R.Tharaniya / 2025 ஜூன் 12 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தம் தவம்
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலையடுத்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழ்த் தேசியக் கட்சிகளில் முதன்மையானதும் தாய் கட்சி என்றும் அழைக்கப்படும் இலங்கை தமிழரசுக் கட்சி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம்
(ஈ.பி.டி.பி.) ஆதரவு கேட்டு அக்கட்சியின் அலுவலகப் படி ஏறியமை தமிழ்த் தேசிய அரசியலிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (ஈ.பி.டி.பி.) தமிழினத் துரோகிகள், ஓட்டுக்குழு, ஆயுதக்குழு, இராணுவ துணைக்குழு, தமிழ் இளைஞர், யுவதிகள் பலர் படுகொலை செய்யப்படவும் காணாமல்போகவும் காரணமானவர்கள், காட்டிக்கொடுப்பவர்கள் என்றெல்லாம் இதே தமிழரசுக் கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்டுத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்ட ஈ.பி.டி.பியிடமே ஆதரவு கேட்டு தமிழரசு கட்சி மண்டியிட்டுள்ளமை தமிழ் தேசியப் பரப்பில் மட்டுமன்றி, தமிழரசுக் கட்சிக்குள்ளும் கொதி நிலையை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தொகுதிவாரி, விகிதாசார முறைமையினால் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட நெருக்கடிகளினாலேயே தமது தமிழ்த் தேசிய முகமூடிகளைக் கழற்றி வைத்துவிட்டு, தமிழினத் துரோகிகள், ஒட்டுக்குழு, இராணுவத் துணைக்குழு என தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட,
ஒதுக்கிவைக்கப்பட்ட தரப்புக்களின் காலடி தேடித் சென்று உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஆதரவு கோரி சிரம் தாழ்த்தி தரம் தாழ்ந்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் மீது வசை பாடப்படுகின்றது.தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான பற்றுறுதியும் கொள்கைப் பிடிப்பும், இலட்சியமும் கொண்ட ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க
வரட்டுக் கௌரவமும் மேதாவித் தலைக்கனமும் ஆணவமும் தமிழரசிலுள்ள சில மூக்கு வீங்கியவர்களின் தமிழ்த் தேசிய மறுப்பும் இடம்கொடுக்காமையினால்தான் தங்களினாலேயே துரோகிகள் என பட்டம் சூட்டப்பட்டவர்களிடம் பதவி மோகத்தினால் பகை மறைந்து அடிபணிந்துள்ளது தமிழ்த் தேசியத்தின் தாய் கட்சியான தமிழரசுக் கட்சி. இது பதவிகளுக்கா தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் எந்தளவு கீழ்த்தரமான நிலைக்கும் தரம் இறங்குவார்கள், எந்தளவு கீழ்த்தரமான வேலைகளையும் செய்வார்கள் என்பதற்கான உதாரணமாகவும் மாறிப்போயுள்ளது.
உள்ளுராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைக்க ஏனைய தமிழ் தேசியக்கட்சிகள் ஆதரவளிக்கத் தயாராக இருந்த போதும் அவர்களுக்கு எந்தவொரு விட்டுக் கொடுப்பையும் செய்ய மறுத்து அவர்களை நிராகரித்து விட்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் (ஈ.பி.டி.பி.) தலைவர், டக்ளஸ் தேவானந்தாவை அவரது யாழ். நகரிலுள்ள ஸ்ரீதர் திரையரங்கு அலுவலகம் சென்று
ஆதரவு கோரியுள்ளார்.
இந்த சந்திப்பு விடயம் தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அதுமட்டுமன்றி, இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் ஒருவர் தன்னைச் சந்திப்பதற்குப் பல தடவைகள் முயற்சி செய்ததாகவும் அதன் பின்னரே சிவஞானம் சந்தித்து ஆதரவு கோரியதாகவும்
டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக கூறியுள்ளதன் மூலம், டக்ளஸ் தேவானந்தா தனது கொள்கையில் இன்று வரை உறுதியாகவுள்ள நிலையில் தமிழரசுதான் பதவிகளுக்காகக் கொள்கையை விட்டுக் கொடுத்துள்ளதுடன், கட்சியையும் ஆதரவாளர்களையும் தமிழ் மக்களையும் காட்டிக்கொடுத்துள்ளது.
ஈ.பி.டிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சந்தித்தமையானது, கட்சியின் அடிமட்ட தொண்டனால் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மையில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் மற்றும் கருணா ஆகியோர் எங்களுடன் சேர்ந்து
தமிழரசுக் கட்சி பயணிக்க வேண்டும் என்றனர்.
எனவே, தற்போதைய சூழ்நிலையில் சி.வி.கே.சிவஞானம் அவர்களுடனும் கூட்டுச் சேர வாய்ப்புள்ளது. டக்ளஸ் தேவானந்தாவுடன் கூட்டணி சேர முடிவெடுத்த இவர்களுக்கு பிள்ளையான் - கருணாவுடன் கூட்டணி சேர்வது இலகுவானது என்று தமிழரசுக் கட்சியினர் புலம்புமளவுக்குத் தமிழரசின் தலைமை அரசியல் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
தமிழரசின் தலைவர்கள் இதுவரை கட்டிக் காத்துவந்த கட்சியின் கொள்கை, தமிழ்த் தேசியம் மீதான பற்றுறுதி, கட்சி மீதான விசுவாசம், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பவற்றை இன்று சதிகள், கழுத்தறுப்புகள், குழிபறிப்புக்கள் மூலம் தலைமைப் பதவிக்கு வந்தவர்கள் ஒட்டுமொத்தமாகக் கைவிட்டு, காட்டிக்கொடுத்து தமிழ் மக்களினால் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் கைகோர்த்து தமிழ் தேசியத்தையும் தமிழ் மக்களையும் புறந்தள்ளிச் செயற்படத் தொடங்கியுள்ளமை விரைவில் ‘இலங்கை தமிழரசுக் கட்சி’ என ஆல விருட்சத்தை அடியோடு சாய்த்து விடவுள்ளது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் ஒரு கட்சியாக ஒரு தடவை அப்போதைய தமிழரசுக் கட்சியினதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தலைவராகவிருந்த இரா.சம்பந்தனை சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட சில ஆசனங்களைக் கோரியபோது, ‘தமிழரசுக் கட்சி அஹிம்சாவளிக்கட்சி.
அதில் ஆயுதம் தூக்கியவர்கள் போட்டியிடமுடியாது. தேவையானால் தமிழரசு தலைமையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடம் ஆசனம் கேட்டுப்பாருங்கள்’ என கூறி முன்னாள் போராளிகளின் கோரிக்கையை நிராகரித்து அவர்களைத் திருப்பி அனுப்பியிருந்தார்.
இவ்வாறாக பாராளுமன்றத் தேர்தல் போட்டியிட வேட்பாளர் பட்டியலில் சில இடங்களைக் கேட்ட தமிழ் மக்களின் உரிமைக்காகப் போரிட்ட, அளப்பரிய தியாகங்களைச் செய்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளையே
‘ஆயுதம் தூக்கியவர்கள்’ என்ற காரணம் காட்டி, தமிழரசின் தலைமை நிராகரித்த நிலையில்தான் தமிழின போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த, இராணுவத்துடன் இணைந்து ஆயுதக் குழுவாக செயற்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈ,.பி.டி.பியுடன் ஆதரவுடன் ஆட்சியமைக்க அவர்களின் காலடிக்கே சென்றுள்ளது தற்போதைய தமிழரசின் தலைமை.
தலைமைப் பதவிக்கு தகுதியில்லாத தற்குறிகள் தலைவர்களானால் ஒரு கட்சியின் நிலைமை ‘விபசாரம்’ செய்வதற்கு ஒப்பானதாகிவிடும் என்பதற்கு
‘இலங்கை தமிழரசுக் கட்சி’ தான் தற்போது சிறந்த உதாரணம்.
27 minute ago
34 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
48 minute ago
1 hours ago