2025 மே 16, வெள்ளிக்கிழமை

முள்ளிவாய்க்காலில் இருந்து எழுந்து வருதல்

Thipaan   / 2016 மே 18 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து, இன்றோடு ஏழு ஆண்டுகளாகின்றன. பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில், இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதோடு, வருடங்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போகின்றன. இழக்கப்பட்ட உயிர்களுக்கும் ஓடிய பெரும் குருதிக்குமான நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலான நம்பிக்கைகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்ற தருணத்தில், ஆயிரக்கணக்கான 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்' குறிப்புக்கள், கட்டுரைகள், பத்திகளுக்கிடையில் இந்தப் பத்தியும் ஓரிடத்தை எடுத்துக் கொள்கின்றது.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான தமிழ் மக்களின் கூட்டுக் கோபமும் நீட்சியான வலியும், வீரியத்தோடுதான் இன்னமும் இருக்கின்றது. ஆனால், அந்தக் கூட்டுக் கோபத்தையும் நீட்சியான வலியையும் பெரும் அரசியல் முனைப்பாகவும், இடறி விழுந்த இடத்திலிருந்து எழுந்து பாய்ச்சல் எடுக்கின்ற புள்ளியாகவும் மாற்றிக்கொள்வதிலுள்ள பெரும் சிக்கலை, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு சந்தித்து நிற்கின்றது. அரசியல் கட்சிகளாலோ, புலமையாளர்களாலோ, செயற்பாட்டாளர்களினாலோ அந்தச் சிக்கலைச் சீராக்கி, மீள் பயணத்தை ஆரம்பித்து வைக்க முடியவில்லை. கால ஓட்டத்தில் ஏழு வருடங்கள் என்கிற பெரும் பகுதியை, சாக்குப்போக்குச் சொல்லியும் ஒருதரப்பை நோக்கி இன்னொரு தரப்பு குற்றஞ்சாட்டியும் முடக்குவாதம் பேசியும் கடந்து வந்திருக்கின்றன.

முள்ளிவாய்க்காலோடு, விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்தமான ஆளுமையும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிடும் என்று கருதிய அனைத்துத் தரப்புக்களும், அவர்களின் அருவமான ஆளுமையின் நீட்சியையும் அதற்கு மக்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் கண்டு எரிச்சலடைந்தன. அது, 30 ஆண்டுகால தமிழ்த் தேசிய அரசியலினை கொண்டு நடத்திய தரப்பொன்றின் வீழ்ச்சிக்குப் பின்னரான ஆளுமை நீட்சி.

அது, சடுதியாக நீக்கப்படக்கூடிய ஒன்றல்ல. அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய அரசியலின் தொடர்ச்சியை எவ்வாறு கொண்டு நகர்த்துவது என்பது தொடர்பிலான சந்தேகங்களும் எழுந்து அடங்கின. சில முனைப்புக்களின் பின்னர் தேர்தல் அரசியல் களத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிக் கொண்டது. மக்களும் கூட்டமைப்பினை குறைநிரப்பும் தரப்பாகக் கையாண்டு கொண்டனர். ஆனால், அதுவொரு தீர்க்கமான பயணத்தின் ஆரம்பம் அல்ல. அப்படிக் கொள்ள வேண்டியதும் இல்லை.

தமிழ்த் தேசிய அரசியல் போராட்ட வரலாற்றில், செயற்றிறன் மற்றும் எடுத்துக்கொண்ட விடயத்துக்காக அர்ப்பணிக்கும் திறன் என்பவை, தமிழீழ விடுதலைப் புலிகள் அளவுக்கு, கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி யாரிடமும் இருந்ததில்லை. முள்ளிவாய்க்காலில் இடறி விழுந்த புள்ளியிலிருந்து எழுந்து வருவதற்கு மக்கள் தயாராகத்தான் இருக்கின்றார்கள். அதுபற்றி சந்தேகம் ஏதும் இந்தப் பத்தியாளருக்கு கிடையாது. ஆனால், அவர்களைச் சரியான புள்ளியில் ஒருங்கிணைப்பதிலும் நகர்த்துவதிலும் தான் சிக்கல் நீடிக்கின்றது. ஏனெனில், அதனைக் கட்டமைப்பதில் தமிழ்த் தரப்புக்களுக்கு பெரும் பதற்றமும் பயமும் இருக்கின்றது. அது பெரும் உழைப்பினையும் அர்ப்பணிப்பினையும் கோரும் விடயம். ஆனால், தமிழ்த் தேசிய அரசியலும் அதுசார் பரப்பும், தற்போது அடுத்தவர்களின் உழைப்பினை சுரண்டுபவர்களின் கைகளிலும் போலிகளின் கைகளிலும் சென்று சேர்ந்திருக்கின்றது. அப்படிப்பட்ட தரப்புக்கள், உண்மையான உழைப்பினைக் கொட்டுவது தொடர்பிலான எந்த அக்கறையையும் காட்டாது. மாறாக, உழைப்பைக் கொட்டுவது மாதிரியான ஜாலங்களை ஏற்படுத்துவது தொடர்பில் மாத்திரமே கரினை கொண்டிருக்கின்றன.

இந்தப் போலி ஜாலங்களை ஏற்படுத்தும் தரப்புக்களுக்குள், அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், புலம்பெயர் நிறுவனங்கள், ஊடகங்கள், புத்திஜீவிகள் மாத்திரமின்றி, அரசியல் ஆய்வாளர்களும் பத்தியாளர்களும் கூட உள்ளடக்கம். இவ்வாறான அலைக்கழிப்புக்கு மத்தியிலும் உண்மையான அர்ப்பணிப்போடும், செயற்றிறனோடும் இயங்கும் தரப்புக்கள் ஒரு சிலவே. நீண்டு செல்லும் உரையாடல்களும் எழுத்துக்களும் மாத்திரம் பிரதான இலக்குகளை அடையப் போதுமானவை அல்ல. மாறாக, உரையாடிக் கொண்டவைகளிலும் எழுதித் தீர்த்தவைகளிலும் தீர்க்கமானவற்றை செயற்படுத்தும் திறனும் அவசியம். அந்தத் திறன் குறைபாட்டின் நீட்சியே இன்னமும் முள்ளிவாய்க்காலோடு தமிழ் மக்களை வைத்துக் கொண்டிருக்கின்றது.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு எந்தவித விட்டுக்கொடுப்புமின்றி நான்கு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. 1. தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, 2. இறுதி மோதல்களில் இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதி, 3. நீண்ட ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பொன்றின் சமூக, பொருளாதார மீள்கட்டுமானம். 4. பிரிவினைகளோடு ஆட்டம் கண்டிருக்கின்ற தமிழ்த் தேசிய அரசியல் பரப்பின் ஒருங்கிணைவும், நீட்சியும். மேற்கூறப்பட்ட விடயங்களில் அரசியல் தீர்வு என்கிற விடயத்தினைத் தவிர்த்து ஏனைய மூன்று விடயங்களுக்கும் அவசரமாக கையாளப்பட வேண்டியவை. ஏனெனில், அந்த விடயங்கள் தொடர்பில் ஏற்படும் கால தாமதங்கள் பக்க விளைவுகளையும் அதன் நீட்சிகளையும் வேறு வடிவங்களில் எமது சமூகத்துக்குள் ஏற்படுத்தும் வல்லமையுள்ளவை.

இறுதி மோதல்களில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளுதல் என்பது மீண்டும் அவ்வாறான அநீதிகளுக்கான வாய்ப்புக்கள் உருவாகாமல் தடுப்பதற்கு உதவும். அதுவே, மக்களை நம்பிக்கையான பக்கத்தில் திருப்பி விடுவதற்கான வாய்ப்புக்களின் கதவுகளையும் திறக்கும். அப்படியான நிலையில், நீதியைக் கோருதலுக்கான முனைப்புக்களிலிருந்து பின்செல்வதோ, தட்டிக்கழித்து காலங்களைக் கடத்துவதோ மோசமான எதிர்வினைகளை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை.

அதுபோல, ஆயுதப் போராட்டத்தினைத் தொடர்ச்சியாக முன்னெடுத்த தரப்பொன்றின் சமூக, பொருளாதார மீள்கட்டுமானம் சார்ந்த கடப்பாடு. இதுவொரு கூட்டுப்பொறுப்பான விடயம். தாயகத்திலுள்ளவர்கள், புலம்பெயர்ந்தோர், செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள், மத பீடங்கள், ஊடகங்கள் என்று அனைத்துத் தரப்புக்களும் ஒருங்கிணைய வேண்டிய கடப்பாடு மிக்க பகுதி. அதுபோல, மிகவும் தெளிவாகவும் கவனமாகவும், திட்டமிட்ட நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய இடம். இந்த இடத்திலிருந்து முன்னேற்றகரமான நடவடிக்கைகள் சாத்தியமாகவில்லை எனில், அது தமிழ் மக்களுக்குள்ளேயே தமிழ் மக்களுக்கு எதிரான பெரும் சக்திகளை வெளித்தரப்புக்கள் உருவாக்குவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திவிடும். அது, வரைமுறையற்ற வன்முறை, அதீத போதையின் பாவனை உள்ளிட்ட சமூக கேடுகளையும் இலகுவாக எமக்குள் விதைத்துவிட்டுச் செல்வதற்கு காரணமாகிவிடும். அவற்றின் கெடுதியான ஆரம்பப் பக்கங்களை நாம் அண்மைய நாட்களில் கண்டு வேகித்து நிற்கின்றோம்.

அத்தோடு, மீளக் கட்டமைக்கப்படாத சமூக பொருளாதாரச் சூழல், மக்கள் மத்தியில் பாரிய ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்திவிடும். ஏற்கெனவே, சீரற்ற பணப்புழக்கத்தில் எதிர்வினைகளை தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டு நிற்கின்றது. அது, பொருளாதாரத்தின் ஆணிவேர்களையே அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. அப்படியான நிலையில், பொருளாதாரச் சீராக்கமும், தொழில் வாய்புக்களுக்கான சூழலும் ஏற்படுத்தப்பட வேண்டும். அதனை உருவாக்குவதற்கான வல்லமையும் வளமும் தமிழ்த் தரப்பிடம் இன்னமும் இருக்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பிரிவினைகளை ஏற்படுத்துவது தொடர்பில் காலங்காலமாக பல்வேறு தரப்புக்களும் அக்கறை கொண்டு வந்திருக்கின்றன. அவ்வப்போது பிரித்தாளும் தந்திரங்களுக்குள் அகப்பட்டு படுதோல்விகளின் பக்கத்திலும் தமிழ்த் தேசியப் போராட்டங்கள் சென்று சேர்ந்திருக்கின்றன. அவ்வாறான நிலையில், மீண்டும் அவ்வாறான நிலைகள் ஏற்படுவதைத் தடுத்தாக வேண்டிய தேவை அதிகமாகவே இருக்கின்றது. தமிழ் மக்களின் கூட்டுக் கோபமும் நீட்சியான வலியும் பிராந்தியங்கள் தாண்டி, ஒரே மாதிரியாகவே இருக்கின்றது.

ஆனால், அவற்றின் வெம்மையை கையாள்வது தொடர்பிலான நடைமுறைச் சிக்கல்களும் குழுக்களுக்கிடையிலான ஈகோ மனநிலையும் பிரிவினைகளின் போக்கினை அதிகப்படுத்தியிருக்கின்றதோ என்று கொள்ள வேண்டியிருக்கின்றது. குறிப்பாக, தாயகத்திலுள்ளவர்களுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் இடையிலான ஒருசில முரண்பாடுகள் அல்லது எதிர்நிலைக் கருத்துக்கள் அவர்கள் சார்ந்த சூழல்கள் சார்ந்து எழுந்து அடங்குவதுண்டு. ஆனால், அந்த முரண்பாட்டின் புள்ளிகளைத் தமக்கான பக்கங்களாக வைத்துக் கொண்டிருப்பதில் பல தரப்புக்களும் ஆர்வம் கொள்கின்ற போது, பிரிவினையின் பக்கங்களுக்கான கதவுகள் அகலத் திறக்கின்றன.

ஆக, முரண்பாடுகளைத் தாண்டிய புள்ளியில் ஒருங்கிணைய வேண்டிய தேவையையும் அது கோரி நிற்கின்றது. அது, தவறவிடப்படும் பட்சத்தில் புலம்பெயர் புதிய தலைமுறை தாயகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக அறுபட்டுச் செல்லும் சூழலொன்று வெகு சீக்கிரத்திலேயே உருவாகும். அது, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பின் பெரும் பின்னடைவாக இருக்கும்.

இறுதி மோதல்கள், பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியிருக்கின்றன என்று, சர்வதேச நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் தெரியும். தெரிந்து கொண்டுதான், இறுதி மோதல்களுக்கான ஒத்துழைப்பை அந்த நாடுகள், இலங்கைக்கு வழங்கின. ஓடிய குருதிக்குக் காரணமானவர்கள் யார் யாரோ, அவர்களிடமே எமக்கான நீதியையும் கோர வேண்டிய அவலநிலையொன்று, தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

ஆனாலும், அவர்களோடும் அவர்களின் சூழ்ச்சிகளோடும் களமாடித்தான் நீதியின் பக்கங்களை அடைந்தாக வேண்டும். அதுதான், முள்ளிவாய்க்காலில் நாம் புதைத்துவிட்டு வந்த ஆயிரமாயிரம் உயிர்களுக்கு செய்கின்ற உண்மையான அஞ்சலியாக இருக்கும். தமிழ் மக்களின் கூட்டுக் கோபத்தினை ஆக்கபூர்வமாக ஒருங்கிணைப்பதற்கான புள்ளியாகவும் அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .