2026 மே 02, சனிக்கிழமை

மூன்றாவது அணிக்கு முலாயம் தலைமை?

A.P.Mathan   / 2012 மார்ச் 12 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்து முடிந்த கையோடு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா ஒரு காரியம் செய்தார். உத்திர பிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவிற்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதுபோன்றே பஞ்சாப் மாநில முதல்வரும் ஆளும் அகாலி தளம் கட்சியின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலுக்கும் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்தார். முன்னது முக்கியமானது. பின்னது, முன்னதின் முக்கியத்துவத்தை சிறிது மழுங்கடிப்பது. என்றாலும், எதிர்வரும் மக்களவை தேர்தலிலுக்குப் பின் தான் பிரதமர் ஆவதோ, அல்லது தனது அஇஅதிமுக ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிப்பதோ எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறும் யுக்தி அல்ல என்று ஜெயலலிதா ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடே அவர் முலாயம் சிங் யாதவை வாழ்தியது.

கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்த கையோடு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, வெற்றி பெற்ற அஇஅதிமுக தலைவர் ஜெயலலிதாவை முண்டியடித்துக் கொண்டு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் என்ற எண்ணம் திமுக கூட்டணி தலைமைக்கு தோன்றியது. ஆனால், தற்போது முலாயம் சிங் விடயத்தில் சோனியா மௌனம் காத்தது, கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தேசிய அரசியலை அலசும் நோக்கர்களுக்கு ஓர் அலசல் விடயமாக அமைந்துவிட்டது.

இது மட்டுமல்ல. இலங்கை இனப்போர் காலத்தில் தமிழக முதல்வராகவும் மத்தியில் ஆளும் கூட்டணியை ஆட்டிப்படைப்பவராகவும் காணப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, உத்திர பிரதேச தேர்தலுக்குப் பின் மத்திய அரசை அதிகமாகவே சாடத் தொடங்கியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் என்ற முறையில், ஜெயலலிதா நாளொரு கடிதம் அனுப்பி வருகிறார் என்றால், கூட்டணியின் தமிழக தலைவரான கருணாநிதியோ அதே வேகத்தில் இலங்கை உட்பட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு அதே அளவிலான நிர்ப்பந்தங்களை கொடுக்க தொடங்கியுள்ளார்.

இதுவரை, கருணாநிதியின் இந்த அறிக்கைகள் பிற்கால பயன்பாட்டிற்கு என்ற அளவிலேயே அரசியல் நோக்கர்களால் கருதப்பட்டு வந்தது. 'திமுக'வின் பிற தலைவர்கள் மத்திய அரசு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை அடக்கியே வாசித்துள்ளனர். அந்த நிலை தொடருகிறது என்றாலும், இலங்கை 'போர் குற்றங்கள்' குறித்த பி.பி.சி. தொலைகாட்சியின் 'சேனல்-4' வெளியிட்ட கோரமான காட்சிகளின் தமிழாக்கத்தை திமுக தலைமையுடன் எல்லா விதத்திலும் சேர்த்துப் பார்க்கப்படும் 'கலைஞர் டிவி' ஒளிபரப்பியது, பொருள்பொதிந்த முடிவு என்றே கருதப்படுகிறது. காரணம், விலைவாசி உட்பட்ட பல்வேறு மக்கள் சார்ந்த பிரச்சினைகளிலும் காங்திரஸ் தலைமையிலான மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்தில் மட்டுமல்ல, நாட்டின் எந்த பகுதியிலும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்ற தேர்தல் சார்ந்த எண்ணவோட்டம். 

சென்ற ஆண்டு தமிழ் நாட்டில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, ஆறு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற முடிந்தது. ஆனால் கூட்டணி தொடருமேயானால், 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு திமுக தலைமை அளவுக்கு அதிகமான இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டிவரும். கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, தொடர்ந்து வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியால், அடித்துப் பிடித்து வாங்கும் இடங்களில் எத்தனையில் வெற்றிபெற முடியும் என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு. திமுக தொண்டர்களை காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் உளப்பூர்வமாக தேர்தல் பணிசெய்ய வைக்க முடியும் என்று திமுக தலைமை நினைப்பதாக தெரியவில்லை. இத்தனை பின்னணிகளில், சட்டப்பேரவையில் 'எதிர்க்கட்சி அந்தஸ்து' கூட இல்லாமல் வலம் வரும் திமுக, முன்னர் இருந்தது போல் கூட்டணி கட்சிக்கு, தேர்தல் லாபம் இல்லாமல் அதிக இடங்களை தொடர்ந்து தாரைவார்த்து விடும் என்று கருத இடமில்லை. அப்படிப் பார்த்தால், காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக விஜய்காந்தின் தேமுதிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை உள்ளடக்கிய வியூகத்தை மக்களவை தேர்தலுக்கு அமைக்க திமுக தலைமை ஆலோசனை செய்யலாம்.

எப்படி தமிழகத்தில் 'திமுக'விற்கு பிரச்சினை உள்ளதோ, அதுபோன்றே மத்திய அரசில் காங்கிரஸ் கூட்டணியில் பங்கு வகிக்கும் பிற மாநில கட்சிகளான மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மஹாராஷ்டிரத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவையும் இதுபோன்ற மறுபரிசீலனை 'மூட்'இல் இருக்கின்றன. பவாரை பொறுத்த வரை, திமுக-வின் 'அலைகற்றை' பிரச்சினை போன்ற விடயங்களில் காங்கிரஸ் கட்சி தலைமை, மத்திய அமைச்சரவையின் ஒருமித்த முடிவில் இருந்து விலகி நின்று, தங்களை தனிமைப்படுத்தி வெளியில் நின்று வேடிக்கை பார்ப்பதாக நினைக்கிறது. மம்தா பானர்ஜியோ, விலைவாசி உயர்வுக்கும் தனது அனுபவமின்மையால் மேற்கு வங்க மக்கள் அனுபவித்து வரும் பிரச்சினைகளின் அடிப்படையில் எதிர்கட்சியான இடதுசாரி இயக்கங்கள் மக்களவை தேர்தலில் முதலெடுத்து விடுமோ என்ற கவலையில், 'பழிபோட' ஓர் இலக்கினை இப்போதே தேடுகிறார்.

உத்திர பிரதேசத்தில் தனது மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக ஆக்கியதன் மூலம் முலாயம் சிங், தனது முந்தைய பதவிகாலத்தின் 'காட்டாட்சிக்கு' முற்றுபுள்ளி வைத்துவிட்டதை மாநில மக்களுக்கு பறைசாற்றியுள்ளார். வரும் மாதங்களில் இதனை செயல்படுத்துவதிலும் புதிய அரசின் பிற செயல்பாடுகளில் தலையிடாமல் வெளியில் இருந்து வழிநடத்துவதிலும் அவரது முனைப்புகளை ஒட்டியே மக்களவை தேர்தலிலும் சமாஜ்வாதி கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள்.

என்றாலும், சட்டப்பேரவை தேர்தலில் அவரது கட்சி வென்றெடுத்த 224 தொகுதிகள் மற்றும் இரண்டாவதாக வந்த இடங்களையும் வைத்து கணக்கிட்டால், நாடாளுமன்ற தேர்தலிலும் அவரது கட்சி, தமிழகத்தில் அஇஅதிமுக உட்பட்ட பிற மாநில கட்சிகளை விட தேசிய அளவில் முன்னின்று, பின்னால் உருவாகும் மூன்றாவது அணிக்கு தலைமை தாங்கும் உரிமையை பெறும் என்றே தோன்றுகிறது. அதே சமயம் தேர்தல் தோல்வியை சுயபரிசீலனை செய்யும் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தால், உத்திர பிரதேசத்தில் ஆட்சி மாறாவிட்டாலும் 'தேர்தல் காட்சி' மாறலாம்.

கடந்த 1996 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் மத்தியில், காங்கிரஸ் ஆதரவுடன் 'பாரதீய ஜனதா எதிர்ப்பு' கட்சிகளின் கூட்டணியின் பிரதமர் வேட்பாராக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிறுவனர் மூப்பனாரின் பெயரோடு முலாயம் சிங் யாதவின் பெயரும் வெகுவாக அடிபட்டது. இடையில், 1996ஆம் ஆண்டு தேவே கௌடா பிரதமரான போதும், பின்னர் அவருடைய இடத்தில் குஜ்ரால் பதவியேற்ற போதும் கூட முலாயம் பெயரும் அடிபட்டது. மூப்பனார் ஆகட்டும், முலாயம் ஆகட்டும், பிரதமர் ரேஸில் இருவரில் ஒருவர் பிரதமர் பதவியை பெறாததற்கு ஆதரவாளர்கள் அவர்களது பெயர்களை முந்திரி கொட்டை போல் அவசர அவசரமாக முன்மொழிந்ததும், இரண்டு பேரும் இல்லாமல் போட்டியில் இல்லாத தேவே கௌடா, பின்னர் குஜரால் ஆகியோரை கூட்டணி கட்சிகள் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம்.

மூப்பனார், முலாயம் ஆகிய இருவரில்; ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுத்தால் எங்கே இல்லாத கூட்டணி உருவாகாமலே போய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கு. தற்போது மக்களவை தேர்தலுக்கு இன்னும் மாதங்கள் பல உள்ள நிலையில் அரசு அனுபவம் இல்லாத தனது மகனை முதலமைச்சராக ஆக்கியுள்ள நிலைமையில் பிரதமர் பதவிக்கு தான் ஒரு வேட்பாளர் என்று வெளிப்படுத்தாமலே முலாயம் அதனையே பிரகடனப்படுத்தியுள்ளார். இது அவருக்கு மக்களவை தேர்தலில் பிரசாரம் செய்வதற்கும் பிந்தைய பிரதமர் தேர்வு குறித்து இப்போதே திட்டம் வகுத்து செயல்படுவதற்கும் அதிக நேரத்தை கொடுக்கும். அதே சமயம், முன்பு நடத்தது போலவே அவரை தேசிய அரசியலில் போட்டியாக நினைக்கும் பிற மாநில கட்சி மற்றும் தேசிய கட்சி தலைவர்களுக்கும் அவரை எதிர்த்து திட்டம் தீட்டவும் இப்போது தொட்டே பிரசாரம் செய்யவும் அதிக நேரத்தை கொடுத்துள்ளது.
 


  Comments - 0

  • easternbrother Tuesday, 13 March 2012 03:09 AM

    உத்திர பிரதேசத்தில் முலாயம் சிங் வெற்றி பெற்றதற்கு முஸ்லிம்களின் பெரும் வாக்கு பலம் என்பதை அவர் தெரிவித்துள்ளார்....... இந்து வெறி கட்சியான பா.ஜ.கட்சி ஆட்சிக்கு வருவதை முஸ்லிம்கள் ஒருபோதும் விரும்புவதில்லை... அதனால் முலாயம் சிங்குக்கு அடித்தது அதிஷ்டம்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .