2025 மே 17, சனிக்கிழமை

மதங்களுக்கான மரியாதை தேவையானதா?

Thipaan   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

அண்மைய சில நாட்களாக, மூன்று விடயங்கள் அதிகளவு கருத்தாடல்களை இணையவெளியில் ஏற்படுத்தியிருந்தன. மும்பையிலுள்ள மிரா-பயன்டர் மாநகர சபையினால் விதிக்கப்பட்ட இறைச்சித் தடை அதில் முதலாவது.

இந்தியாவைச் சேர்ந்த ஜைன மதத்தினரின் வருடாந்த விரதத்தின்போது நான்கு நாட்களுக்கு,  பாரதிய ஜனதாக் கட்சியினால் ஆளப்படும் குறித்த மாநகர சபை, இறைச்சி விற்பனையைத் தடைசெய்தமை மாத்திரமன்றி, அங்கு எந்த விலங்குகளும் கொல்லப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளுக்காக அல்லது அவர்களின் சடங்குகளுக்காக, ஒட்டுமொத்த பகுதி எதை உண்ணக் கூடாதெனக் கட்டுப்படுத்துவது எந்தளவுக்கு ஜனநாயகமானது என, சமூக ஊடகப் பயனர்கள் குரலெழுப்புகின்றனர்.

பல ஆண்டுகளாக இந்த நடைமுறை இருந்துவந்த போதிலும், பி.ஜே.பி ஆட்சியிலிருக்கும் போது மாத்திரம் இது அதிகம் கவனத்தில் எடுக்கப்படுவதாக பி.ஜே.பி ஆதரவாளர்களின் கருத்தில் ஒருவகை நியாயத்தன்மை இருந்தாலும், ஒட்டுமொத்தமாக இந்த நடைமுறை விமர்சனங்களுக்குப் பொருத்தமானது தான்.

மறுபுறத்தில், விமானப் பணியாளராகப் பணியாற்றிய முஸ்லிம் பெண்ணொருவர், மதுபானத்தை வழங்க மறுத்ததன் காரணமாக அவரின் பணிநீக்கம் இதில் இரண்டாவதாக அமைந்தது.

விமானப் பணியாளராகப் பணியாற்றும், முஸ்லிம் மதத்துக்கு மாறிய பெண்ணொருவர், தனது மத நம்பிக்கைகளுக்கு முரணானதாக மதுபானத்தை பயணிகளுக்கு வழங்க முடியாது என்பதால், 12 மாதகால நிர்வாக விடுப்பில் அனுப்பப்பட்டதோடு, அதன் பின்னர் அவர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக கருத்தாடல்களை ஏற்படுத்தியதாக, இந்தச் சம்பவமும் அமைந்திருந்தது.

மூன்றாவதாக, அமெரிக்காவைச் சேர்ந்த எழுதுவினைஞரான கிம் டேவிஸ் என்ற பெண், தனது மத நம்பிக்கைகளுக்கு முரணானது எனத் தெரிவித்து, சமபாலுறவாளர்களுக்கான திருமணப் பதிவுச் சான்றிதழ்களை வழங்க மறுத்ததன் காரணமாகக் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதுடன், நேற்றைய தினமே விடுவிக்கப்பட்டார்.

மேற்குறிப்பிடப்பட்ட மூன்று சம்பவங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டனவாக இருந்த போதிலும், ஒரு விடயத்தில் ஒன்றாக இருக்கின்றன: மூன்றினதும் அடிப்படையாக மத நம்பிக்கை இருக்கிறது. ஆகவே, மத நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டுமா, அவ்வாறாயின் எந்தளவுக்கு மதிக்கப்பட வேண்டுமென்ற வினா எழுகின்றது. ஏனெனில், இந்த இரு சம்பவங்களும் காட்டியது போல, ஆன்மிக வாழ்வை மாத்திரமன்றி, அதனைத் தாண்டிய வாழ்க்கையையும் மத நம்பிக்கைகள் பாதிக்கின்றன.

மத நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதென்பது ஒருவரது அடிப்படையான உரிமை. நடிகரொருவரை விரும்புவது, குறித்ததொரு இசையமைப்பாளரை விரும்புவது, குறித்ததொரு வர்ணத்தை விரும்புவது, குறித்த வகை உணவொன்றை அதிகம் விரும்புவது போல, ஒன்றையோ அல்லது அதற்கு மேற்பட்ட மதங்களையோ விரும்புவதென்பது இயல்பானது. அதனையொருபோதும் கேள்விக்குட்படுத்த முடியாது. (அதேபோல், எவ்வாறு எந்த நடிகரையும் விரும்பாதிருப்பது உரிமையோ, அதேபோல் எந்தவொரு மதத்தையும் பின்பற்றாமலிருப்பதும் அடிப்படை உரிமையாகும்).

ஆனால், உங்களுடைய மத நம்பிக்கைகளை இன்னொருவர் மீது திணிக்க முடியுமா என்பது தான் இங்கு எழுகின்ற வினா. ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய விரதத்துக்காக இறைச்சி உண்ணாமலிருப்பது அவர்களது அடிப்படை உரிமை. (அவர்கள் பொதுவாகவே இறைச்சி உண்பதில்லை.) அதேபோல், ஜைன மதத்தைச் சேர்ந்த ஒருவரை அயலவராகக் கொண்ட வேறு மதமொன்றைச் சேர்ந்த ஒருவர், தனது அயலவருக்காக இறைச்சி உண்பதைத் தவிர்ப்பதென்பது கூட தவறானதல்ல. ஆனால், குறித்த பிரதேசத்திலுள்ளவர்கள் எவரும் இறைச்சி உண்ணக்கூடாது என்பது தவறான உத்தரவாகவே அமைகிறது. நான்கு நாட்களாக இருந்தாலும் நான்கு மணித்தியாலங்களாக இருந்தாலும், நான் எதை உண்ண வேண்டுமென இன்னொருவர் தீர்மானிப்பதென்பது அடிப்படை மனித உரிமை மீறலே. இதற்கு முன்னைய பத்திகளில் சொல்லப்பட்டது போல, நாம் எதைப் பார்க்க வேண்டும், எதைக் கதைக்க வேண்டும், எதை உண்ண வேண்டுமென, அரசாங்கங்கள் தீர்மானிப்பதென்பது மிக மிக ஆபத்தான நிலை.

பண்பாட்டு மரியாதை என்றதொரு விடயம் இருக்கிறது. எனக்கருகில் இருப்பவன் நான்கு நாள் உண்ணாமலிருக்கும் போது, அவனுக்கருகில் இருந்துகொண்டு, மிக விலையுயர்ந்த உணவுகளை உண்பதென்பது பண்பாட்டு, பழக்கவியல் ரீதியாகப் பரிந்துரைக்கப்படக் கூடியதொன்றல்ல. ஆனால், அது ஒருபோதுமே கட்டாயப்படுத்தப்படக்கூடாது. உதாரணமாக, ஜைன சமயத்தினரின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, இறைச்சியைத் தடை செய்ய முடியுமெனில், கிறிஸ்தவர்களினது கிறிஸ்மஸ் அல்லது முஸ்லிம்களின் நோன்புப் பெருநாளின் போது, அனைவரும் இறைச்சி உண்ண வேண்டுமென உத்தரவிடப்பட முடியுமா? அவ்வாறானதொரு உத்தரவை, பண்பாட்டு மரியாதை என்றழைக்கப்பட முடியுமா? இறுதியாகக் கூறப்பட்டது பண்பாட்டு மரியாதை இல்லையெனில், இறைச்சித் தடையும் அதே தான்.

இது வெறுமனே இறைச்சி தான், இதில் இவ்வளவுக்கு யோசிப்பதற்கு எதுவுமில்லை எனச் சிந்திக்கக்கூடும். ஆனால், அப்பகுதியில் வாழும் சில நோயாளிகளுக்கு, இறைச்சி மூலமான போஷணை தேவையாக இருக்கலாம். செல்லப்பிராணிகளுக்கு மாமிசம் தேவைப்படலாம். எல்லாவற்றையும் விட, இவ்வளவு தனிமையான விடயத்தில் கூட அரசாங்கங்களோ அல்லது நிர்வாக அமைப்புகளோ தலையிடுகின்றன என்பது, சாதாரணமானது கிடையாது.

இரண்டாவதாக, மதுபானமென்பது இஸ்லாத்தின் நம்பிக்கைகளுக்கு எதிரானது. ஆகவே, மதுபானத்தைத் தவிர்ப்பதற்கு அப்பெண்ணுக்கு முழுமையான உரிமையுள்ளது. ஆனால், குறித்த தொழிலில் மதுபானத்தை வழங்குவதென்பது அவரது கடமையென்கின்ற போது, அதை மறுக்க முடியுமா? அவரது கடமையை ஆற்ற மறுத்தமைக்காக அவர் பதவி நீக்கப்படுகின்றமைக்கு எதிராக அவரால் கோபப்பட முடியுமா? ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும் போது, என்னென்ன கடமைகள் காணப்படுகின்றன என்ற விவரம் வழங்கப்படும், நிபந்தனைகள் விதிக்கப்படும், ஒருவரிலிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகின்றது என்பது தெளிவுபடுத்தப்படும். ஆகவே, இவற்றையும் தாண்டி தனது கடமையை ஒருவர் ஆற்றத் தவறும் போது, அவர் பதவி விலக்கப்படுவதில் தவறேதும் இல்லை. குறித்த பணியில் சில விடயங்களை உங்களுடைய நம்பிக்கைகள் மறுக்கின்றன என்கிற போது, உங்கள் நம்பிக்கைகளுக்கெதிராகப் பணியாற்ற முன்வர வேண்டும், இல்லாவிடில், நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்கின்ற பணியொன்றைத் தேட முயல வேண்டும். ஏனெனில், என்னுடைய (கற்பனை) மதத்தின்படி, வாரத்தில் 3 நாட்கள் மாத்திரம் தான் பணியாற்ற வேண்டுமென இருந்தால், அந்த மதத்தைப் பின்பற்றிக் கொண்டு, வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற வேண்டிய வேலையைச் செய்ய எதிர்பார்க்க முடியாது.

மூன்றாவதாக, கிம் டேவிஸின் மத நம்பிக்கைகளின்படி, சமபாலுறவாளராக இல்லாமலிருப்பதற்கு அல்லது அவர்களை விரும்பாமலிருப்பதற்கு அவருக்கு உரிமையுண்டு. ஆனால், ஓர் அதிகாரியாக, நாட்டின் சட்டங்களை மதிப்பதற்கு அவருக்குக் கடமையுண்டு. கிம் டேவிஸ் என்ற தனிநபரின் விருப்பங்கள், ஓர் அலுவலகராக தனது பதவியை ஆற்றும் போது தனது தனிப்பட்ட நம்பிக்கைகளைத் திணிப்பதற்கு அவருக்கு உரிமைகள் எவையும் கிடையாது. இவரது இந்த நடவடிக்கையை எதிர்த்து வெளியிடப்பட்ட நகைச்சுவையான 'மீம்' ஒன்றில், 'உங்களுக்கு பேர்கர் வேண்டுமா? முடியாது. நான் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன். உங்களால் சலாட் மட்டும் தான் உண்ண முடியும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அது தான் உண்மையானதும் கூட.

இந்த மூன்று விடயங்களிலும் இருந்து, மதங்களுக்கான மரியாதையென்பது தானாகக் கிடைக்கப்பட வேண்டியதா என்பது கேள்வியாக இருக்கும் அதேநேரத்தில், அவரவர் மத நம்பிக்கைகளை அவர்களுடன் வைத்திருக்கும் போது மாத்திரமே, ஏனையோரின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுமென்பது வெளிப்படை.

ஆங்கிலத்திலுள்ள நகைச்சுவையானதொரு சொற்றொடர் இருக்கிறது. அதனுடன் இதை நிறைவுசெய்வது பொருத்தமானது. 'சமயமென்பது உங்களுடைய அந்தரங்க உறுப்புப் போன்றது. அதைக் கொண்டிருப்பது தவறானதல்ல. பெருமையடைவதும் தவறானதல்ல. ஆனால், பொதுவிடத்தில் எடுத்து எனது முகத்தில் வீசும் போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.'


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .