2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் தேவையா?

Thipaan   / 2016 நவம்பர் 10 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரச படையினருக்கும் இடையிலான இறுதி யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், தமிழ் மக்கள் மீதான நெருக்குவாரங்கள், நேரடியானதாக அமைவது குறைந்தது. பல்வேறு கட்டங்களில், பல்வேறு சம்பவங்களில், தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் பிரயோகிக்கப்பட்டாலும், முஸ்லிம் மக்கள் மீது நேரடியான நெருக்கடிகள் அதிகரிக்கப்பட்டது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. 

அளுத்கமை, பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தைத் தொடர்ந்து, பெரும்பான்மை மக்களிடத்தில், முஸ்லிம் மக்கள் மீதான நம்பிக்கையற்ற நிலைமையொன்று உருவானதாகக் கருதப்படுகிறது. ஆகவே தான், தமிழ் மக்கள் மீதான வழக்கமான நெருக்கடிகளுக்கு மத்தியில், முஸ்லிம் மக்கள் புதிதாக இணைந்தார்கள் போன்ற எண்ணம் ஏற்பட்டது. 

இந்நிலையில் தான், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தைச் சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்காகவென அமைச்சர்களான கபீர் ஹாஷிம், றவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், பைசர் ஹாசிம், எம்.எச்.எம்.ஹலீம், சந்திராணி பண்டார, பிரதியமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே ஆகியோர் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக, அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையைப் பெறுவதில் ஒரு நிபந்தனையாக இது காணப்படுவதாகவும், நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவித்தார். 

இந்த அறிவிப்பு, கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. அச்சட்டத்தில் மாற்றங்கள் தேவைப்படுவோர், இந்த அறிவிப்பை வரவேற்க, இன்னும் சிலரோ, முஸ்லிம்களுக்கெதிரான அண்மைக்கால நடவடிக்கையின் ஓர் அங்கம் இதுவா என்று கேள்வியெழுப்பினர். ஆகவே, இதன் உண்மைத்தன்மை பற்றியும் அவசியப்பாடு குறித்தும் ஆராய்வது அவசியமானது. 

முஸ்லிம் தனியார் சட்டம் எனவும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் எனவும் முஸ்லிம் குடும்பச் சட்டம் எனவும் அழைக்கப்படும் இந்தச் சட்டம், 1951ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. முஸ்லிம் இனத்துக்குள் இடம்பெறும் திருமணங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமே இது. சில தடவைகள் இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், பாரியளவிலான சீர்திருத்தங்கள், இதில் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையானது. 

ஆனால், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைக்காக மேற்கொள்ளப்படும் மாற்றம் இதுவென்ற கருத்து, உண்மையானதா என்பதில் சந்தேகமுள்ளது. 2010ஆம் ஆண்டு, அப்போது வெளிவிவகார அமைச்சால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், ஐரோப்பிய ஆணைக்குழுவின் 15 நிபந்தனைகளும் இணைக்கப்பட்டிருந்தன. அதில், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, திடீரென எவ்வாறு இந்த நிபந்தனை வந்தது என்பது கேள்வியே. 

ஜி.எஸ்.பி பிளஸ் என்பதைக் காட்டி, சர்ச்சைக்குரிய சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் முயல்வதாக இருக்கலாம். அவ்வாறான நிலைமையாக இருந்தால், அந்தப் பொய்யை ஏற்றுக் கொள்வதில் தவறிருக்காது. அரசாங்கமும் அமைப்புகளும், சரியான விடயத்தை முன்னெடுப்பதற்காகப் பொய் சொல்வதில் தவறில்லை. சாதாரணமாக “முஸ்லிம் விவாகச் சட்டத்தை மாற்றப் போகிறோம்” என அரசாங்கம் புறப்பட்டிருந்தால், கடுமையான எதிர்ப்பைச் சந்தித்திருக்கும். “எதற்காக இப்போது திடீரென இந்த நடவடிக்கை?” எனக் கேள்விகள் எழுந்திருக்கும். ஜி.எஸ்.பி பிளஸ் என்ற காரணத்தைக் காட்டுவதால், அந்த எதிர்ப்பு, குறைவாகவே காணப்படுகிறது. 

ஆனால் மறுபக்கமாக, தனது நிபந்தனைகளை, ஐரோப்பிய ஒன்றியம் அதிகரித்திருக்கலாம். இல்லாவிடில், உத்தியோகபூர்வமற்ற நிபந்தனையாக அதை முன்வைத்திருக்கலாம். அதற்கான வாய்ப்புகளையும் இல்லை என்று கூற முடியாது. அவ்வாறான நிலைமை இருந்தால், அரசாங்கம் மீது விமர்சனங்களை முன்வைப்பதில் தவறில்லை. இச்சட்டத்தைத் திருத்த வேண்டுமென, பல அமைப்புகள், பல ஆண்டுகளாகக் கோரி வந்தன. வெறுமனே ஜி.எஸ்.பி சலுகைக்காக மாத்திரம் தான் இச்சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் முயலுமாயின், மக்களின் நலனை விட, பொருளாதாரச் சலுகைகள் தான் அரசாங்கத்துக்குப் பெரிதாகத் தெரிகிறதா என்ற கேள்வி எழுகிறது. 

அடுத்ததாக, இந்த நிபந்தனையைப் புதிதாக ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்திருக்குமாயின், இதற்கு முன்னர் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை, எவ்வாறு வழங்கப்பட்டிருந்தது? இதற்கு முன்னர் இச்சலுகை இருந்த போது, இதே சட்டம் தான் காணப்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது. 

இவற்றுக்கெல்லாம் அடுத்த பக்கமாக, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம்களுக்கெதிரான எதிர்ப்பைக் கொண்டுசெல்வதற்கு, ஒரு பகுதியினர் முயல்வதையும் மறந்துவிடக் கூடாது. இப்பத்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நெருக்கடியான நிலைமையை, முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் முயற்சிகளும் இடம்பெறுகின்றன. குறிப்பாக, முஸ்லிம் தனியார் சட்டத்தைப் பற்றி இதற்கு முன்பு அறிந்திருக்காதவர்களும், அதைப் பற்றி விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கண்டியன் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் இருப்பதை மறந்து/மறைத்துவிட்டு, “நாடு முழுவதற்கும் ஒரே சட்டம் இருக்கையில், முஸ்லிம்களுக்கு மாத்திரம் எதற்காகத் தனிச்சட்டம்?” என்று கேள்வியெழுப்புகிறார்கள். அவர்களையும் இனங்கண்டு கொள்ளல் அவசியம். 

இந்த விமர்சனங்களுக்கு மத்தியில், இச்சட்டத்தின் குறைபாடுகளை மறந்துவிட முடியாது. இலங்கையின் பொதுச் சட்டத்தின்படி, திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதாக 18 வயது காணப்படுகிறது. சர்வதேச மட்டத்திலும் அவ்வாறான எல்லையே காணப்படுகிறது. ஆனால், முஸ்லிம் தனியார் சட்டத்தின் கீழ், 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் முடிக்க முடியும். காஸி (முஸ்லிம் நீதிபதி) அனுமதித்தால், அவ்வயதை விடக் குறைவான பெண்களையும் திருமணம் முடிக்க முடியும். இது, பால்ய வயதுத் திருமணங்களுக்கு வழியேற்படுத்தும் ஒரு பிரிவாகும். 

இதே மாதிரியான சட்டங்களே இந்தோனேஷியா, மலேஷியா உள்ளிட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் காணப்பட்டாலும், இந்தோனேஷியாவில் அந்த வயதெல்லை 16 என உயர்த்தப்பட்டுள்ளதுடன், 18 வயதாக அதிகரிக்கப்பட வேண்டுமெனப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, திருத்தமேற்படுத்தப்பட வேண்டிய பிரிவு இதுவாகும். 

அதேபோல், விவாகரத்துப் பெறுவதில் ஆண்களை விடப் பெண்களுக்குக் காணப்படும் குறைவான உரிமைகள், பலதாரத் திருமணங்களில் பெண்களுக்குக் காணப்படும் குறைவான உரிமைகள், பலதாரத் திருமணங்களில் ஈடுபடுவதற்கு முன்னர் மனைவியின் அனுமதியைப் பெற வேண்டிய தேவையில்லாமை, காஸிகளாக மாறுவதற்குப் பெண்களுக்கு அனுமதியில்லை, காஸிகளாக நியமிக்கப்படுவதற்குத் தகுதிகளேதும் இல்லாமை உட்பட, சர்ச்சைக்கும் கேள்விக்குமுரிய பல பிரிவுகள் காணப்படுகின்றன. காஸி நீதிமன்றத்தில், சாதாரண சிவில் நீதிமன்றங்களைப் போலல்லாது, குறித்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு, வாய்ப்பு வழங்கப்படாது. ஆகவே, முழுமையான ஜனநாயக அமைப்பாகவும் இதைக் கருத முடியாது.  இவ்வாறான பிரிவுகளை, வெறுமனே மதத்துக்குரிய சட்டமாகப் பார்த்துவிட்டுச் சென்றுவிட முடியாது. நாடு என்ற வகையில், அதில் வாழும் அனைத்துப் பிரஜைகளும், மனித உரிமைகளை அனுபவிப்பதற்கான சூழலை ஏற்படுத்துதல் அவசியமாகும். நாட்டின் ஒரு பகுதியினருக்கு, முழுமையான உரிமைகளை அனுபவிக்க முடியாமலிருப்பது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. 

முழு நாட்டுக்குமேயே, ஒரே சட்டம் இருப்பது என்பது சிறப்பானது. ஆனால், தங்களது மதங்களுக்குரிய அல்லது இடத்துக்கான இனம் சார்ந்த விசேடித்த சட்டங்களைக் கொண்டிக்கும் நிலைமையை, உடனடியாக மாற்ற முடியாது. அவ்வாறான சூழ்நிலையில், இவ்வாறான சட்டங்களை, மனித உரிமைகளை மதிக்கும் சட்டங்களாக மாற்றுதல் அவசியமானது. இந்நிலைமையில், இச்சட்டமூலம் தொடர்பான மாற்றங்கள் அறிவிக்கப்படும் போது, அதைச் சரியான முறையில் எதிர்கொள்ளுதல், முஸ்லிம்களுக்கு அவசியமானதாகும். எந்தவிதமான மாற்றங்களையும் நேரடியாக, உடனடியாக எதிர்ப்பதென்பது, ஏனைய சமூகங்களிலிருந்து, அச்சமூகத்தை விலக்கிக் கொள்ளும். 

இந்தப் பின்னணியில் தான், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு உட்படச் சில அமைப்புகளும் சில அரசியல்வாதிகளும், இந்தச் சீர்திருத்த முயற்சிகளை எதிர்ப்பதன் மூலமாக, தனிப்பட்ட நலனை முன்னிறுத்துகின்றன என்பதோடு, இனவாத நோக்கங்களை உடையோருக்குத் தீனி போடும் பணியையும் மேற்கொண்டு வருகின்றன. 

மதங்கள் சம்பந்தப்பட்ட இந்த விடயம், கவனமாகக் கையாளப்பட வேண்டியது என்பதோடு, முஸ்லிம் தரப்பிலுள்ள முன்னேற்றகரமான சிந்தனைகளைக் கொண்டோர், இச்சீர்திருத்த முயற்சி வெற்றியளிப்பதை உறுதி செய்வது, அவர்களின் கடமையாகும். இது, அடுத்த தலைமுறைகள், முழுமையான உரிமைகளை அனுபவிப்பதை உறுதி செய்யும்.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .