடந்த 50 வருடங்களில் யானைகளின் தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் காலப்பகுதியில் மட்டும் 1,500 தொடக்கம் 3,000 யானைகள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி 5,879 யானைகள் இருந்ததாகக் கூறப்பட்டது. இதன்படி பார்த்தால் 5,000 மனிதர்களுக்கு 01 யானை எனும் விகிதத்திலேயே இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை உள்ளன. 19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் 12 ஆயிரம் தொடக்கம் 14 ஆயிரம் வரையிலான யானைகள் இருந்துள்ளன.
அநுராதபுரம், புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவில் யானைகள் கொல்லப்படுவதாகக் கூறப்படுகிறது.
உலகில் கணிசமான நாடுகளில் தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுகின்றன. ஆனால், இலங்கையில் தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவது என்பது மிகவும் அரிதாகும். யானைகள் தமது நெல்வயல்களையும் பயிர்களையும் இருப்பிடங்களையும் சேதப்படுத்துகின்றபோது கோபம் கொள்ளும் மனிதன், யானைகள் மீது தாக்குதல் நடத்துகின்றான்.
துப்பாக்கியால் சுடுதல், விசம் வைத்தல் மற்றும் மின்சாரம் மூலம் யானைகளை, மனிதர்கள் கொல்கின்றார்கள். இவை தவிர, யானைகளைக் கொல்வதற்கு கையாளப்படும் மற்றுமொரு வழிமுறை மிகவும் கருணையற்றதாகும். தமது வயல்வெளிகள் மற்றும் இருப்பிடங்களுக்கு யானைகள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யும்போது, அவற்றினைக் கொல்வதற்காக வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் மரக்கறிகளை, யானைகள் வரும் வழிகளில் மனிதர்கள் வைக்கின்றார்கள். குறித்த பழங்கள் மற்றும் மரக்கறிகளை யானைகள் உண்ணும்போது, அவற்றினுள் மறைத்துவைக்கப்படும் வெடிபொருள் வெடித்துச் சிதறுகின்றன. இதனால் யானையின் வாய்ப்பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன. இதனையடுத்து அங்கிருந்து தப்பிச் செல்லும் யானைகள் வாய்ப்பகுதியில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உணவை உட்கொள்ள முடியாமல் தவிக்கும். இப்படி, பல நாட்கள் வேதனைப்படும் குறித்த யானையானது, ஒருநாள் இறந்து போகும்.
திருக்கோவில் பிரதேசத்தில் இவ்வாறு வெடிபொருள் வைக்கப்பட்ட உணவை உட்கொள்ள முயற்சித்தமையினால், வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட்டு, உணவு உண்ண முடியாமல் அலைந்த யானையொன்றினை கடந்த வருடம் உயிருடன் காணக்கிடைத்தது. ஆயினும், பின்னர் அது இறந்து விட்டது.
வன விலங்குத் திணைக்களத்தின் திருக்கோவில் உப காரியாலயப் பிரதேசங்களுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த வருடம் ஒரு மாதத்தினுள் மட்டும் 05 யானைகள் இவ்வாறு வெடி பொருள்களினால் காயமடைந்து இறந்ததாக திருக்கோவில் உப காரியாலயத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார்.
இலங்கையிலுள்ள யானைகளில் சுமார் 70 சதவீதமான யானைகள் பாதுகாக்கப்படாத பகுதிகளிலேயே வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யானைகள் இவ்வாறு அதிகளவில் கொல்லப்படும் நிலையில், அவற்றின் பிறப்புகளும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. 2012ஆம் ஆண்டு 300 யானைகள் மட்டுமே புதிதாகப் பிறந்துள்ளன.
யானைகளின் ஆயுட்காலம் சுமார் 70 வருடங்களாகும். பெண் யானையொன்று 09 தொடக்கம் 12 வயதாகும்போது பாலுறுறவில் ஈடுபடக்கூடிய உடற்தகுதியைப் பெறுகிறது.
யானையொன்றின் கர்ப்ப காலம் 22 மாதங்களாகும். பாலுட்டிகளில் அதிகமான கர்ப்ப காலத்தினைக் கொண்ட விலங்கு யானை என்றே கூறப்படுகிறது. மட்டுமன்றி, யானைகளுக்கு ஒரே பிரசவத்தில் ஒரு குட்டி மட்டுமே கிடைக்கிறது. ஒன்றுக்கு மேல் கிடைப்பது என்பது மிக மிக அரிதாகும். இவை தவிர, 04 வருடங்களுக்கு ஒரு தடவைதான் யானைகள் குட்டி ஈனும். யானைகளின் இனப்பெருக்கம் குறைந்தளவில் காணப்படுவதற்கு இவையும் காரணங்களாகும்.
வடக்கு, கிழக்கில் யுத்தம் நிலவிய காலப்பகுதிகளில் மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து இடம்பெயர்ந்தபோது, அங்கு யானைகள் வந்துபோகத் தொடங்கின. யுத்தத்துக்குப் பின்னர் மக்கள் மீள்குடியேறத் தொடங்கியபோது, அங்கு யானைகளின் அச்சுறுத்தல்களை மக்கள் எதிர்கொள்ளும் நிலை உருவாகின. மீள்குடியேறிய மக்களின் வீடுகள், சேனைப்பயிர்கள் போன்றவற்றினை அங்கு வழமையாக வந்துபோகும் யானைகள் சேதப்படுத்தின. இதன்போதும், யானைகளுடன் மனிதன் முரண்படும் நிலைமைகள் தோன்றின.
அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடியாறு போன்ற கிராம மக்கள், இவ்வாறு யானைகளின் அச்சுறுத்தல்களை மிகவும் அதிகமாக எதிர்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் யானையின் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர்.
யானைகளிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக, சில பிரதேசங்களில் மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குத் திணைக்களத்தினரும் யானைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான பயிற்சிகளையும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளதோடு, யானைகளை விரட்டுவதற்கான வெடிபொருட்களையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆயினும், யானைகளின் அச்சுறுத்தல் குறைந்தபாடில்லை.
தமது வாழ்விடங்களை இழக்கும் யானைகள் அங்கிருந்து வெளியேறும்போது, அவற்றுக்கான உணவினைப் பெற்றுக்கொள்வதில், அவை பாரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றன. முதிர்ச்சியடைந்த பெரிய யானையொன்று 150 முதல் 200 கிலோகிராம் உணவினையும் சுமார் 100 லீற்றர் நீரையும் நாளொன்றுக்கு உட்கொள்வதாகக் கூறப்படுகிறது. காட்டில் வாழும்போது இவற்றினைப் பெற்றுக்கொள்வது யானைகளுக்குச் சாத்தியமாகும். ஆனால், காட்டை விட்டு வெளியேறிய நிலையில், யானைகளுக்கு அவ்வாறு உணவினைப் பெற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான், மனிதன் வளர்க்கும் பயிர்களை யானைகள் உணவாக உட்கொள்வதற்கு முயற்சிக்கின்றன. சிலவேளைகளில், வீடுகளை உடைத்து அங்கிருக்கும் உணவுப்பொருட்களை எடுத்து உட்கொள்கின்றன.
தென்னந்தோட்டங்களில் நுழையும் யானைக் கூட்டம், அங்கிருக்கும் தென்னை மரங்களை வீழ்த்தி, அவற்றின் ஓலைகளை உண்ணுகின்றன. அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் கணிசமான தென்னந்தோட்டங்கள் இவ்வாறு யானைகளால் அழிக்கப்பட்டன. இதனால், தோட்டங்களின் உரிமையாளர்கள் பல இலட்சம் ரூபாய் நட்டத்தினை எதிர்கொண்டனர். ஆயினும், அவர்களுக்கு எவ்விதமான நட்டஈடுகளும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
யானைகள் கொல்லப்படுகின்றமை கவலை தரும் விடயமாக உள்ளபோதும், யானைகளால் மனிதர்கள் கொல்லப்படுகின்றமையானது அதை விடவும் கவலையான விடயமாகும். மனித உயிர்களுக்கு ஈடாக உலகில் எதுவும் இல்லை. அநேகமாக யானைகளால் வீட்டுத் தலைவர்களான ஆண்கள்தான் கொல்லப்படுகின்றார்கள். அவர்கள் வயல்வெளிகளுக்குச் செல்லும்போது, அங்கு எதிர்கொள்ளும் யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி உயிரிழக்க நேரிடுகிறது. இதனால், வீட்டுத் தலைவர்களை இழக்கும் குடும்பங்கள் அநாதரவாகின்றன. உழைத்துக் கொடுக்கும் நபர்கள் இறந்துவிடும்போது, குறித்த குடும்பங்கள் வருமானமின்றி அல்லலுறுகின்றன. இவ்வாறான குடும்பங்களுக்கு மாதாந்த வருமானமொன்றினை வழங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது.
யானையொன்றின் அச்சுறுத்தலுக்கு மனிதன் உள்ளானாலும் கூட, யானையொன்றினைக் கொல்வதென்பது சட்டப்படி குற்றமாகும். சம்மாந்துறைப் பிரதேசத்தில் சில காலங்களுக்கு முன்னர் யானையொன்று இறந்து கிடந்தபோது, குறித்த யானையினை அப்பிரதேச நீதவான் நீதிமன்ற நீதிபதி வந்து பார்வையிட்டதோடு, அந்த யானையின் உடலத்தை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மட்டுமன்றி, ஒரு யானை உயிரிழந்தால், யானையைப் புதைப்பதற்காக அங்குள்ள பிரதேச செயலகம் ஒரு தொகைப் பணத்தை ஒதுக்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்டபோது, அங்கிருந்த பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டன. இதனால், அங்கிருந்த ஏராளமான யானைகள் தமது வாழ்விடங்களை இழந்து அலைந்து திரிந்தன. அவ்வாறான யானைகளில் கணிசமானவை தமது பகுதிகளில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்டத்தில் யானைகளால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
இன்னொருபுறம் யோசித்துப் பார்க்கையில், யானைகளின் வாழ்விடங்களைப் பறித்தெடுத்து விட்டு, நாம் மட்டும் நிம்மதியாக வாழலாம் என்று நினைப்பது மிகப் பெரும் அநியாயமாகவே தெரிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago