2025 மே 02, வெள்ளிக்கிழமை

வடகொரியா – ஐ. அமெரிக்கா: புதிய சகாப்தம்?

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனகன் முத்துக்குமார்

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வட கொரியா கூடுதல் அணு ஆயுதங்களை உருவாக்குகிறதா என்பது பற்றி தனக்குத் தெரியாது என்று கூறுகிறார். ஆனால் அவர் மேலும் இது பற்றி கூறும்போது, வடகொரியா அவ்வாறான ஒரு செயல்பாட்டில் இறங்காது என நான் நம்புகின்றேன் என்கிறார். இது ஒரு தர்க்கரீதியான, சிந்தனைமிக்க அல்லது விவேகமான நிலைப்பாடு அல்ல என்பது ஒரு புறமிருக்க, குறிப்பாக இதுபோன்ற நேரம் இராணுவ-இராஜதந்திர ரீதியில் ஐக்கிய அமெரிக்க - வடகொரிய நிலைப்பாடுகள் ஒரு ஸ்திரநிலையில் இல்லை என்பதையே காட்டுகின்றது. ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரியாவின் மேம்பட்ட பொருளாதார உதவிக்கான ஐக்கிய அமெரிக்க வாக்குறுதிகளால் உந்துதல் பெறுவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்று வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னை தொடர்ந்து நம்பும் வரையில், குறித்த இந்நிலைப்பாட்டில் இருந்து ஜனாதிபதி ட்ரம்ப் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை.

வடகொரியாவில் தலைவர் கிம்மைப் பொறுத்தவரை, இது தனிப்பட்ட உறவை ஜனாதிபதி ட்ரம்ப்புடன் பேணுதலின் தேவையை அதிகரித்த போதிலும், சர்வதேச சட்டவரையறைக்குள் வடகொரியாவை கட்டாயப்படுத்துவதன் தேவைகளைத் தவிர்த்து விடுகிறது.

இந்நிலை நீண்டகால ஐக்கிய அமெரிக்காவின் வடகொரியா மற்றும் கொரிய தீபகற்பத்தின் மீதான தனது வெளிவிவகார கொள்கை மற்றும் மூலோபாய போக்கை தணிக்கை செய்வதில் செல்வாக்கு செலுத்திவிடும் என்பதை ஐக்கிய அமெரிக்க வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்கின்றனர்.

ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களை பொறுத்தவரை, அவர்கள், ஜனாதிபதி ட்ரம்ப் தனது சொந்த தனிப்பட்ட விருப்பங்களை விட ஐக்கிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்ய, ஜனாதிபதி தனது வட கொரியா மூலோபாயத்தை மாற்ற வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள். குறிப்பாக, அக்கொள்கை வகுப்பாளர்களை பொறுத்தவரை இது மிகவும் வெளிப்படையாக பகுப்பாய்வு மற்றும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாயத்தைக் குறிக்கிறது. இன்னும் துல்லியமாக, அவர்களைப் பொறுத்தவரை, ஜனாதிபதி ட்ரம்ப், வட கொரியாவுடன் நீண்டகால அணுசக்தித் தடுப்பை அடைவதற்கான வழிகளில் மேலும் முறையாகவும் யதார்த்தமாகவும் சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்றே கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், குறித்த யதார்த்தமான சிந்தனைகள், குறிப்பாக நட்பு - பகை பாராட்டும் எதிரிநாட்டுடன் தொடர்ச்சியாக பேணுதல் அவசியமானது என்றும், குறிப்பாக, வடகொரியாவை பொறுத்தவரை, வடகொரியா தனது அணு ஆயுதங்களின் எந்தப் பகுதியையும் அல்லது அதனுடன் தொடர்புடைய மூலோபாய அபிலாஷைகளையும் சரணடையச் செய்வதில் எந்த அர்த்தமுள்ள சூழ்நிலைகளும் இல்லை என்ற நிலையில் யதார்த்தத்தை உணர்தல் மற்றும உலகளாவிய செல்வாக்கு மற்றும் பிராந்திய வல்லரசுத்தன்மையை தீர்மானிக்கும் மிகத் தெளிவான அடித்தளமாக இந்த அணுஆயுத கட்டமைப்பு இருத்தல், அமெரிக்கா வடகொரியா மீதான ஒரு நிலையான கொள்கை ஒன்றுக்கு வரவேண்டிய கட்டாயத்தை சுட்டிக்காட்டுவதாக குறித்த கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர்.

ஆயினும், குறித்த யதார்த்தமான கொள்கை மட்டும் இந்நிலையில் போதாது. மாறாக, இன்னும் வரவிருக்கும் எந்தவொரு பேச்சுவார்த்தைகளின் போதும், இரண்டு நாடுகளினதும் இராணுவ இராஜதந்திரக் கொள்கைகளை மிகைப்படுத்தவோ அல்லது குறைத்து மதிப்பிடுதலையோ தவிர்த்தல் மிகவும் அவசியமானது.

எது எவ்வாறாயினும், வணிக ரீதியான கட்டட பேரம் பேசுவதை அடிப்படை வியாபாரமாகக் கொண்டு தனது ட்ரம்ப் என்னும் வியாபாரத்தை கட்டியெழுப்பிய ஜனாதிபதி ட்ரம்ப், அணு இராஜதந்திரத் கொள்கைகளை தேவையற்றதாக கருதி புறக்கணிப்புகளைச் செய்வது சர்வதேச பாதுகாப்புக்கு முரணானது என்பதை ஏனைய நாடுகள் உணராமல் இல்லை. குறிப்பாக, வடகொரியாவின் அணுஆயுத க்கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு சார்ந்த விருத்தியை நன்கு புரிந்து கொள்ளாத எந்த ஒரு அரசாங்கமும், வடகொரியாவுடன் நேரடியாக நட்பு நிலையை பாராட்ட தயக்கம் கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.

மறுபுறம், ஈரான், வெனிசுவேலா, இந்திய - பாகிஸ்தான் அண்மைய காஷ்மிர் பிரச்சினை, ரஷ்யாவின் இணையவழி போரியல் முறைமை பற்றி பலவாறாக பேசும் சர்வதேச சமூகம், அண்மையில் வடகொரியாவின் நிகழ்ச்சிநிரலை பெருமளவில் கண்டுகொள்ளவில்லை என்பது ஒரு புறமிருக்க, மறுபுறம், அந்நிலையை சாதகமாக்கி வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளை கடந்த இரண்டு வாரங்களுக்குள் நடாத்தியிருந்தமை ஐக்கிய அமெரிக்க தலைமையிலான வடகொரியா மீதான தாக்கம் மற்றும் கொள்கை வகுப்பில் ஏற்பட்ட இடைவெளி என்றே பார்க்கப்படவேண்டும்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .