2024 மே 21, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் ‘சிங்கள - பௌத்தம்’

என்.கே. அஷோக்பரன்   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-130)

சர்வகட்சி மாநாட்டில் அமீரின் உரை

சர்வகட்சி மாநாட்டில் அமிர்தலிங்கம் ஆற்றிய உரையிலே, அமரபுர பீடத்தின் பீடாதிபதியான மடிஹே பஞ்ஞாசீக மகாநாயக்க தேரர், வடக்கு - கிழக்கு எங்கும், 276 பௌத்த வணக்க ஸ்தலங்கள் பரவிக்கிடப்பதாகவும் அவ்விடங்களில் எல்லாம் பௌத்த பிக்குகள் குடியமர்த்தப்பட வேண்டும் என்பதுடன், அத்தலங்களைச் சுற்றிலும் பௌத்தர்கள் குடியேற்றப்பட வேண்டும் என்பதுடன்,  இதே விடயத்தை, அகழ்வாராய்ச்சி ஆணையாளர் சிறிசோமவும் பதிவு செய்திருந்தமையை மேற்கோள்காட்டிய அமிர்தலிங்கம், இது பற்றிய தனதும், தமிழ் மக்களினதும் நிலைப்பாட்டைப் பதிவு செய்திருந்தார்.  

“இத்தகைய குடியேற்றம், வடக்கு - கிழக்கிலே நிகழ்த்தப்படுமானால், வடக்கு - கிழக்கிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினர் ஆக்கப்படுவார்கள். அதன் பின்னர், தமிழ் மக்கள் மீண்டும் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டால், அவர்களை அள்ளிச் சென்று கொட்ட, ஓரிடமும் இருக்காது. வடக்கு, கிழக்கில் கூட தமிழ் மக்கள் அகதி முகாம்களிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டார்.   

1983 கறுப்பு ஜூலை இனஅழிப்பின் பின்னர், கொழும்பில் ஆங்காங்கு ஏற்படுத்தப்பட்ட அகதிமுகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் கப்பல் மூலம் வடக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையையே அமிர்தலிங்கம் இவ்வாறு சுட்டிக் காட்டியிருந்தார்.   

தமிழ்ப் பௌத்தர்கள்

“வடக்கு, கிழக்கிலே பௌத்த தலங்கள் மற்றும் அதன் சிதைவுகள் இருப்பதைச் சுட்டிக் காட்டி, பௌத்த தலங்கள் இருப்பதால் அது சிங்களவர்களது பிரதேசம்; எனவே, அங்கு பௌத்த மக்களை, அதாவது, சிங்கள பௌத்த மக்களைக் குடியேற்ற வேண்டும் என்று சொல்லும் பிக்குகள் ஒன்றை மறந்துவிட்டார்கள்.   

கி.பி 3ஆம் - 4ஆம் நூற்றாண்டுகளில் முழுத் தமிழ்நாடும், பெரும்பான்மைத் தமிழர்களும் பௌத்தர்களாகவே இருந்தனர். அனைவரும் அறிந்த தமிழ் இலக்கியமான மணிமேகலை மற்றும் சிலபல இலக்கியங்களே இதற்குப் பெருஞ்சான்று. வடக்கு, கிழக்கிலே இருந்த இந்தப் பௌத்த தலங்கள் தமிழ் பௌத்தர்களால் வழிபடப்பட்டவை.   வடக்கு, கிழக்கும் சிங்களவர்களுடைய பகுதி என்று உரிமை கோருவதானது, இன்று யூதர்கள் பாலஸ்தீனத்தை உரிமை கோருவதற்குச் சமனானது” என்று அமிர்தலிங்கம் குறிப்பிட்டார். 

யூதர்கள், அரபு மக்களை அரபு மக்களது நிலத்திலிருந்தும் வீடுகளிலிருந்தும் விரட்டுவது போன்ற கொள்கையையே அடுத்தடுத்து வரும் இலங்கை அரசாங்கங்களும் கையாள்கின்றன என்று அமிர்தலிங்கம் ஆதங்கப்பட்டார்.   

தமிழும் பௌத்தமும்

இலங்கை வரலாற்றில், பெரிதும் பேசப்படாத விடயங்களுள் ஒன்று, தமிழ் பௌத்தம். மௌரியச் சக்கரவர்த்தியான அசோகனின் காலத்திலேயே சோழ, பாண்டிய மற்றும் தம்பபன்னி (இலங்கை) ஆகியவற்றுக்கு பௌத்தம் கொண்டு செல்லப்பட்டதாக கி.மு 258இற்குரிய கல்வெட்டொன்று தௌிவாக உரைப்பதாக தமிழ் நாட்டில் பௌத்தம் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையில் பேராசிரியர் ஷூ ஹிகோசகே குறிப்பிடுகிறார்.   

தமிழ் நாட்டிலிருந்து, கடல் மார்க்கமாக பௌத்தம் இலங்கைக்கு சென்றிருக்கலாம் என்பது அவரது கருத்து. தமிழ் நாட்டில் காஞ்சிபுரம், காவிரிப்பட்டிணம், உறையூர், மதுரை என்பன பௌத்தத்தின் மத்திய நிலையங்களாக இருந்தன என்பதுடன் பாளி மொழிக் கல்வியிலும் முக்கியம் பெற்றிருந்தன.   

இதைவிடவும், புத்தமங்களம், சங்கமங்களம், கும்பகோணம், ஆலங்குடிப்பட்டி, சங்கமங்கை, திருப்படிரிப்புலியூர் போன்ற பல்வேறு இடங்களிலும் பௌத்தம் பரவிப் பெருகியிருந்தது. இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விடயம். தமிழ்நாட்டிலே தேரவாத மற்றும் மஹாயான பௌத்தம் இரண்டுமே சிறப்புற்றிருந்தன.   

புத்தகோச, புத்ததத்த, தம்மபால ஆகிய பௌத்த அறிஞர்கள் தமிழ் நாட்டிலிருந்த பௌத்த அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தனர் என்றும் பேராசிரியர் ஹிகோசகே குறிப்பிடுகிறார். இலங்கையில் பௌத்தத்திற்கு அருந்தொண்டாற்றிய புத்தகோச மற்றும் தம்பபால ஆகியோர் தமிழ் நாட்டைச் சேர்ந்த பௌத்த துறவிகளாவர்.   

தமிழ் பௌத்த பிக்குகள், தமிழ் மொழியை அல்லாது பாளியிலே தமது படைப்புகளை எழுதியமைக்கு, புத்தரின் மொழியாகப் பாளி இருந்தமையும் அதனால், பௌத்த மதத்தின் மொழியாக பாளி அறியப்பட்டமையும் முக்கிய காரணம் என்பது ஒருசாராரின் கருத்து. 

ஆயினும், தமிழிலே பௌத்தர்களால் படைக்கப்பட்ட பௌத்த கருத்துகளைக் கூறும் நூல்கள் கடைச்சங்ககாலம் அளவுக்குப் பழையன. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான ‘மணிமேகலை’ இதில் பிரதானமானது.   

‘மணிமேகலை’, மணிபல்லவம் என்ற தீவைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இது இலங்கையின் நயினாதீவுதான் (சிங்களத்தில் நாகதீப) என்று சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இதைவிடவும், ஐம்பெருங்காப்பியங்களில் மற்றொன்றான ‘குண்டலகேசி’ முழுமையாக கிடைக்கப்பெறாவிடினும், அதில் கிடைத்த பகுதியொன்றில் பௌத்தம் கூறும் கருத்துகள் வௌிப்பட்டிருப்பதைக் காணலாம் என்பதைச் சில அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.   

இதைவிடவும் ‘வீரசோழியம்’ என்ற இலக்கண நூலானது, தமிழ் மொழியுடன் சமஸ்கிருதக் கலப்பு ஏற்படும் போதுள்ள இலக்கண விதிகள் பற்றிக் கூறும் நூலாக ‘புத்தமித்திரர்’ என்பவரால் சோழர் காலத்தில் எழுதப்பட்டமையும் அதன் பாயிரத்தில், பௌத்த மதம் பற்றிக் குறிப்புள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.   

இலங்கையில், குறிப்பாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ததாகவும், அதில் தேரவாத பௌத்தர்கள் மற்றும் மஹாயான பௌத்தர்கள் ஆகிய இருபிரிவினரும் உள்ளடக்கம் என்பதும் தமிழ் பௌத்தம் பற்றி ஆராய்ந்தவர்களுடைய கருத்தாகும்.   

ஆகவே, தென்னிந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, தமிழ் பௌத்தர்கள் இருந்தமையை எவராலும் மறுக்க முடியாது. ஆனால், இந்த வரலாறு தேடப்படவில்லை; பாடசாலைகளில் கற்பிக்கப்படவில்லை. ஒருவகையில் பார்த்தால் இது மறக்கப்பட்டிருக்கிறது, சிலர் மறைக்கப்பட்டிருக்கிறது என்று கூடச் சொல்வார்கள்.    

சிங்கள-பௌத்த அடையாளம்

கி.பி 7ஆம் நூற்றாண்டளவில் சைவ-வைணவ பக்தி இயக்கத்தின் எழுச்சியுடன் பௌத்த, சமண (ஜைன) மதங்களின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் குன்றத் தொடங்கி, அது தமிழ் நாட்டில் முற்றாகவே இல்லாது போகிறது. 

இலங்கையில், ‘தமிழ் பௌத்தம்’ எப்போது இல்லாது போனது என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இந்த இடத்தில், ‘சிங்கள-பௌத்தம்’ என்ற அடையாளம் எப்போது உருவானது என்ற கேள்விதான் முக்கியம் பெறுகிறது. ஏனெனில், பௌத்தர்கள் என்பவர்கள் சிங்களவர்கள்தான் என்ற கருதுகோள் முன்வைக்கப்படும் போது, இந்த அடையாளத்தின் வரலாறு முக்கியமாகிறது. இலங்கையின் வரலாறே பெருங்குழப்பம் மிக்கது.

அதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று அது ‘மஹாவம்சம்’ என்ற படைப்பிலிருந்து ஊற்றெடுத்திருப்பதுதான். ‘மஹாவம்சம்’ என்பது அது எழுதப்பட்ட காலத்துக்கு ஏறத்தாழ 1,000 ஆண்டுகள் முன்பு நடந்த விடயம் பற்றிச் சொல்லும் ஒரு காவியம். மஹாவம்சத்தை அது எழுதப்பட்ட காலத்தின் அரசியல், சமய, சமூக, இலக்கிய சிந்தனையின் பிரதிபலிப்பான இலக்கியமாகப் பார்த்தல் ஏற்புடையது, ஆனால், அதுகூறும் கதையை வரலாறாகக் கற்பிதம் செய்து கொள்வதில் நிறையச் சிக்கல்களுண்டு.   
இலங்கையின் வரலாறு விஜயனுடன் தொடங்குகிறது என்கிறது மஹாவம்சம், ஆனால், விஜயன் வருகை என்பதே ஒரு கட்டுக்கதை என்று சொல்லும் சாராரும் புலமைத்தளத்தில் உண்டு. விஜயனின் வருகையோடு உருவான சிங்கள இனம், அதன்பின் சில நூற்றாண்டுகள் கழித்து, தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்த பௌத்தம், இலங்கையில் இருந்த தமிழர்களும் தமிழ் பௌத்தமும், காலத்தால் மிகப் பின்னர் உருவாக சிங்கள மொழி என்ற வரலாற்றின் படிகளில், சிங்கள-பௌத்தம் என்ற அடையாளம் எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு வரலாற்றறிஞரான பேராசிரியர் லெஸ்லி குணவர்த்தன, மொழி, இனம், மதம் என்பவை கலந்த சிங்கள-பௌத்த அடையாளம், ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் உருவானது என்கிறார்.   

அவரது கருத்தப்படி, நவீன சிங்கள-பௌத்த அடையாளமானது, வரலாற்றைப் புதிய பாணியில் வாசிப்புச் செய்வதனூடாக உருவாக்கப்பட்டதாகச் சொல்கிறார். பிரித்தானிய கொலனித்துவத்தின் கீழ் பெரும்பான்மையோரை ஒன்றிணைக்கும் தேசியத்துவத்தின் எழுச்சியாக, சிங்கள பௌத்த தேசியம் கட்டியெழுப்பப்பட்டது என்பது குணவர்த்தன உள்ளிட்ட சிலரின் கருத்தாகும். ஐரோப்பாவில் எழுச்சி பெற்ற, ‘ஆரிய’ கருத்துருவாக்கமும், சிங்களமொழியின் ஆரிய அடிப்படைகளை முதலாகக் கொண்டு, சிங்கள இனம், ஆரிய இனம் என்ற அடையாளம் கட்டி எழுப்பப்பட்டது.   

மஹாவம்சம் முன்னிலை பெற்றதோடு, குறிப்பாக, தமிழ் மன்னனான எல்லாளனை வெற்றி கொண்ட சிங்கள பௌத்த மன்னன் துட்டகைமுனு, முழு நாட்டையும் ஒன்றிணைத்து, பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதான கதை, மஹாவம்சத்தினூடாக முன்னிலைப்படுத்தப்பட்டதும், இவற்றினூடாக, சிங்கள பௌத்த தேசிய எழுச்சி உருவாக்கப்பட்டதையும் லெஸ்லி குணவர்த்தன போன்ற அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 19 நூற்றாண்டின் பின்னர் கட்டியெழுப்பப்பட்ட பொது வரலாற்று நம்பிக்கையின்படி, எல்லாளன் -துட்டகைமுனு போர் என்பது தமிழ், சிங்கள முரண்பாட்டின் போர் என்று மேலோட்டமாகச் சொல்லிவிட முடியாது என்கிறார் கே.எம்.டி.சில்வா.   

மஹாவம்சத்தைப் ‘பலம்வாய்ந்த கட்டுக்கதை’ என்று விளிக்கும் கே.எம்.டீ.சில்வா, எம்முன்னுள்ள வரலாற்று ஆதாரங்களானவை, எல்லாளனைப் பல சிங்கள மன்னர்களும் ஆதரித்ததாகவும், துட்டகைமுனுவின் அரசியல் அபிலாஷைகள் மீது, ஐயம்கொண்ட பல சிங்கள மன்னர்களையும் துட்டகைமுனு, எல்லாளனை எதிர்கொள்ள முன்பு, எதிர்கொள்ள வேண்டி வந்ததாகவும் குறிப்பிடுகிறார்.   

இலங்கையில், சிங்கள - தமிழ் எதிர்ப்புவாதமானது, தென்னிந்தியாவில் தீவிர இந்து எழுச்சியின் (பக்தி இயக்க எழுச்சியின்) பின்னரான, பௌத்த இல்லாதொழிப்புடன் உருவாகியிருக்கலாம் என குணவர்த்தன ஊகிக்கிறார். அங்கு வளர்ந்த, பௌத்த வெறுப்பின் தொடர்ச்சியின் விளைவால், தென்னிந்தியத் தமிழர்கள் மீதான ஐயமும், எதிர்ப்பும் இலங்கையில் வலுத்திருக்கும் எனவும், அந்த ஏழாம் நூற்றாண்டு வரை இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும் மற்றும் பல பகுதிகளுக்கும் பொதுவாக இருந்த பௌத்த அடையாளம், அதன் பின்னர்தான் இலங்கைக்குரியதாக மாறியிருக்கும் என்றும் தெரிவிக்கிறார்.   

சோழரின் இலங்கை மீதான படையெடுப்பும், கைப்பற்றலும், இலங்கையில் சோழர் ஆட்சியும், ‘சிங்கள-பௌத்தர்’ - ‘தமிழ் சைவர்’ என்ற முரண்பாட்டைத் தோற்றுவித்திருக்கும் என்றும் சிலர் ஊகிக்கின்றனர். அநுராதபுரம், பொலன்னறுவைக் காலங்களின் பின்னரான கண்டி இராச்சியத்தின் வரலாறு, இவற்றை விடச் சிக்கலானது. அங்கு நிலவிய பௌத்த-இந்து உறவுநிலை, அதுவும் நாயக்க மன்னர்கள் கண்டி இராச்சிய ஆட்சி பீடம் ஏறியதற்குப் பின்னரான 75 வருடகால உறவு நிலை மிகச் சிக்கலானது.   

இந்தக் காலப்பகுதியில், பல நாயக்க சம்பிரதாயங்கள் கண்டி இராச்சியத்துக்குள் புகுந்திருந்தாலும், இதே காலப்பகுதியில்தான், நாயக்கர்களுக்கு எதிரான எழுச்சியும் சில சிங்களத் தலைவர்களால் உருவாக்கப்படுவதைக் காண்கிறோம். அவர்களின் துணையோடுதான், பிரித்தானியர்கள் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றினார்கள்.   

சிங்கள-பௌத்த அடையாளம் பற்றிகட கருத்துரைக்கும் பேராசிரியர் ஸ்ரான்லி ஜே தம்பையா, “இலங்கைத் தீவின் ஆட்புலம் முழுவதும் ஒன்றுபட்ட, சிங்கள இனமும், சிங்கள மொழியும் பௌத்தமும் இணைந்த பொற்கால ஆட்சி துட்டகைமுனுவின் காலத்திலும் இருக்கவில்லை; மஹாவம்சம் எழுதப்பட்ட காலத்திலும் இருக்கவில்லை. ஆனால், மக்களைச் சிங்கள மயமாக்குதலும், பௌத்த மயமயாக்குதலும் நூற்றாண்டுகளினூடாக இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் செயற்பாடு என்பது மட்டும் உண்மை” என்றும் அவர் குறிப்பிடுகிறார். அப்படியானால் 19 ஆம் நூற்றாண்டில் அநகாரிக தர்மபால உள்ளிட்டவர்களினால் சிங்கள பௌத்த அடையாளம் எழுச்சியுறச் செய்யப்பட என்ன காரணம்?  


(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .