Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
கடந்த மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதிகள் தம்மிடமிருந்த குண்டுத்துளைக்காத வாகனங்கள் உள்ளிட்ட அரச வாகனங்களை அரசாங்கத்திடம் மீண்டும் கையளித்தனர்.
இதனையடுத்து, அவர்களுக்குக் குண்டு துளைக்கா வாகனங்கள் அவசியமாயின் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கலாம் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அவற்றை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். தமது அமைச்சின் கீழியங்கும் அச்சுறுத்தல் மதிப்பீட்டுக் குழவிடம் அக்கோரிக்கைகளைச் சமர்ப்பித்து அக்கோரிக்கைகளைப் பற்றி முடிவு எடுப்பதாக இப்போது அமைச்சர் விஜேபால கூறியிருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த போக்குவரத்து போன்ற வசதிகள் இரத்துச் செய்யப்படும் என்றே ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. அவர்களது பாதுகாப்பு ஏற்பாடுகள் நீக்கப்படும் என்று அச்சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. பாதுகாப்பு என்னும் போது பாதுகாப்புக்கான ஆட்கள், ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் உள்ளடங்கும் என்பது பொது அறிவாகும்.
அவ்வாறு இருக்க, முன்னாள் ஜனாதிபதிகள் எதற்காக தம்மிடம் இருந்த பாதுகாப்புக்கான வாகனங்களை அரசிடம் மீண்டும் கையளித்தனர்? இந்த விடயம் தெளிவில்லாமல் இருந்தால் அவர்கள் அவற்றை கையளிப்பதற்கு முன்னர் பாதுகாப்புத் துறையினருடன் கலந்துரையாடி இருக்க வேண்டும்.
ஏனெனில், அரசியலில் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதிகள் போன்ற முக்கியஸ்தர்களின் பாதுகாப்பில் ஒரு நிமிட வெற்றிடமாவது இருக்கக் கூடாது.
அதேவேளை, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தும்போது, பாதுகாப்பு விடயம் தொடர்பில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அமைச்சருக்கும் பாதுகாப்புத் துறையினருக்கும் புரிந்துணர்வு இருக்க வேண்டும். அவர்களிடம் வாகனங்களைப் பெற்றுக்கொண்டு பின்னர், அவை வேண்டுமா? என்று கேட்பது முறையாக இருக்க முடியாது.
இப்போது இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் குண்டு துளைக்காத வாகனங்கள் வேண்டும் என்கிறார்கள். அமைச்சர் அச்சுறுத்தல் மதிப்பீட்டுக் குழு முடிவு எடுக்கும் வரை காத்திருக்குமாறு கூறுகிறார். உண்மையிலேயே அவர்களுக்குப் பாரதூரமான அச்சுறுத்தல்கள் இருக்குமாயின், தற்போதைய பாதுகாப்பற்ற நிலைமையின் கீழ் எதுவும் நடக்கக் கூடும். எனவே, அவ்வாகனங்களை கையேற்பதற்கு முன்னர் அமைச்சு அச்சுறுத்தல் மதிப்பீட்டை மேற்கொண்டு இருக்க வேண்டும்.
சில அரசியல்வாதிகள் தமது வாகனத்துக்கு முன்னாலும் பின்னாலும் பரிவார வாகனங்கள் செல்வதை விரும்புகிறார்கள். பாதுகாப்பு அவசியம் என்பதைப் பார்க்கிலும் பகட்டுக்காகவே அவர்கள் அதனை விரும்புகிறார்கள். அனேகமாக அரச பணத்தில் அவ்வாறு பரிவார வாகனங்களை வைத்திருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். எனவே அச்சுறுத்தல் மதிப்பீடு அவசியம் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆயினும் அம்மதிப்பீட்டை எப்போது செய்ய வேண்டும் என்பது முக்கியமான விடயமாகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குண்டு துளைக்காத வாகனத்தை அரசிடம் கையளித்ததாக அவரது கட்சியினரே ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படுத்தும் எதிரிகள் இருந்தால் அவ்வாறு தெரிவித்ததன் மூலம் அவர்களே அந்த எதிரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர். உண்மையிலேயே அவருக்கு உயிர் ஆபத்து இருந்தால், இது போன்ற தகவல்களை வெளியிடுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், அவர்கள் போதிய பாதுகாப்பு வழங்க இணங்காவிட்டால் அதனை மக்கள் முன் அம்பலப்படுத்துவது பிழையெனக் கூற முடியாது. ஆனால், அதுவும் ஆபத்தை வரவழைப்பதாக அமையலாம்.
பாதுகாப்பு தவிர்ந்த முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு இருந்த வசதிகளை நீக்கி விடுவது பிழையல்ல. ஏனெனில், அரசியல்வாதிகளை மக்கள் பராமரிக்கத் தேவையில்லை.
எனினும், ஒரு தலைவர் பதவியில் இருந்தாலும் ஓய்வு பெற்றாலும் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்குமாயின், அவருக்கு ஆகக்
கூடுதலான பாதுகாப்பு வழங்குவது ஒரு அரசாங்கத்தின் கடமையாகும்.
பாதுகாப்பு என்பது, அவர்கள் உத்தியயோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, மட்டும் வழங்கப்படும் சலுகையல்ல. ஏனெனில், அவர் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடாத நேரங்களிலும் அச்சுறுத்தல் அவரை தேடி வரலாம்.
ரணில் விக்ரமசிங்க தமது மனைவியின் பட்டமளிப்பு விழாவுக்குச் செல்வது உத்தியோகபூர்வ பயணமாக இருந்தாலும், தனிப்பட்ட பயணமாக இருந்தாலும், அங்கும் அவருக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமது தாயைப் பார்க்க தம்புத்தேகமவுக்குச் செல்வது தனிப்பட்ட பயணமாக இருந்தாலும், அங்கு அவருக்கும் அரசு பாதுகாப்பு வழங்கு வேண்டும்.
முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு அரசியல் மயமாக்குவதன் விளைவை நாடு பலமுறை கண்டுள்ளது. அதனால் குறிப்பிட்ட அரசியல்வாதி மட்டுமன்றி, ஏனையவர்கள் பலரும் மோசமாகப் பாதிக்கப்படக்கூடும். முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல்களான லக்கீ அல்கம் மற்றும் ஜானக்க பெரேரா எதிர் நோக்கிய பிரச்சினைகள் அதற்கு சிறந்த உதாரணமாகும்.
இவ்விருவரும் வடக்கிலும் தெற்கிலும் கிளர்ச்சிக்காரர்களின் கடும் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டவர்களாவர். ஏனெனில், அவர்கள் இராணுவ அதிகாரிகள் என்ற ரீதியில் அடக்குமுறைகளின்போது, மிகவும் கடுமையாகவும் கொடூரமாகவும் நடந்து கொண்டவர்களாவர்.
1999ஆம் ஆண்டளவில் லக்கீ அல்கம் ஓய்வுபெற்று ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டார். அவர் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிடவும் இருந்தார். 1999ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க இரண்டாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, அவர் ஐ.தே.க. மேடையில் மிக முக்கிய பேச்சாளராக சந்திரிகாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்.
அவர் ஐ.தே.கவில் இணைந்த உடன் சந்திரிகாவின் அரசாங்கம் அவருக்கு வழங்கியிருந்த பாதுகாப்பைக் குறைத்தது. புலிகள் அமைப்பு தன்னை பரம எதிரியாக கருதியதால், தனது உயிர் அச்சுறத்தலை எதிர்நோக்கியிருப்பதாகவும் எனவே, தனது பாதுகாப்பைப் பலப்படுத்துமாறும் அவர் பலமுறை உரிய அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
ஆயினும், அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை. அவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தில் ஐ.தே.கவின் இறுதி கூட்டம் ஜா-எலையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது, புலிகளின் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. அதில் அவரும் மேலும் பலரும் கொல்லப்பட்டனர்.
அதற்கு ஒரு மணித்தியலத்துக்குப் பின்னர் கொழும்பு நகர மண்டப மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா படுகாயமடைந்து ஒரு கண்ணை இழந்தார்.
புலிகளுக்கு எதிரான பல சண்டைகளில் வெற்றியீட்டிய ஒரு இராணுவ அதிகாரி தான் மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா. அவரும் ஓய்வு பெற்றதன் பின்னர், ஐக்கிய தேசிய கட்சியில் சேர்ந்தார். 2008ஆம் ஆண்டு நடைபெற்ற வட மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளராக அவர் போட்டியிட்டார்.
அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் குறைத்தது. எனவே, புலிகள் தன்னை கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல் இருக்கிறது என்ற அப்படையில், அவர் தனக்கு போதிய பாதுகாப்பு வழங்க கட்டளையிடுதாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
அதன் பிரகாரம், அவரது பாதுகாப்புக்காக ஏழு பொலிஸ் அதிகாரிகளை வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மஹிந்தவின் அரசாங்கம் அந்த பாதுகாப்பை வழங்கிய போதிலும், மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அதனை மீண்டும் வாபஸ் பெற்றது.
இந்த நிலையில், 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் 6ஆம் திகதி அனுராதபுரம் ஐ.தே.க. அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில், இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஜானக்க பெரேரா மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட
27 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 90க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அந்த மஹிந்த ராஜபக்ஷ தான் இப்போது புலிகள் இல்லாத நிலையிலும் குண்டுத் துளைக்காத வாகனம் கேட்கிறார்.தற்போது புலிகள் இயக்கம் இலங்கையில் இயங்குவதற்கான எவ்வித தகவலும் இல்லை.
ஆயினும், எவருக்கும் ஆபத்து இல்லை என்று கூற முடியாது. தீவிரவாத அல்லது பயங்கரவாத இயக்கங்கள் இல்லாவிட்டாலும், உலகில் எங்கும் எந்நேரத்திலும் “ஒற்றை ஓநாய் தாக்குதல்கள்” (Lone wolf attacks) இடம்பெறலாம் என்று 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலை அடுத்து அப்போதைய இராணுவ தளபதியான ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க கூறினார். எனவே, முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் இல்லை என்று கூற முடியாது.
1971ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சியின்போது, கதிர்காமத்தில் பிரேமவதி மனம்பேரி என்ற பாடசாலை மாணவி இராணுவத்தினரால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பகிரங்கமாக நிர்வாணமாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அதற்காக இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு 16 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
அதில் ஒருவர் சிறையில் மரணமானார். மற்றவர் 16 வருடங்களுக்குப் பின்னர்
சிறையில் இருந்து விடுதலையான நாளே இனந்தெரியாத நபரொருவரால் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.
வடக்கு, கிழக்கில் ஆயிரக் கணக்கானவர்கள் அநாவசியமாகப் படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையிலும், முன்னைய தலைவர்களின் உதவியில் பாதாள கோஷ்டிகள் வளர்ந்துள்ள நிலையிலும் முன்னாள் ஜனாதிபதிகளின் அச்சம் புரிந்துகொள்ளக் கூடியதாகவே இருக்கிறது.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago