Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 நவம்பர் 05 , பி.ப. 01:45 - 1 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியாகியிருக்கின்றன. அதனை நினைவுபடுத்துவதற்காகவென ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல்கள், மிகவும் உச்ச நிலையை அடைந்திருக்கின்றன என்று சொல்லக்கூடியளவுக்குக் காணப்படுகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய அரசியல்வாதிகள், பத்தி எழுத்தாளர்கள், சமூக ஊடகப் பயனர்கள், அரட்டை இடங்களென, முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பிலான கருத்துப் பரிமாற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. 25 வருடப் பூர்த்தியையொட்டி மாத்திரம் இவை இடம்பெறுகின்றனவா என்றொரு கேள்வி இருந்தாலும், இவ்வாறான கலந்துரையாடல்கள், ஆரோக்கியமானவை. ஏனெனில், திறந்த கலந்துரையாடல்களும் கருத்துப் பரிமாற்றங்களுமில்லாத சமூகம், தேங்கி நிற்கவே செய்யும்.
அண்மைய நாட்களில், இரண்டு முக்கியமான அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்துத் தான், இவ்விடயத்தை மேலும் பேசுபொருளாக மாற்றியிருக்கிறது என்று கூறலாம். அதிலொன்று, அரியநேத்திரன் தெரிவித்த கருத்து. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை 'இனப் பாதுகாப்பு' என்று அவர் வர்ணிக்க, அங்கு இடம்பெற்றது 'இனச் சுத்திகரிப்பு என நான் முன்பிருந்தே சொல்லி வருகிறேன். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை' என்றவாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
கூட்டமைப்பிலிருக்கின்ற முற்போக்காளர் எனப் பொதுவாகக் கருதப்படும் சுமந்திரனின் கருத்து, முஸ்லிம் மக்களிடத்தே பெருமளவு வரவேற்பைப் பெற்றிருந்ததோடு, அவர் மீது விமர்சனம் கொண்டோர் கூட அவரது கருத்தைப் பாராட்டுமளவுக்குக் காணப்பட்டது. ஆனால், அதற்கு விமர்சனங்களும் இல்லாமலில்லை.
இருக்க, சுமந்திரனின் கருத்தின்போது, 'சட்ட வரைவிலக்கணத்துக்கமைய' என்ற பதத்தை அவர் தெளிவாகப் பயன்படுத்தியிருந்தார். ஆகவே, எவ்வாறான வரைவிலக்கணம் காணப்படுகின்றது என்பதைப் பார்ப்பது பொருத்தமானது. ஐக்கிய நாடுகள் சபையின் வரைவிலக்கணத்தின்படி, 'கட்டாயப்படுத்தல் அல்லது அச்சுறுத்தல் மூலமாக, வழங்கப்பட்ட பிரதேசமொன்றிலிருந்து இன அல்லது மதக் குழுவொன்றை வெளியேற்றி, அதை, இன ரீதியாக ஓரினமாக மாற்றுதல்' என இனச் சுத்திகரிப்பை வரைவிலக்கப்படுத்துகிறது.
இதை இலகுவாக, 'குறித்த பிரதேசத்தில் பலமாகக் காணப்படும் இனக் குழுவானது, அப்பிரதேசத்தை ஓரினத்துக்குரிய இடமாக மாற்றும் நோக்குடன் அங்குள்ள இன அல்லது மதக் குழுக்களைக் கட்டமைப்பு ரீதியாகக் கட்டாயப்படுத்தி வெளியேற்றுதல்' எனத் தெரிவிக்கலாம். மேற்கூறப்பட்ட வரைவிலக்கணங்களின்படி, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையானது இனச் சுத்திகரிப்பு என்ற சுமந்திரனின் கருத்துச் சரியாகிறது.
திடீரென எதற்காக இந்த விவாதம் அல்லது சொற்களில் என்ன இருக்கின்றன என்ற கருத்து எழலாம். இவ்வாறான சொற்பிரயோகங்கள், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான உறவைப் பாதிக்கலாம் எனவும் பழைய விடயங்களை மீண்டும் மீண்டும் ஆராய்வதென்பது, எந்த விதத்திலும் ஆரோக்கியமானதன்று என்ற கருத்தும், தமிழர்கள் பக்கத்திலிருந்து சில தரப்புகளால் முன்வைக்கப்படுகின்றது. அத்தோடு, முஸ்லிம்கள் கூட, இனச் சுத்திகரிப்பு என்ற வார்த்தையைக் கோரவில்லையெனவும் எனவே இவ்வார்த்தைப் பிரயோகம் தேவையற்றது எனவும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
முஸ்லிம் அரசியல் கட்சிகள் அண்மைக்காலத்தில், அவ்வாறானதொரு கோரிக்கையை முன்வைத்திருக்கவில்லையென்பது உண்மையானது தான். ஆனால், இவ்விடயத்தை முஸ்லிம்கள் பக்கத்திலிருந்து ஆராய்வதற்கு முன்னர், தமிழர்களின் பக்கத்திலிருந்து ஆராய்வது முக்கியமானது, அவசியமானது.
சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில், கட்டமைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட இனமாக, தமிழ் இனம் காணப்படுகின்றது. உச்சபட்ட ஒடுக்குமுறைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளான இனம் என்ற அடிப்படையில், பெரும்பான்மையினரால் அல்லது அதிகாரம் படைத்தவர்களால் மேற்கொள்ளப்படும் கொடூரங்களை நேரடியாக அனுபவித்தவர்கள் என்பதன் அடிப்படையில், ஒடுக்குமுறையில் வலிகளைப் புரிந்த இனமாக தமிழ் இனம் காணப்பட வேண்டும்.
ஆகவே, தமிழர்கள் மீது புரியப்பட்ட ஒடுக்குமுறைகள், கொடூரங்கள் பற்றிய கோரிக்கைகள் எழுப்பப்படும் அதேவேளையில், தமிழர்களால் அல்லது தமிழர்களின் பெயரால் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள், கொடூரங்கள் பற்றியும் ஆராய்வது தான் பொருத்தமானது.
அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு, அவ்வமைப்பு அழிக்கப்படும்வரை, உறுதியான மன்னிப்பொன்றைக் கோரியதில்லை. வன்னியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் 'மன்னிப்பு' என்ற வார்த்தையை அன்டன் பாலசிங்கம் பயன்படுத்தியிருந்தாலும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட வரலாற்றுத் தவறென்பதும் வருத்தம் தெரிவிக்கிறோம் என்பதும் முதற்படியென்ற போதிலும், 'எம்மால், முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரத்துக்கு, நாம் மன்னிப்புக் கோருகின்றோம்' என்பது தான், வெளிப்படையான மன்னிப்புக் கோரலாக இருந்திருக்க முடியும்.
தற்போது அவ்வமைப்பு அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழ் மக்களின் பெயரால் செய்யப்பட்ட அத்தவறுஃ கொடூரத்துக்கு, தமிழ் மக்களால் செய்யப்பட வேண்டிய பணிகள் இருக்கின்றன. தமிழர்களில் எல்லோருமே அந்த வெளியேற்றத்தை ஆதரித்திருக்கவில்லை, சிலர் அதற்கெதிராகத் தங்கள் குரலை எழுப்பியிருந்தனர். ஆகவே, விடுதலைப் புலிகள் செய்ததொன்றுக்காக, ஒட்டுமொத்த தமிழ் இனமும் பொறுப்பேற்கத் தேவையில்லை என்ற வாதம் முன்வைக்கப்படலாம். மேலோட்டமாகப் பார்க்கையில், ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வாதம் போலவும் தோன்றக்கூடும்.
ஆனால், அந்தக் கொடூரம் புரியப்பட்டது, தமிழ் மக்களின் பெயரால். அந்தக் கொடூரத்துக்கு, தமிழ் மக்களினுடைய ஆதரவு, கணிசமானளவுக்கு இருந்ததென்பது உண்மை. வெளியேற்றப்படுவதற்கான நேரடியாக ஆதரவாக இருந்திருக்காவிட்டாலும் கூட, அதை நியாயப்படுத்தியதன் மூலமாக, அந்த ஆதரவு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஆகவே, அச்செயலுக்கான பொறுப்பை ஏற்காவிட்டாலும் கூட, தவறை ஏற்பதில் தயக்கங்கள் இருக்கத் தேவையில்லை.
ஏனென்றால், அந்த வெளியேற்றத்தை நியாயப்படுத்துகின்றோம் என்ற பார்வையில், 'முஸ்லிம்கள் கெட்டவர்கள்', 'முஸ்லிம்கள் காட்டிக் கொடுப்பவர்கள்' என, வடக்கின் பல பகுதிகளில், சிறு பிள்ளைகளுக்கான 'மாற்றப்பட்ட' வரலாறொன்று திணிப்படுவதை நாம் அறிவோம். அவ்வாறான தவறான, மோசமான சித்திரிப்புகள் கொண்ட சமூகத்தை உருவாக்கிக் கொண்டுவிட்டு, இனங்களுக்கிடையிலான ஒற்றுமைப் பற்றிக் கலந்துரையாடுவதென்பது, வேடிக்கையானது.
மறுபுறத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இந்தத் தவறைஃகுற்றத்தை ஏற்றுக் கொள்வதனூடாக மாத்திரம், அவ்வமைப்பின் அத்தனை நடவடிக்கைகளும் அதன் உருவாக்கமும் அதற்கான காரணமும், தவறாகிப் போய்விடாது. எந்தவோர் அமைப்பும் எந்தவோர் இயக்கமும், தவறுகளின்றி இயங்கியதில்லை. ஆகவே, இத்தவறை ஏற்றுக் கொள்வதால், தமிழீழ விடுதலைப் புலிகளின் 'நற்பெயர்' கெட்டுவிடும் என அஞ்சுவோர், நீண்டகால நோக்கில் சிந்திப்பது சாலச்சிறந்ததாக இருக்கும்.
பழைய விடயத்தைக் கிளறி எடுப்பதால், இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஏற்படலாமென்ற வாதமும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால், இந்த விடயத்தை மூடி வைத்து மூடி வைத்து, தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் சந்தேகங்களற்ற, வெளிப்படையான உறவொன்று காணப்படுகின்றதா எனக் கேட்க வேண்டிய தேவையிருக்கிறதல்லவா? வெளிப்படையான, இரு தரப்பும் தங்கள் தவறுகளை ஏற்றுக் கொண்டு, பகிரங்கமான கலந்துரையாடலில் ஈடுபடுவதைப் போன்ற, பயன்தரக்கூடிய, நீண்டகாலத்துக்கான தீர்வொன்றுள்ளதா?
இதில் நகைப்புக்குரிய விடயமென்னவெனில், இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தான முழுமையான விசாரணைகள் வேண்டும், அவற்றைப் பற்றிய முழு விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை வைத்துக் கொண்டு தான், இந்த விடயத்தைக் கிளறுவது தேவையற்றது, முஸ்லிம்களின் பிரச்சினையைத் தீர்த்தால் போதுமானது என, தமிழர்களில் ஒரு தரப்பில் கோரிக்கை இருக்கிறது. 'இன ஒற்றுமைக்காக, நடந்ததை மறந்து, ஒன்றாகச் செயற்படுவோம்' என்ற சிங்களத் தரப்பின் (குறிப்பிட்ட பிரிவினர், விசாரணைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க வேண்டியது) கோரிக்கையை, 'முடியாது. உண்மை வெளிப்படுத்தப்பட்டாலேயே, உண்மையான இன ஒற்றுமை ஏற்படும்' எனத் தெரிவிக்கும் குறித்த தரப்பினர், சிங்களத் தரப்பின் அதே வாதத்தை, முஸ்லிம்கள் விவகாரத்தில் மாத்திரம் முன்வைப்பது, இரட்டை நிலைப்பாடேயொழிய வேறொன்றுமில்லை. பிரபலமான நகைச்சுவைமொழியில் சொல்வதானால், எங்களுக்கு என்றால் இரத்தமும் அவர்களுக்கு என்றால் தக்காளிச் சட்னியும் என்பது போல் இந்தக் கருத்தும்.
ஆகவே தான், இவ்விடயத்தில் தமிழர் தரப்பின் முழுமையான அர்ப்பணிப்பும் செயற்பாடும் தேவைப்படுகின்றது. அது, உண்மையை ஏற்றுக் கொள்வதிலிருந்தே ஆரம்பிக்கின்றது.
தவறுகளை ஏற்காத மனிதர்களால், அவற்றைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படாது. இடம்பெற்றது மோசமான தவறென்பதை ஏற்றுக் கொள்ளும்போது தான், அதற்கான பரிகாரங்களை வழங்குவதற்கான முதற்படிகளை ஏற்படுத்த முடியும். மறைத்து வைத்திருக்க முயலும் வரலாறுகள், ஒரு கட்டத்தில் பாரிய பூதாகாரமான விளைவுகளுடன் வெளிப்படுமென்பது, நாம் அனைவரும் கண்கூடாகக்கண்டது தான்.
A.Asanthan Monday, 20 August 2018 12:40 PM
இனசுத்திகரிப்பு சமுக நல்லுறவை சீர்குலைக்கின்றன.இதனை ஆராய்க
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago