2025 மே 15, வியாழக்கிழமை

பொலன்னறுவை சிவன், விஷ்ணு ஆலயங்களில் 30 புராதன தமிழ் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு

Kogilavani   / 2012 மே 25 , மு.ப. 09:29 - 5     - {{hitsCtrl.values.hits}}


(க.கோகிலவாணி)


பொலன்னறுவையில் அமைந்திருக்கும் சிவாலயங்களிலும் விஷ்ணு கோயிலிலும் இதுவரை வாசிக்கப்படாத 30 இற்கும் மேற்பட்ட தமிழ் சாசனங்கள் (கல்வெட்டுகள்) அடையாளம் காணப்பட்டுள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சி.பத்மநாதன் அண்மையில் பொலன்னறுவைக்கு விஜயம் மேற்கொண்டபோது இவற்றை கண்டுபிடித்துள்ளார். 

இலங்கையில் சோழர் கால ஆட்சிப்பகுதியிலும் அதற்குபின்னரான காலப்பகுதியிலும் 7 சிவாலயங்களும் 5 விஷ்ணு ஆலயங்களும் ஓர் அம்மன் ஆலயமும் காணப்பட்டதாகவும் அவற்றில் மூன்றின் சிதைவுகளை தற்போது கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாலயங்களின் கிடைக்கபெற்ற சாசனங்கள் குறித்து விளக்குவதற்கான ஊகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் பத்மநாதன் மேலும் விபரிக்கையில்:-
 
'பொலன்னறுவை நகரம் இலங்கையில் காணப்பட்ட இராசதானிகளிலே மிகவும் பிரசித்தமானது. அநுராதபுரம் 10 நூற்றாண்டுகளுக்கு மேலாக இராசதானியாக விளங்கினாலும் பொலன்னறுவையினுடைய சின்னங்கள் மிக பரந்த நிலப்பரப்பிலே அங்குமிங்குமாக அமைந்து காணப்படுகின்றன. அநுராதபுரத்தை ஒரு 'சங்கத்தார் நகரம்' என கூறலாம். ஏனெனில் அங்கு அரண்மனை, கோட்டை கொத்தளங்கள் என்பவற்றை காட்டிலும் சங்கத்தாரரின் விகாரங்கள், சேதியங்கள் என்பவற்றின் அழிபாடுகளே எங்கும் செறிந்து காணப்படுகின்றன.

ஆனால் பொலன்னறுவை ஏறக்குறைய 250 வருடங்கள் இராசாதானியாக அமைந்திருந்த போதிலும் அங்கு உலகியல் சார்ந்த பிரமாண்டமான அமைப்புகளும் சமயநெறிகளை சார்ந்த கட்டுமானங்களும் காணப்படுகின்றன. அங்கே 7ஆம் நூற்றாண்டு முதலாக அநுராதபுர மன்னர்கள் படைக்களங்களை அமைத்திருந்தனர். அதனாலே இது 'கந்தவுர நுவர' என்ற பெயரை பெற்றது. சிங்கள மொழியில் அவ்வாறே அழைக்கின்றனர். காலப்போக்கில் அநுராதபுர மன்னர்கள் இதனை ஓர் இரண்டாம் தலைநகரமாக பயன்படுத்தினார்கள். அங்கு சிலகாலம் தங்கியிருந்த அரசர்களின் பெயர்கள் மகாவம்சத்தில் குறிப்பிடப்படுகின்றன. அத்தோடு சில சங்கத்தார் பள்ளிகள், மருத்துவமனைகள் முதலியனவும் அமைந்திருந்ததாக கூறப்படுகின்றன.

10ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் அநுராதபுரத்தில் ஏற்பட்ட படைக்களகத்தின் விளைவாக அரசன் அந்த இராசதானியை விட்டு தென்னிலங்கைக்கு ஓடிவிட்டான். இக்காலத்தில் தென்னிந்தியாவில் சோழர்கள் மீண்டும் பேரெழுச்சி பெற்றனர். முதலாம் இராஜ இராஜன் இலங்கையில் உள்ள வணிகன் ஒருவன் மூலமாக இலங்கையின் அரசியல் நிலைகளை அறிந்து அதனை கைப்பற்றுவதற்காக ஒரு படையொன்றை இலங்கைக்கு அனுப்பினான். அந்த படை எதிர்ப்பின்றி அநுராதபுர இராஜ்ஜியத்தில் வடக்கு, வடமத்தி, வடகிழக்கு ஆகிய பகுதிகளை கைப்பற்றிவிட்டது. அதன்பின் 1017ஆம் ஆண்டளவில் இராஜேந்திரனுடைய காலத்தில் மீண்டும் சோழர்கள் படையெடுத்து வந்தனர்.

இந்த படையெடுப்பிற்கு ஜயங்கொண்ட சோழர் மூவேந்த வேளான் என்ற சேனாதிபதி தலைமை தாங்கி சென்றான். அவன் தென்னிலங்கைக்கு சென்று 5ஆம் மஹிந்தன் எனும் அரசனையும் அவனது தேவியையும் அவர்களது முடி முதலான அரச சின்னங்களையும் அவற்றோடு பல தசாப்தங்களுக்கு முன்பு பாண்டிய அரசன் அநுராதபுரத்திலே  விட்டுச்சென்ற முடி, இந்திரனாரம், பட்டமாலை போன்ற அரச சின்னங்களையும் கைப்பற்றிக்கொண்டு சென்று சோழ மன்னனிடம் ஒப்படைத்தான். இதுகுறித்த  விபரங்கள் மஹாவம்சத்தில், இராஜேந்திர சோழனின் மெக்கித்தியில் கூறப்படுகின்றன. ஜயங்கொண்ட சோழர் மூவேந்த வேளான் மாதோட்டத்தில் எழுதி வைத்த சாசனத்தில் இருந்தும் இவைபற்றி குறிப்பிடப்படுகின்றன.

அக்காலம் முதலாக பொலன்னறுவை சோழர்களின் பிரதானமான நிர்வாக நிலையமாக, மத்திய நிலையமாகிய படைத்தளமாக விளங்கியது. அங்கிருந்துதான் சோழ படைகள் தென்னிலங்கை மீது படையெடுத்து சென்றன. சோழர்களோடு பொலன்னறுவையினுடைய வரலாற்றின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகியது. முன்னைய அரச காலத்தில் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய பொலனறுவை  தற்போது பிரதான நிர்வாக நிலையமாக வளர்ச்சி பெற்று நிற்கின்றது.

அதுமட்டுமன்றி சோழர் ஆதிக்கம் இலங்கையில் ஏற்படுவதற்கு 'ஐந்நூற்றுவர்' என்ற வணிக கணத்தவரும் அவருடைய படைகளும் ஏதுவாக இருந்தன. பொலன்னறுவை பதவியா போன்ற பகுதிகளை சோழர் படைக்கு துணைப் படையாக சென்று வணிகரின் படைகளே கைப்பற்றின என கருதமுடிகின்றது.

சோழர் ஆட்சி 993 முதல் 1070ஆம் ஆண்டுவரை நிலைபெற்றன. இக்காலப்பகுதியில் இவர்கள் பாதுகாப்பு அரண்களை அமைத்திருந்ததோடு இருப்பிடங்களையும் ஏற்படுத்தியிருந்தார்கள். ஆயினும் பொலன்னறுவையில் உள்ள சோழர் காலத்து ஆலயங்கள் பெரும்பாலும் வணிகர்களால் நிர்மாணிக்கப்பட்டவை என்று கொள்வதற்கு சான்றுகள் உண்டு.

இலங்கையை பொறுத்தவரை பாடல் பெற்ற இரண்டு தலங்களை அமைப்பதில் மட்டுமே சோழர்கள் அக்கறைக்கொண்டிருந்தார்கள். அவற்றின் நிர்மாணத்தில் பங்குகொண்டிருந்தார்கள். மற்ற இடங்களில் அவர்களது ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் அனைத்தும் அவர்களுடைய அதிகாரிகளினாலும் வணிகர்களினாலும் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பதவியாவில் அமைந்த இரவிகுல மாணிக்க ஈஷ்வரம், மதிரிகிரியான பண்டித சோழ ஈஸ்வரம், புதுமுத்தால பகுதியில் அமைக்கப்பட்ட விக்ரமசடாமேகபுரம் முதலானவை வணிகரின் திருப்பணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலன்னறுவையில் எல்லாமாக 14 இந்து ஆலயங்கள் காணப்படுகின்றன. அவற்றிலே 7 சிவன் ஆலயங்கள், 5 வைணவ ஆலயங்கள், ஓர் அம்மன் ஆலயம் என்றும் 100 வருடங்களுக்கு முன்பே அடையாளம் காணப்பட்டுள்ளன. இறுதியான 14ஆவது ஆலயத்தின் அடையாளமானது சரியாக தெரியவில்லை. இதில் கோணேஸ்வரரின் படிமம் காணப்பட்டதால் இது விநாயகர் ஆலயமென்று சிலர் கருதினார்கள். இது உறுதிப்படுத்தப்படாத தகவல்.

இந்த 14 ஆலயங்களில் சில சோழர் ஆட்சிக் காலத்திலும் ஏனையவை சோழர் ஆட்சி முடிந்த பின்னும் கட்டப்பெற்றவை. அவற்றில் பிரதானமானது முதலாம் சிவாலயம். பொலன்னறுவையில் உள்ள நாற்சதுர மேடையின் சமீபமாக அமைந்திருக்கிறது. இதை நூற்றாண்டுகளுக்கு முன் அகழ்வு செய்த போது சிவபெருமான், நடராசர், சமயகுரவர், அம்மன் முதலானோரின் உண்மையான வனப்புள்ள படிமங்கள் காணப்பட்டுள்ளன. ஆலயத்தினுடைய மூலஸ்தானமும் அதன் முன்பு அமைந்த அந்தராடமும் நிலை பெறுகின்றது.

இதனது விமானம் இடிந்து விழுந்து அடையாளம் காணமுடியாத வகையில் அழிந்துவிட்டது. அகழ்வாய்வு செய்த போது இதுவே நிலையாகும்.

இவ் ஆலயத்தின் மண்டபகங்களினுடைய அடித்தளங்கள் காணப்படுகின்றன. மேற்பாகம் அழிந்துவிட்டது. இங்கே சாசனங்கள் இருப்பதாக தெரியவில்லை. 12ஆம் நூற்றாண்டில் அரசராக விளங்கிய விக்கிரமபாகு இரண்டாம் கஜபாகு போன்றோரின் வழிபாட்டுக்குரிய கோயிலாக இது அமைந்தது. அவர்கள் இருவரும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள்.

பொலன்னறுவையில் காணப்படுகின்ற பிரதானமான கட்டிடங்கள் அரச மாளிகைகள், மதில்கள் என்பன முதலாம் பராக்கிரமாகு நிஷங்க மன்னனால் அமைக்கப்பட்டவை. இவை பிரமாண்டமான தோற்றம் உடையவை. நாற்சதுர மேடையில் தூவாராமா என்ற கோயில் - பராக்கிமபாகுவினால் அமைக்கப்பட்டது. வாசற்படிகளை கடந்து இடது புறத்திலே வட்டதாகே எனும் பிரமாண்டமான கோயிலின் அழிபாடுகள் காணப்படுகின்றன. இதனை நிஷங்க மன்னன் அமைத்தான். வலதுபுறத்திலே அமைந்திருப்பது தலதா மாளிகை. இது கருங்கல் திருப்பணி. அதற்கு அப்பால் அமைந்திருப்பது முதலாம் விஜயபாகு கட்டிய அளவில் சிறியதான தலதாய் திருப்பள்ளி. 

அட்டதாகேக்கு சமீபமாக இலங்கையில் மிக பிரதானமானதும் இங்கு பாதுகாக்கப்படுவதுமான தமிழ் சாசனம் நிறுவப்பட்டது. (இது வேலைக்கார சாசனம் எனவும் அழைக்கப்படும்) இராசதானியில் நெருக்கடி ஏற்பட்ட போது வேலைக்கார படையினரை அபயகிரி மகா விகாரைக்காக முகலன் தலதாய் பெரும்பள்ளியின் பாதுகாப்பை, அரங்காவலை அவர்களிடம் ஒப்படைத்தார். வேலைக்காரப் படை அரச படையாகவும் வணிக நகரமொன்றின் படையாகவும் ஒரே சமயத்தில் பணிபுரிந்தது என்பது அண்மைக்கால விளக்கமாகும். இதிலிருந்து அறியப்படுவது பொலன்னறுவையிலிருந்த பௌத்த விகாரைகளுக்கும்  ஐந்நூற்றுவர் என்ற வணிக நகரத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன.

ஐந்நூற்றுவர் சர்வதேச பரிணாமம் உடையவர். 12ஆம் நூற்றாண்டிலே இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும்கோயில்கள் எழுந்த காலமாகும். அவற்றில் நாள் வழிபாடுகளுக்கு வாசனை பொருட்களான சந்தனம், அகில், சவ்வாது, கற்பூரம் முதலானவை பெரும்பாலும் தேவைப்பட்டன. இவையெல்லாம் தென்கிழக்காசியவில் சீனத்தில் உற்பத்தியானவை.

வணிகர்கள் பௌத்த கோயில்களையும் அமைத்துள்ளனர். பொலன்னறுவையில் 11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சோழர் காலத்து சாசனத்திலே 'திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் பெரும்பள்ளி' அவர்களால் அமைக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.

நிஷங்க மன்னனின் மிகப் பிரமாண்டமான தோற்றம் கொண்ட ரன்கொத் விகாரைக்கு செல்லும் வழியில் வணிகர் நிலையங்களும் கடைத் தெருக்களும் இருந்தன. அந்த கலத்திலே ஐந்நூற்றுவர் பௌத்த பதி ஒன்றில் விளக்கெரிப்பதற்கு அறக்கட்டளை செய்துள்ளமை பற்றி கூறப்பட்டுள்ளது.

முதலாவது சிவாலயம் தவிர்ந்த இந்து கோயில்கள் எல்லாம் அரண்மனைக்கு வளாகத்துக்கு அப்பால் சந்தைப்பகுதிகளில், விற்பனை நிலையங்களில், நெடுஞ்சாலை கூடுகின்ற சந்தைகளில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வானவமாதேவி ஈஸ்வரம் என்பது பிரசித்தமானது. இதன் அடித்தளத்தில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பே வாசிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்நாட்களில் தமிழ் சாசனங்களை வாசிக்கக் கூடியவர்கள் இங்கு இல்லையென்பதால் அவற்றின் படிகளை தென்னிந்தியாவின் தொல்பொருள் திணைக்களத்தின் சாசனப் பிரிவுக்கு அனுப்பி வைத்து வாசகங்களை பெற்றார்கள்.

இவ்விதமாக கிடைத்த படிகளை கொண்டு கிருஷ்ணசாஸ்திரி 28 தமிழ் சாசனங்களின் வாசகத்தை வெளியிட்டார். ஏனைய சிவாலயங்களிலும் விஷ்ணு ஆலயங்களிலும் கல்வெட்டுக்கள் இருப்பதாக அக்காலத்து தொல்பொருள் ஆணையளாரன ஏ.சீ.பி.பெல்லோ அவருக்கு பின்வந்தவர்களோ சொல்லவில்லை. அவற்றை அடையாளம் காணமுடியவில்லை. சென்ற ஆண்டு தொல்பொருளியல் திணைக்களத்தின் நண்பரொருவர் பொலன்னறுவையில் உள்ள தமிழ் சாசனங்களின் படிகளை எம்மிடம் ஒப்படைத்தார்.

இலங்கையில் உள்ள தமிழ் சாசனங்களை படித்து ஆங்கிலத்திலே பதிப்பித்து வெளியிடுவதற்கு எமக்கும் அவர்களுக்கும் இடையில் ஓர் உடன்பாடு இருக்கின்றது. நண்பர் வழங்கிய சாசனத்தின் படியொன்றிலே ஒரு துண்டமான சாசனத்தின் வாசகம் காணப்படுகின்றது. இதில் 'ஐந்நூற்றுவர் ஈஸ்வரம் உடையார் கோயிலின் பள்ளிகொண்டாரையும்...' என்ற வரிகள் காணப்படுகின்ற. இவற்றின் இறுதிவரிகள் அழிந்துவிட்டன.

இது ஐந்தாம் சிவாலயத்தில் கிடைக்கப்பெற்றதாக அப்படியில் எழுதப்பட்டுள்ளது. எனவே அந்த சிவலாயத்தின் பெயர் 'ஐந்நூற்றுவர் ஈஸ்வரம்' என்பது புலானாகிறது.

இந்த ஐந்நூற்றுவர் ஈஸ்வரமானது ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிக கணத்தினாலே நிர்மாணம் செய்து அவர்களினாலே பராமரிப்பு செய்யப்பட்டதென்பது உணரப்படும். பொலன்னறுவையில் உள்ள இந்து கோயில்களில் இதுவே அளவுப் பிரமாணங்களில் மிகப்பெரியதாகும். அது செங்கல் கட்டுமானம் மிக விசாலமான பிரகாரத்தில் அமைந்தது. நுழைவாசலில் கோபுரம் அமைந்தது என்று கூறுகின்றனர். இப்போது இடிந்து வீழ்ந்துவிட்டது. சில தூண்கள் மட்டும் இருப்பதாக கூறுகின்றனர். இவ்வாலயத்தின் நீளம் ஏறக்குறைய 130 அடி. மூலஸ்தானம், அந்தராலம் அர்த்த மண்டபம், மண்டபம் என்பவற்றோடு மேலதிகமாக மூன்று விசாலமான மண்டபங்கள் இருந்தன.

ஆலயத்தில் நுழைகின்ற போது காணப்படும் மண்டபமானது மிக அகலமானதாக இருந்தது. அதன் கூரையை மிக உயரமான 40 கற்தூண்கள் தாங்கி இருந்தன. ஆலயத்தில் இப்போது செங்கல் வேலைத்தளமான அடித்தளம், மண்டபங்களில் வடிவமைப்பு, அவற்றில் உள்ள தூண்கள், மூலஸ்தானம் என்பவற்றின் வாயிற்புரங்கள் என்பவையே எஞ்சியுள்ளன. பின்புறத்தில் விமானமானது அகழ்வு செய்வதற்கு முன்பே இடிந்து வீழ்ந்திருந்தது.

இங்கே பெல்லருடைய காலத்தில் 4 கல்வெட்டுக்களை கண்டெடுத்தார்கள். இவை பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளதால் வாசிப்பதில் பிரச்சினை இருக்கவில்லை. கிருஷ்ணாசாஸ்திரி வாசித்துகொடுத்தார். அதில் அத்திவாரமிட்டவர்களின் பெயர்கள் வருகின்றன.

இவ்வாலயத்தில் அண்மையில் பல கற்களை கொண்டுவந்து போட்டிருப்பதாகவும் அவற்றில் பல சாசனங்கள் எழுதப்பட்டு இருப்பதாகவும் ஒரு வருடத்துக்கு முன்பு கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்த தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சுபராயுடு கூறினார். 

சிவாலயத்தை பார்க்கும்போது மூலஸ்தானத்தின் உற்புறத்தில் உள்ள தூண்களில் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. பிரகாரத்தின் உட்புற தூணில் சாசனம் எழுதப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தினுடைய நுழைவாயிற் தூணிலும் எழதப்பட்டுள்ளது. ஆனால் இவற்றின் எழுத்துக்கள் மழை, தூசு படிதல் போன்ற பல காரணங்களினால் பெரிதளவில் தெரிவதில்லை. இவற்றை நன்கு படியெடுத்து பார்த்தால் இவற்றில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இவற்றுக்கு முன்பாக உள்ள மண்டபங்களின் பெரும் தூண்களிலும் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

இதேவேளை இவ்வாலயத்திற்கு அருகில் உள்ள வளாகத்தில் விஷ்ணு ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயமும் 90 அடி நீளமென கூறுகின்றனர். இவ்வாலயத்தின் நுழைவாசற் படியின் கீழ் உள்ள கண்டத்தில் தெளிவாக சாசனம் தெரிகிறது. இதேபோல் மூலஸ்தான படியிலும் கல்வெட்டு காணப்படுகின்றது. இவ்வாலயத்தின் தூண்கள் பலவற்றில் கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன. இதற்கு மேலாக மூலஸ்தானத்தில் நாற்சதுர வடிவான தூண்களை கொண்டு வந்து அமைத்துள்ளனர். இவற்றில் மேலுள்ள கற்களில் தெளிவான சாசனம் காணப்படுகின்றன.

ஆனால் இக்கோயில்  சிங்களத்தில் 'நாகபடை விகாரை' அதாவது 'நய்பன விகார' என அழைக்கப்படுகின்றது. இக்கோயிலை அகழ்வு செய்த காலத்தில் மேடைபுற்றுக்கள் இருந்திருக்கலாம். நாகபாம்பு இருந்திருக்கலாம். இதனை பார்த்த அம்மக்கள் இதனை நாகபடை விகாரை என்று அழைக்கின்றனர்.

இது ஒருவருக்கும் தெரியாத விடயம். இவ்விரு ஆலயங்களிலும் சாசனங்கள், 20 இற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. வளாகத்தை சுற்றிப் பார்த்தபோது துண்டம் துண்டமாக கற்கள் காணப்படுகின்றன. இவற்றில் எழுத்துக்கள் தெரிகின்றன.

பொலன்னறுவையிலிருந்து ஹிங்குராங்கொட பாதையில் 2 கிலோ மீற்றர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. எதிர்ப்புறத்திலே ஒரு கற்தடியான கோயிலின் எஞ்சிய பாகங்கள் காணப்படுகின்றன. இதுதான் மூன்றாம் சிவாலாயம் என்று கூறப்படுகின்றது. இது ஏறக்குறைய 52 அடி நீளமான சிறிய கோயில். 4 அடி உயர அடிதளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடிதளத்தில் உபானம், யகரி, குமுதம், கண்டம், கபோதம் என்ற 5 படைகள் உள்ளன.

இந்த ஆலயத்தில் சாசனம் இருக்குமென்று நம்பிக்கையில்லை. ஏனெனில் பல நூற்றாண்டுகளாக மண்ணில் புதைந்து கிடந்ததால், எழுத்துக்கள் கற்புலனுக்கு தெரியாத வகையில் மறைந்துவிட்டிருக்கும். இந்த ஆலயத்தின் அதிர்ஷ்டதானம் மூலஸ்தானம் முதல் வாசற்படி வரை ஒரே மட்டத்தில் உள்ளது. அந்த அதிஸ்டானத்தில்தான் ஆலயத்தின் அனைத்து பகுதிகளும் உள்ளன. அதிஸ்டானத்தின் 3 பக்கங்களும் எழுத்துக்கள் பல வரிகளில் உள்ளன. அதில் என்ன இருக்கின்றது என்பதுதான் தற்போதைய பிரச்சினை. தமிழ் எழுத்துக்கள், மிகச் சிறிய எழுத்துக்கள் என காணப்படுகின்றன.

இந்த ஆலயத்தின் வாசற் படியில் ஒரு  சிறிய சாசனம் உள்ளது. இது ஆலயத்தின் பெயராக அல்லது உபயகாரரின் பெயராக இருக்கலாம். அதேபோல் வாசற் கதவின் மேல் உள்ள உத்திரத்தில் இரு வரிகளில் சாசனம் காணப்படுகின்றது. இவற்றோடு, தெற்கு பக்கத்தில் விழுந்து கிடக்கின்ற பெரும் கற்பாலங்களிலும் எழுத்துக்கள் தெரிகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட எமது பொலன்னறுவை பிரயாணத்தில்தான் இவற்றை கண்டறியும் வாய்ப்பு எமக்கு கிட்டியது.

இதுவரை அடையாளம் காணப்படாத 30 வரையான தமிழ் சாசனங்கள், சமீபத்தில் உள்ள 3 ஆலயங்களிலும் உள்ளன என்பதை எமது விஜயத்தின் மூலம் அறிந்துகொள்ள உதவியாக இருந்தது.

தொல்பொருள் சின்னங்கள் எல்லாம் சட்டப்படி தொல்லியல் திணைக்களத்தினுடைய மேற்பார்வையில் அமைந்தவை. நாட்டின் எந்த பகுதியாயினும். இவற்றை படியெடுப்பதற்கு, ஆராய்வதற்கு அவர்களுடைய அனுமதியை, அனுசரணையை பெற வேண்டும். அது அவ்வளவு சிரமமானதன்று. இவ்வாறான விடயங்கள் உள்ளன என்பது குறித்து நான் அவர்களுக்கு எழுதவுள்ளேன். இதைவிட சாசனவியலுக்கு பொறுப்பானவர் என்னை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்வதாக கூறினார்.

அங்கு வேறு விநோதங்கள் உள்ளன. மூன்று வேறு காலங்களுக்குரிய கல்வெட்டுக்கள் ஒரே கல்லில் அமைந்திருக்கின்றன. அவர்கள் தந்தது 3 படிகள். அவை ஒவ்வொன்றிலும் 15ஆம் நூற்றாண்டுக்குரிய பெரிய எழுத்துக்கள் காணப்படுகின்றன. இதில் 11ஆம் நூற்றாண்டில் எழுதிய நீளமான சாசனங்களில் நெடுந்தீவில் உள்ள பௌத்த பள்ளியான ஜனநாத பெரும்பள்ளி என எழுதப்பட்டுள்ளது. அதில் வஜ்ஜிரதேவர், மித்திர தேவர் என்ற பெயர்கள் தெரிகின்றன.

இதுமட்டுமன்றி கிருஸ்துவுக்கு முட்பட்ட காலத்தில் தமிழ் பிராமி சாசனம் அதிலே எழுதப்பட்டுள்ளது. இவைகளெல்லாவற்றையும் ஆராயும் போது இலங்கையினுடைய பூர்வ காலத்து, மத்திய காலத்து வரலாறு, சமய வரலாறு, சமூக வரலாறு இவற்றைப்பற்றிய இதுவரை அறிந்திராத விடயங்களை அறிந்துகொள்ளலாம். இலங்கையின் பிரித்தானிய காலத்துக்கு முட்பட்ட கால வரலாறுகளை அறிய வேண்டுமென்றால் மூன்று மொழிகளிலும் உள்ள ஆவணங்களை ஒப்பிட்டு படிக்க வேண்டும்.

இலக்கியங்களில் பிரதானமானது மஹாவம்சம். பொலன்னறுவை காலத்தை பொறுத்தவரை அது ஆதாரபூர்வமாகவும் மிக விரிவாகவும் குறிப்பிடுகின்றது. பொலன்னறுவை காலத்தில் சிங்கள மொழியில் கூடிய சாசனங்களை வெளியிட்டவர் நிஷங்க மல்லன் என்ற விடயங்கள் இந்த மஹாவம்சத்தில் கூறபடுகின்றது.

பொலன்னறுவை காலத்தில்தான் மிக கூடுதலான தமிழ் சாசனங்களும் வெளிவந்தன. இதுவரை காலமும் திருகோணமலை மாவட்டத்தில்தான் தமிழ் சாசனங்களில் செறிவு கூடுதாக காணப்பட்டதாக கருத்து நிலவியது. அடையாளம் கண்ட சாசனங்களை படித்து விளங்கிக்கொள்ளும் இடத்து இரசாதானியாகிய பொலன்னறுவையில்தான் கூடுதலான தமிழ் சாசனங்கள் இருந்திருக்க வேண்டும் என்ற நிலையை ஒருவேளை அடையாளம் என்று தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் கல்வெட்டுக்களை இலங்கையில் வாசிக்கக் கூடியவர்கள் இருக்கின்றார்களா? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதலளிக்கையில்,

இலங்கையில் இந்திரபால, வேலுப்பிள்ளை என்ற இருவரும் தமிழ் கல்வெட்டுக்களை வாசித்து இரு நூல்களை வெளியிட்டுள்ளனர். இருவரும் தனித்தனியாக மற்றவர்களோடு கலந்தாலோசிக்காமல் வெளியிடாததால் அவற்றினுடைய வாசகங்களிலே சில தவறுகள் ஏற்பட்டன. சுபராவை அழைத்துக்கொண்டு வந்துதான் நாங்கள் இவற்றை படித்தோம். யாழ்ப்பாணத்தில், கண்டி பேராதனை பல்கலைக்கழத்தில் இதனை போதிக்கின்றார்கள். ஆனால் மாணவர்கள் இதனை வாசிப்பார்களா என்பது தெரியவில்லை.

சாசனத்துறையில் பயிற்சிபெற்ற வல்லுநர்களை வரவழைத்துதான் இறுதியான வடிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.


பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையிலான குழுவினர் அண்மையில் பொலனறுவைக்கு விஜயம் மேற்கொண்ட போது எடுக்கப்பட்ட படங்கள்:






You May Also Like

  Comments - 5

  • chandra Saturday, 26 May 2012 03:26 AM

    ஒஹ்ம் நம சிவாய, தமிழன் கண் திறந்துவிட்டான்.

    Reply : 0       0

    nilakshan Monday, 13 May 2013 04:53 PM

    எருவில் கிராமத்தில் அமைந்துள்ள சிவாலயம் பற்றி இந்துசம என்ற நூலில் ஏகராவில்ல சிவாலயம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இவ் ஆலயம் ஆய்வாளர்களின் ஆய்வுக்கு இதுவரை உட்படுத்தப்படவில்லை. இச் சிவாலயம் பற்றியும் இனிவரும் காலங்களில் இணையத்தளங்கள் மற்றும் பத்திரிகை போன்றவற்றில் குறிப்பிடப்படல் வேண்டும்.

    Reply : 1       1

    தி.பிரதீபன் Monday, 18 September 2017 07:06 AM

    பொலன்னறுவை இந்து சமய வரலாறு எவ்வளவு முக்கியமோ அதே போன்றுதான் தற்போதும் அங்கு வாழ்ந்து வரும் எங்கள் இந்து மக்களின் வழிபாடுகளும் முக்கியம் ஆகவே சமுக,சமய வளர்ச்சிக்கும் தங்களின் ஆதரவை நாடி நிற்கின்றோம், பிரதீபன்(BA,Dip.in.english)

    Reply : 0       1

    ந.பிறவீன் Tuesday, 10 April 2018 04:20 PM

    நான் பொலன்னறுவை தான் ஆசிரியர் அவர்களே பொலன்னறுவை வரலாற்று ஆய்வு எனக்கப்பிடித்த ஒன்று புராதன பொலன்னறுவை நகரம் எனக்கு மிக அருகில்த்தான். வாரத்தில் குறைந்தது ஒரு முறையேனும் நான் அங்கு செல்வது வழக்கம். உங்களுக்கு என் உதவிகள் ஏதும் தேவைப்பட்டால் நான் செயவேன். இந்து வரலாறு பொலன்னறுவையில் இருந்ததை இலங்கை அறிய வேண்டும் இதற்க்கான எந்த உதவிகளையும் நான் செய்யத்தயார்

    Reply : 2       0

    nanthu Friday, 19 July 2019 11:38 AM

    i like

    Reply : 2       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .