2025 மே 01, வியாழக்கிழமை

04/21 தாக்குதல் அன்றும் இன்றும் தேர்தலுக்கான யுக்தி

Editorial   / 2023 ஒக்டோபர் 03 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புருஜோத்தமன் தங்கமயில்
 
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வெளிவரும் தகவல்கள் அரசியல் அரங்கை மீண்டும் அதிர வைத்திருக்கின்றன. இந்த அதிர்வுகள் அடுத்த இரண்டு மூன்று தேர்தல்கள் முடியும் வரையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களை தீர்மானிக்கும் விடயத்திலும் வெற்றிக்கான அணி சேர்ப்பிலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலான தகவல்களும், அவை தொடர்பான பிந்திய வெளிப்பாடுகளும் முக்கிய இடத்தை வகிக்கும் சூழல் உருவாகியிருக்கின்றது.

 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் தாக்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது. அதாவது, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்வது மாத்திரமே ஒற்றைத் தீர்வு என்கிற விடயம் தென் இலங்கை முழுவதும் பெரும் பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட்டு, வாக்கு அறுவடை நிகழ்ந்தது. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியோடு ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்கள். ஆனால், இம்முறை ராஜபக்ஷக்களுக்கு எதிராக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் விவகாரம் முன்னுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

 தற்போது, குறித்த தாக்குதல்கள் தொடர்பில் வெளிவரும் தகவல்களை முறையாக விசாரணை நடத்தினால், அதனோடு தொடர்புடைய பல மூத்த முக்கியஸ்தர்களை கைது செய்ய வேண்டியிருக்கும்.

அது, ராஜபக்ஷக்களை குறைந்தது பத்து ஆண்டுகளுக்காவது முடக்குவதற்கு போதுமானது என்கிற உணர்நிலையொன்று உண்டு. அதனால், ராஜபக்ஷக்கள் எதிர்வரும் தேர்தல்களை கடந்து நின்று சிந்திக்கும் திரிசங்கு நிலைக்கு வந்திருக்கிறார்கள். கடந்த வருடம் இடம்பெற்ற, ராஜபக்ஷக்களை வீட்டுக்கு விரட்டும் போராட்ட காலத்தில் தங்களுக்கு உதவிய ரணில் விக்ரமசிங்கவையே மீண்டும் ஆபத்பாண்டவராக தேடும் நிலை ராஜபக்ஷக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படம் வெளியானவுடன், அதன் பின்னணி தொடர்பில் பல தரப்புக்களினாலும் அவதானம் செலுத்தப்பட்டது. அதில், ரணிலை தொடர்ந்தும் ஜனாதிபதியாக இலங்கையில் பேணும் தேவையின் போக்கில், குறித்த ஆவணப்படம் மிகமுக்கிய தாக்கத்தைச் செலுத்தும் என்கிற விடயம் மேலேழுந்தது. ஏனெனில், அந்த ஆவணப்படத்தில் தகவல் வெளியிட்டவர்கள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் ராஜபக்ஷக்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டதற்கான சாட்சியங்களாக நின்று வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

குறிப்பாக, பதவியிலிருந்து மக்களால் துரத்தப்பட்ட ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்ஷ, இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்டவர்கள் மீது நேரடியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன. 2005 தொடக்கம் 2015 வரையில் இலங்கையில் இடம்பெற்ற சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள்,  கடத்தல்கள், காணாமற்போகச் செய்தல் தொடர்பில் கோட்டாபாய ராஜபக்ஷவின் ஆணைக்கு இணங்க பிள்ளையான் குழு செயற்பட்டமை, அதற்காக சுரேஷ் சாலே திட்டமிடல் அதிகாரியாக செயற்பட்டமை தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தத் தகவல்களை மூவரும் மறுத்தாலும், அதனை முழுமையாக ஏற்கும் நிலை தற்போதுள்ள சூழலில் இல்லை. அத்தோடு, அவர்களின் மறுப்புத் தெரிவிப்பில் வெளியிடப்படும் விளக்கங்கள் தொடர்பில் சந்தேகங்களும், அவை தொடர்பிலான கேள்விகளும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக முளைத்துக் கொண்டிருக்கின்றன.

அந்தக் கேள்விக்கான பதில்கள் பல அரச புலனாய்வு பிரிவுகளுக்கு தெரியும் என்று ஓய்வுபெற்ற முன்னாள் பிரதி பொலிஸ்மாஅதிபர் ஒருவர் தொலைக்காட்சி விவாதமொன்றில் வெளிப்படுத்தியிருந்தார். இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நீண்டு செல்லும் அந்த விவாதத்தை ரணிலின் மூத்த சகோதரரான ஷான் விக்ரமசிங்கவின்  டி.என்.எல் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதில், தாக்குதல் தாரிகளுக்கும் புலனாய்வுப் பிரிவிலுள்ள சிலருக்கும் இருந்த தொடர்புகள் பற்றியெல்லாம் பேசப்பட்டிருக்கின்றது.

சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படம் வெளியாகி சில நாட்களுக்குள்ளேயே உள்நாட்டிலுள்ள தொலைக்காட்சியில், அதுவும் அண்மைக்காலத்தில் ஓய்வுபெற்ற பொலிஸ் மேலதிகாரி ஒருவர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலான விடயங்களையும் அதன் சூத்திரதாரிகள் தொடர்பிலும் பேசுவதெல்லாம் அவ்வளவு இலகுவாக நடந்துவிடக் கூடிய காரியம் இல்லை. ஏனெனில், தாக்குதல் சூத்திரதாரிகள் என்று அடையாளப்படுத்தப்படும் தரப்பு, மிகப் பலம் பொருந்தியது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரலாம். அப்படி வந்தால், தன்னுடைய பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதமற்ற நிலை அவருக்கு ஏற்படும் என்று தெரிந்து கொண்டே அந்த ஓய்வுபெற்ற அதிகாரி, தொலைக்காட்சியில் தோன்றி விடயங்களைப் பேசியிருக்கின்றார். அப்படியான நிலையில், அவருக்கான பாதுகாப்பு உத்தரவாதம் தற்போது ஆட்சியிலுள்ளவர்களினால் அல்லது, அதற்கு நிகரான தரப்புக்களினால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ராஜபக்ஷ குடும்பத்துக்குள் இருந்து தற்போது இரண்டு நபர்கள் மாத்திரமே ரணிலுக்கு அச்சுறுத்தலாக எழுந்து வரக்கூடியவர்கள். முதலாமவர் பஷில் ராஜபக்ஷ, இரண்டாமவர் நாமல் ராஜபக்ஷ. நாமல் ராஜபக்ஷக்களை, அவரது தகப்பனாரான மஹிந்த ராஜபக்ஷ ஓரளவுக்கு கட்டுப்படுத்தி, விடயங்களை கையாள முயல்வார். அதாவது ரணிலோடு தற்போதைக்கு முட்டல் மோதல் போக்கைக் கைவிட்டு, ஓரளவு இணக்கமாக செல்லும் தேவை தொடர்பில் வலியுறுத்துவார்.

ஏனெனில், சனல் 4 வெளியிட்டிருக்கிற ஆவணப்படம் மிகப்பெரிய பொறி. அதனை எதிர்கொள்வது ராஜபக்ஷக்களை மிகப்பெரிய அளவில் சிக்கவைக்கலாம். ரணிலை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பதைத் தவிர வேறு நிலை ராஜபக்ஷக்களுக்கு இல்லை என்ற நினைப்புக்கு மஹிந்த வந்திருப்பார் என்று தெரிகிறது. ஏனெனில், அவரின் நீண்டகால அரசியல் அனுபவம் அவருக்கு அதனை வழங்கியிருக்கும்.

கடந்த காலங்களில் அவர் அமைதியாக இருக்க வேண்டிய இடங்களில் எல்லாம் அமைதி பேணி, ஆக்ரோஷமாக எழ வேண்டிய இடங்களில் அப்படி எழுந்துதான் ஜனாதிபதி பதவியை அடைந்தார். இப்போது ரணிலை முறைத்துக் கொள்வது ராஜபக்ஷக்களின் வம்சத்துக்கு நல்லதல்ல என்ற நிலையில் அவர் இருக்கிறார். தேவையற்று முறைத்துக் கொண்டால், ராஜபக்ஷக்களை பல ஆண்டுகளுக்கு எழ விடச் செய்யாமல் இருக்கக் கூடிய பூதங்களை எல்லாம் ரணில் திறந்துவிடக் கூடும் என்ற சந்தேகம் மஹிந்தவுக்கு இருக்கலாம். ஆனால், பஷில் ராஜபக்ஷ ரணிலோடு சற்று பொருதிப் பார்த்துவிடும் நிலையில் இருக்கிறார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலைக் கைவிட்டால் தன்னுடைய அரசியல் எதிர்காலம் என்பது ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வந்துவிடும் என்பது பஷிலுக்கு தெரியும். அதனால், எப்படியாவது தன்னுடைய பிடியை வைத்துக் கொள்வதற்கான முனைப்பாக ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகும் நிலைக்காக போராடுவார்.

 ரணிலின் பல தசாப்தக் கனவு என்பது, தான் மக்களால் நேரடியாக தேர்தெடுக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஒரு முறையெனும் பதவியில் அமர்ந்து விட வேண்டும் என்பது. இப்போது, கிடைத்திருக்கின்ற பதவி, அதிர்ஷ்ட தேவதை வழங்கியது. என்னதான் ஜனாதிபதி என்ற அடையாளம் இருந்தாலும், அது மக்களால் நேரடியாக தேர்தெடுக்கப்பட்ட பதவியல்ல.

அது பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட கிட்டத்தட்ட நியமிக்கப்பட்ட பதவி போன்றது. அப்படியான நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோள் மாத்திரமே அவரிடத்தில் இருக்கின்றது. அதற்கு குறுக்காக ராஜபக்ஷக்களோ, வேறுயாரோ வந்தாலும் அவர்களை தாண்டுவதற்கான திட்டங்களோடு தான் அவர் செயற்படுகிறார். அதற்காக, அவருக்கு ஒத்துழைக்கும் தரப்புக்கள் நாட்டுக்கு உள்ளும் வெளியிலும் இருக்கின்றன என்பது அவருக்கான மிகப்பெரிய உத்வேகம்.

 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னணியை ஆராய்ந்து சர்வதேச விசாரணையை நோக்கி செல்வதற்கான அவசியம் உண்டு. அதுதான், குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை வழங்குவதற்குமான வழிவகைகளை நியாயமாக ஏற்படுத்தும். ஆனால், இலங்கை ஆட்சி அதிகார அரசியல் ஒழுங்கில் நீதியை வழங்குவது தொடர்பிலான சொல்லாடலே  தவறு என்பது மாதிரியான உணர்நிலை உண்டு. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்காக சர்வதேச விசாரணையை நாடினால், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான சர்வதேச விசாரணையையும் தமிழ்த் தரப்புக்கள் கோரும்.

அதனால் அந்த வாசலை இலங்கை அரசு ஒருபோதும் திறக்காது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான வெளிப்பாடுகள் தேர்தல் வெற்றி தோல்விகளுக்காக பயன்பட்டு எதிர்காலத்தில் காணாமல் போகும். அதனைத் தாண்டி, அதிசயங்கள் ஏதும் நிகழ்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

2023.09.28

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .