2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

ராகுல் காந்தி கைது: காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி கொடுத்து விட்டதா?

Thipaan   / 2016 நவம்பர் 07 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லியில் ராகுல் காந்தி கைதானது காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து விட்டது என்று பரபரப்பான விவாதம் தொடங்கியிருக்கிறது. ‘ஒரு பதவிக்கு ஒரே ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள் முன்னாள் இராணுவ வீரர்கள். அந்த வீரர்களில் ஒருவரான ராம் கிருஷ்ண் கிரேவால் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலைப் பார்க்க மருத்துமனை சென்ற போதுதான் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். பிறகு விடுதலை செய்யப்பட்டார். என்றாலும், ராகுல் கைது காங்கிரஸுக்கு அரசியல் ரீதியாக வெற்றி என்ற கருத்துருவாக்கம் செய்யப்படுகிறது.  

ஆனால், அதற்குரிய சாத்தியக் கூறுகள் ஏதும் தெரியவில்லை. ஏனென்றால் ராகுல் கைது செய்யப்பட்டவுடன் இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தை நடத்தவில்லை. டெல்லியில் கூட ராகுலுடன் சென்ற காங்கிரஸார் மட்டுமே போராட்டம் நடத்தினார்கள். நாடு முழுவதும் பரவியுள்ள காங்கிரஸ் கட்சியால் ‘டோக்கன் ஆர்பாட்டத்தை’ கூட செய்யமுடியவில்லை. ஏன் இந்தச் சோதனை? கட்சியின் துணைத் தலைவர்- வருங்காலப் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லப்படுகின்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கே காங்கிரஸ்காரர்கள் வெகுண்டெழவில்லை. காங்கிரஸில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களை இது கவலையடைய வைத்திருக்கிறது.  

இதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 44
எம்.பிக்களை மட்டுமே பெற்றதால், நாட்டின் எதிர்கட்சியாகும் தகுதியை இழந்தது. நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக நாடாளுமன்றத்துக்குள் இருப்பதில் மிகப்பெரிய கட்சி என்ற அந்தஸ்தை மட்டும் காங்கிரஸ் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது. பிரதான எதிர்கட்சியாக வர முடியவில்லை. இதனால் நாடாளுமன்றத்தில் துணைச் சபாநாயகர் பதவியைக் கூட பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க) அரசாங்கம் காங்கிரஸுக்கு கொடுக்கவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அப்பதவி கொடுக்கப்பட்டது. துணைச் சபாநாயகர் விடயத்திலும் பிரதான எதிர்கட்சியாக காங்கிரஸை அங்கிகரிக்கும் விடயத்திலும் பா.ஜ.க எடுத்த முடிவுக்கான காரணம், ‘நாட்டில் காங்கிரஸ் கட்சி பலவீனப்பட்டு விட்டது என்றும் இனி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் தேவையான தலைமை காங்கிரஸ் கட்சியிடம் இல்லை’ என்றும் விவாதிக்கப்பட்டது.  

இதன்பிறகு மத்திய அரசாங்கத்தை மிரட்டுவதற்கு காங்கிரஸுக்கு ராஜ்ய சபையில் உள்ள பலம் மட்டுமே உதவியது. மத்திய அரசாங்கத்துடன் ராஜ்ய சபையில் பெரும்பாலும் மோதல்ப் போக்கைக் கடைப்பிடித்தது. நீதித்துறையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட ‘தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய’ விவகாரத்தில் மட்டும் மத்திய அரசாங்கத்துடன் கைகோர்த்த காங்கிரஸ் கட்சி நாட்டு நலன் சார்ந்த சரக்குவரி சட்டத்துக்கு இழுக்கடித்தது. காங்கிரஸுடன் சமரசம் செய்து கொண்டால் மட்டுமே சரக்கு வரி மசோதாவை நிறைவேற்ற முடியும் என்ற நிலை உருவாக, அதன்படியே மத்திய அரசாங்கமும் சமரசம் செய்து அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இன்றைக்கு சோனியாவின் உடல் நலக்குறைவால் காங்கிரஸ் கட்சியை வழி நடத்தும் துணை தலைவர் ராகுல் காந்தியின் தலைமை வாக்காளர்களை கவர்ந்து இழுக்கப் போவதில்லை.  

ஏன், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் தலைமை காங்கிரஸ் வெற்றிக்கு கை கொடுக்கும் நிலையில் இல்லை? பீஹாரில் ‘மெகா கூட்டணி’ அமைத்து அங்கே பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் செய்த ராகுல் காந்தியால் அருணாசலப் பிரதேசத்தில் தன் கட்சி எம்.எல்.ஏக்களைத் தக்க வைத்து காங்கிரஸ் ஆட்சியைத் தொடர முடியவில்லை. மேற்கு வங்கத்தில் இயற்கையான கூட்டணிக் கட்சியாக இருக்கும் மம்தா பானர்ஜியை முறைத்துக் கொண்டு என்றும் எதிரும் புதிருமாக மேற்கு வங்கத்தில் அரசியல் செய்த கம்யூனிஸ்டுகளுடன் கை கோர்த்தார் ராகுல் காந்தி. விளைவு, மேற்கு வங்கத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தோற்றது; கம்யூனிஸ்ட் கட்சியும் தோற்றது. அதேபோல், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜி.கே. வாசன் விலகி தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய பிறகு காங்கிரஸ் கட்சி பலவீனப்பட்டு கிடந்தது. அதைத் தூக்கி நிறுத்தி, தி.மு.கவிடம் 41 தொகுதிகளைப் பெற்று சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்தவர்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையுடன் அவரைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிய ராகுல் காந்தி, இன்றைக்கு காங்கிரஸ் கட்சியை மீண்டும் தமிழகத்தில் தனிமைப்படுத்தி வைத்துள்ளார்.  

ஆந்திர மாநிலத்திலும் அதே நிலை. அங்கு காங்கிரஸின் செல்வாக்கை உயர்த்திப் பிடித்திருந்த மறைந்த ராஜசேகரரெட்டியின் மகன் ஒய். எஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாய்ப்புத் தராமல் கோட்டை விட்டதால், அவர் ஆந்திராவிலும் காங்கிரஸைப் பிளந்து தனிக் கட்சி தொடங்கி விட்டார். இப்போது நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச தேர்தலிலும் வியூகம் அமைக்கத் தெரியாமல் காங்கிரஸ் கட்சி திணறிக் கொண்டிருக்கிறது.  

பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்தை விமர்சித்து காங்கிரஸில் இருந்த பாரம்பரிய பகுகுனா குடும்பத்தைச் சார்ந்த ரீட்டா பகுகுனாவே பா.ஜ.கவில் போய் சேர்ந்து விட்டார். ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், தமிழகம் என்ற எந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும், ராகுல் காந்தியின் அரசியல் அனுபவமின்மையே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. குறிப்பாக ஜெகன்மோகன் ரெட்டிக்கும் ஜி.கே. வாசனுக்கும் ராகுலுடன் ஏற்பட்ட பனிப்போரே அவர்கள் ஆந்திராவிலும் தமிழகத்திலும் தனிக் கட்சி தொடங்குவதற்கு காரணமாக அமைந்தது. இப்படிப் பல்வேறு மாநிலங்களிலும் ராகுல் காந்தியே முன்னின்று காங்கிரஸில் செல்வாக்குள்ள தலைவர்களை ஓரங்கட்டியது, இன்று இப்படியொரு கைது நிகழ்வுக்குப் பிறகும் இன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி கிடைக்காமல் தவிக்கிறது.  

தேர்தல்த் தோல்வியைத் தொடர்ந்து தழுவி வரும் காங்கிரஸ் கட்சியை முன்னெடுத்துச் செல்ல அக்கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு இப்போதைக்கு உடல் நலம் சரியில்லை. அந்த இடத்துக்கு வந்திருக்கும் ராகுல்காந்தியோ செல்வாக்குள்ள மாநிலத் தலைவர்களை அரவணைத்துச் செல்லவில்லை. வாஜ்பாய் பிரதமர் பதவியிலிருந்து 2004 இல் விடைபெற்ற பிறகு 2014 வரை பா.ஜ.கவுக்கு ஒரு ‘வெற்றி பெறும் தலைமை’ இல்லாமல் தடுமாறியது. அந்த நிலை காங்கிரஸ் கட்சிக்கு இப்போது வந்திருக்கிறது. குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திரமோடி, பிரதமர் வேட்பாளர் என்ற இமேஜ் உருவாகிய பிறகுதான் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும் என்ற நிலை உருவானது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் தலைமைக்கும் வெற்றி கிடைத்தது. இந்த வெற்றியை பிரதமர் மோடி தக்க வைத்துக் கொள்வாரா என்பது விவாதத்துக்குரியது. என்றாலும், மோடியை வெல்ல ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸால் முடியாது என்ற எண்ணம் நாட்டு மக்களுக்கு வந்து விட்டது. ராகுல் காந்தி இதை எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லை. ஒரு காலத்தில் “எங்களுக்குக் கூட்டணியே வேண்டாம்” என்று கூறினார் சோனியா காந்தி. ஆனால், பா.ஜ.க இரு முறை (1998, 1999) தேர்தலில் வெற்றி பெற்றவுடன் “கூட்டணி அரசியலுக்கு ரெடி” என்று பச்சமாரியில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்தப் ‘பச்சமாரி தீர்மானம்’ தான் 2004 இலும், 2009 இலும் காங்கிரஸ் கட்சிக்கு தொடர் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தது.  

ஆனால், வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தனது கூட்டணிக் கட்சிகளையே பதம் பார்த்தது. கூட்டணியில் இருந்த பீஹார், லாலு பிரசாத் யாதவ் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானது. காங்கிரஸுடன் இணக்கமாக இருந்த மஹாராஷ்டிரா, சரத்பவார் மீதே ஊழல் விசாரணை என்றெல்லாம் கிளம்பியது. காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த தி.மு.க 2-ஜி அலைக்கற்றை ஊழலில் அலைக்கழிக்கப்பட்டது. ஏன், கூட்டணியில் இருந்த மம்தா பானர்ஜி போன்றோரைக் கூட காங்கிரஸ் விட்டு வைக்கவில்லை. துணைக்கு வந்த கட்சிகளைத் தொல்லை கொடுத்த பின்னனியில் இருந்தது ராகுல் காந்தியே என்று கூட்டணிக் கட்சி தலைவர்கள் நம்புகிறார்கள். அதன் விளைவுதான் இன்று கூட்டணிக் கட்சிகளுக்கும் காங்கிரஸின் மீது நம்பிக்கையில்லை. சொந்தக் கட்சியிலும் செல்வாக்குள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால வெற்றி மீது நம்பிக்கையில்லை. அதனால்தான் 1979 இல் ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாய் அரசாங்கம் இந்திரா காந்தியைக் கைது செய்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மாபெரும் எழுச்சி இப்போது, ராகுல் கைதில் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நாட்டின் அரசியல் வரலாற்றில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் ராகுல் காந்தி ‘ஆத்மபரிசோதனை’ செய்ய வேண்டிய நேரம் இது!    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .