Janu / 2026 ஏப்ரல் 23 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு வங்க மாநிலம், ஜார்கிராமில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்திற்குள் வியாழக்கிழமை (23) அன்று அதிகாலையிலேயே காட்டு யானை ஒன்று புகுந்ததால், அங்கிருந்த அதிகாரிகளும் வாக்காளர்களும் பெரும் அச்சமடைந்தனர்.
தேர்தல் சமயங்களில் செல்வாக்குமிக்கவர்கள் வாக்குச்சாவடிகளில் தங்கள் பலத்தைக் காட்ட முயல்வது மேற்கு வங்க அரசியலில் வழக்கம். ஆனால், ஜார்கிராமில் நடந்ததோ முற்றிலும் வித்தியாசமான ஒரு பலப்பிரயோகம்! வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக ஜிதுஷோல் தொடக்கப் பள்ளிக்கு வரத் தொடங்கிய நிலையில், திடீரென ‘ராம்லால்’ என்ற காட்டு யானை பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. நிதானமாக அங்குமிங்கும் சுற்றி வந்த அந்த யானையைப் பார்த்ததும் அதிகாரிகள் மற்றும் வாக்காளர்கள் சிதறி ஓடினர்.
வாக்காளர்கள் நின்றுகொண்டிருந்த வரிசையைக் கடந்து சென்ற அந்த யானை, அங்கிருந்த வாகனங்களைச் சிறிது நேரம் நோட்டமிட்டது. இதனால், அப்பகுதியில் தேர்தல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுச் சற்று தாமதமானது. தகவலறிந்து லோதாஷூலி சரகத்திலிருந்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், மிகுந்த எச்சரிக்கையுடன் யானையைப் பாதுகாப்பான தூரத்திற்கு அப்புறப்படுத்தினர். அதன் பின்னரே வாக்குப்பதிவு மையம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இப்பகுதி காடுகளை ஒட்டி அமைந்துள்ளதால், தேர்தல் பாதுகாப்புப் பணியில் வனத்துறையினரும் முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அதன் காரணமாகவே அசம்பாவிதங்கள் இன்றி யானை விரைவாக அப்புறப்படுத்தப்பட்டது. ‘ராம்லால்’ என்று கிராம மக்களால் அழைக்கப்படும் இந்த யானை, அடிக்கடி ஊருக்குள் வரும் என்றும், அதற்கு மக்கள் உணவு வழங்கி மகிழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், தேர்தல் நாளில் அதன் ‘திடீர் வருகை’ அனைவரையும் ஒரு நிமிடம் அதிர வைத்தது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .