Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நடத்தப்பட்ட பத்தாவது சுற்றுப் பேச்சுக்கள் முக்கிய திருப்பத்தை அடைந்துள்ளன.
அடுத்த கட்டப்பேச்சு நடப்பதானால், அரசாங்கம் மூன்று முக்கிய விவகாரங்கள் தொடர்பான நிலைப்பாட்டை எழுத்து மூலம் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. அரசாங்கம் எழுத்து மூலம் இந்தப் பதிலைத் தருவதற்கு 10 நாட்கள் காலக்கெடுவையும் கொடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டை புலிகளின் அணுகுமுறை என்று அரசாங்கம் விமர்சித்துள்ளது.
அதுமட்டுமன்றி தாம் எழுத்து மூலமான பதிலைக் கொடுக்கப் போவதில்லை என்றும், பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கும் போதே தீர்வைக் கொடுக்க முடியாது என்றும் அரசதரப்பு கூறியுள்ளது.
இந்தக் கட்டத்தில் தான் இந்தியாவின் 'ஹெட்லைன்ஸ் ருடே' தொலைக்காட்சியில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவின் பேட்டி ஒன்று ஒளிபரப்பானது.
இந்தப் பேட்டியில் போர்க்குற்ற விவகாரங்கள் பற்றியெல்லாம் அவர் கூறியுள்ளதை விட முக்கியமானது அதிகாரப்பகிர்வு பற்றியது. ஏற்கனவே தமிழர்களுக்கு போதிய அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்து விட்டதால் இனிமேல் மேலதிகமாக எதையும் கொடுக்க வேண்டியதில்லை.அதுவும் புலிகளைத் தோற்கடித்து விட்ட பிறகு எதற்கு அதிகாரப்பகிர்வு என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.
இதேபோன்ற கருத்தை முன்னரும் அரசதரப்பில் உள்ள அமைச்சர்கள் சிலர் கூறியிருந்தனர். ஆனால் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளதை சாதாரணமானதொன்றாக கருதிவிட முடியாது. ஏனென்றால் அவர் ஜனாதிபதியின் சகோதரர், அதிகாரம்மிக்க பதவியில் இருப்பவர்.
கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ள இந்தக் கருத்தை உலக நாடுகள் புறமொதுக்கி விட்டிருக்கும் என்று கருத முடியாது. குறிப்பாக, இந்தியா இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாது.
அத்துடன் அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் இலங்கை அரசுடன் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருக்காது.
கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துப்படி புலிகள் இருந்ததால் தான் அதிகாரங்களைத் தமிழர்களுக்குப் பகிர்ந்து கொடுக்க வேண்டிய நிலை இருந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்தக் கட்டத்தில் அவரது பேட்டியானது புலிகளுக்காக அதிகாரப்பகிர்வா அல்லது தமிழர்களுக்காக அதிகாரப்பகிர்வா என்ற கேள்வியை எழுப்ப வைத்துள்ளது.
தமிழர் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரங்களைப் பகிர வேண்டும் என்று இந்தியாவும் அமெரிக்காவும் மட்டுமன்றி பெரும்பாலான உலக நாடுகளே வலியுறுத்தி வருகின்றன.
இதற்குக் குறுக்கே தானும் இருக்கிறார் என்பதை கோட்டாபய ராஜபக்ஷ வெளியுலகிற்கு இப்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
அதிகாரப்பகிர்வு பற்றிய எழுத்து மூல ஆவணத்தைத் தருமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலக்கெடு ஒன்றை முன்வைத்து, பேச்சுக்களில் இருந்து ஒதுங்கப் போவதாகக் கூறியுள்ள நிலையில் தான், கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் மூலம் அரசதரப்பு பேச்சுக்களை நேர்மையுடன் நடத்தியிருக்குமா என்ற சந்தேகத்தை சர்வதேச சமூகத்துக்கு ஏற்படுத்தச் செய்துள்ளார் அவர். அரசாங்கத் தரப்பு கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதன் அடிப்படையை புரிந்து கொள்வதற்கு கோட்டாபய ராஜபக்ஷவின் பேட்டியே போதுமானதாக இருக்கும்.
இதுவரை 10 சுற்றுக்கள் நடந்த பேச்சுக்களின் மூலம் இருதரப்பும் எதையுமே சாதிக்கவில்லை. எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.
எட்டப்பட்ட இணக்கப்பாடுகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை, அரசியல் கைதிகளின் விபரங்களைத் தருவதாகக் கூறி கொஞ்சக்காலமாக இழுத்தடித்தது அரசாங்கம், அதற்குப் பிறகு அரசியல்தீர்வு யோசனையைத் தருவதாகக் கூறி இழுத்தடிக்கத் தொடங்கியது என்று அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 5 மாதங்களுக்கு முன்னர் ஒரு தீர்வு யோசனையை அரசிடம் கொடுத்தது. அதற்கான பதிலையே இப்போதும் அரசதரப்பிடம் கேட்கிறது.
அரசாங்கத் தரப்பு காலத்தை இழுத்தடித்து வந்ததால்இ கூட்டமைப்பு வெறுத்துப் போன நிலையில் தான், உள்ளூராட்சித் தேர்தலில் அவர்களுக்கு மக்களாணை கிடைத்தது. இந்த மக்களாணையை வைத்துக் கொண்டு பேரம் பேசும் உத்தியைக் கையாளத் தொடங்கியுள்ளது கூட்டமைப்பு.
இது சரியானதொரு சந்தர்ப்பம் பார்த்து கொடுக்கப்பட்ட அடி என்றே கூறலாம்.த.தே. கூட்டமைப்புடனான பேச்சுக்களை அரசாங்கம் தீர்வுக்காக நடத்தவில்லை- வெளியுலகை சமாதானப்படுத்தவே பயன்படுத்திக் கொள்கிறது என்ற பலமான குற்றச்சாட்டு உள்ளது.
இந்தக்கட்டத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்து வெளிநாடுகள் மத்தியில் த.தே. கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வலுப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அரசாங்கம் தீர்வு ஒன்றை வழங்க தயங்குவதால் தான் த.தே. கூட்டமைப்பை அலைக்கழிக்கிறது என்ற கருத்தi கோட்டாபய ராஜபக்ஷவின் பேட்டிவலுவாக்கும்.
இந்தக் கட்டத்தில் தான் இந்தியா இந்த விவாகரத்தில் மூக்கை நுழைப்பதற்கான எத்தனங்களில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேச்சுக்களை மீளத் தொடங்க வைப்பதற்காக நடுநிலை வகிப்பதற்கு இந்தியா விசேட தூதுவர் ஒருவரை நியமிக்கப் போவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொழும்புக்கு வரத் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஒரு முடிவுக்குள் வரவேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் தான் விசேட பிரதிநிதி ஒருவரை நியமித்து பேச்சுக்களை கண்காணிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் இந்த விசேட பிரதிநிதி கொழும்பில் இருந்தே பணியாற்றுவார் என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி முறைப்படியான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத போதும் இப்படியானதொரு பிரதிநிதிகள் நியமிக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் விரும்புமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் இது கிட்டத்தட்ட ஒரு இந்திய நடுநிலை முயற்சியாகவே கருதப்படுகிது.
ஏற்கனவே அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட எந்த வெளிநாட்டினது தலையீட்டையும் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறிவருகிறது. இந்தநிலையில் இந்தியாவின் பிரதிநிதி ஒருவர் பேச்சுக்களில் பங்கு கொள்வதை அரசாங்கமும் விரும்பாது. அரசாங்கத்துடன் இணைந்துள்ள கட்சிகளும் விரும்பப் போவதில்லை.
இந்தியாவின் பிரதிநிதி ஒருவர் பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்கு நடுநிலை வகிக்க முன்வரும் போது கூட்டமைப்பும் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கலாம்.
அதற்கு முன்னதாகவே கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் புதுடெல்லி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவர்களுக்கு நிச்சயம் காலக்கெடுவைக் கைவிடுமாறு அழுத்தம் கொடுக்கப்படும். இது வழக்கமானதோர் இராஜதந்திர நகர்வாகவே இருக்கும். இது கூட்டமைப்புக்கு சற்று நெருக்கடியாக இருந்தாலும் கோட்டாபய ராஜபக்ஷவின் பேட்டி உள்ளிட்ட விவகாரங்கள் கூட்டமைப்புக்கு பலத்தையே கொடுத்துள்ளன.
அத்துடன் இந்தியாவுக்கு மட்டுமன்றி சர்வதேச சமூகத்துக்கும் கூட்டமைப்பின் நிலைப்பாடு உறுதியான செய்தி ஒன்றைக் கொடுக்கும் என்றே நம்பலாம்.
பேச்சுக்களில் அரசாங்கம் இதயசுத்தியுடன் நடந்து கொண்டிருந்தால் எதற்காக கூட்டமைப்பு காலக்கெடு வைக்கும் அளவுக்குப் போனது என்ற கேள்வி வரும். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தீர்வுத்திட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த அது தயாராக இல்லை. அப்படி வெளிப்படுத்தினால் சிங்கள மக்களின் ஆதரவை இழந்து விடுவோம் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கிறது. முன்னர் இந்து நாளிதழுக்கு அளித்திருந்த ஒரு பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்கத்துக்குள் இருக்கின்ற சக்திகளே அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நிலை உருவாகலாம் என்ற அச்சம் அவருக்கும் இருக்கலாம்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தீவிர சிங்களத் தேசியவாதம் பேசுகின்ற சக்திகளைப் பகைத்துக் கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தயாரில்லை.
ஆனால், சர்வதேச சமூகமோ அரசாங்கமே முதலில் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இந்தியா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளும் இதையே தான் கூறினாலும் அரசாங்கமோ அதற்குத் தயாராக இல்லை. இப்போது இலங்கை அரசாங்கத்துக்கு பலமுனை அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன.
போர்க்குற்ற விவகாரம் மட்டுமன்றி அரசியல்தீர்வு, பேச்சுவார்த்தை, அதிகாரப் பகிர்வு என்று எல்லா முனைகளிலும் அழுத்தங்கள் சூழத் தொடங்கியுள்ளன.
இத்தனை அழுத்தங்கள் வரக் காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறு தரப்புகளோ அல்ல என்பது தான் வேடிக்கையான விடயம். அரசாங்கமே பொல்லைக் கொடுத்து அடியை வாங்கும் நிலையை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
gk Thursday, 11 August 2011 04:21 PM
தமிழ் தேசிய கூட்டமைப்பை வைத்து அரசாங்கம் தனது வாக்கு வங்கியை அதிகரிக்கின்றது. இவர்கள் அதிகாரம் கேட்டால் அரசாங்கம் அதனை மறுத்து அரசாங்கத்துக்கு சார்பான ஊடகங்கள் அதை பெரிது படுத்தி பத்திரிகைகளில் போடும். இதை பார்க்கும் பெரும்பான்மை மக்கள் என்ன செய்வார்கள்? வாக்கை அரசாங்கத்துக்கு போடுவார்கள். என்னதான் உத்தியை கையாண்டாலும் அநீதம் இழைப்பவனுக்கு ஏற்படும் தீய மரணத்தை யாராலும் தடுக்க முடியாது!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
8 hours ago