2026 மே 02, சனிக்கிழமை

மீண்டும் சசிகலா: கலக்கத்தில் தமிழக அமைச்சர்கள்!

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 02 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

"என் வாழ்க்கையை ஏற்கனவே அக்காவிற்கு (முதல்வர் ஜெயலலிதா) அர்பணித்து விட்டேன். எஞ்சிய காலத்திலும் அவருக்கு உதவியாகவே இருக்க விரும்புகிறேன்"- இப்படியொரு பரபரப்பு அறிக்கையை வெளியிட்டார் சசிகலா. முதல்வரின் இல்லமான போயஸ்தோட்டத்திலிருந்தும், அ.தி.மு.க.விலிருந்தும் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி வெளியேற்றப்பட்டார் சசிகலா. அவருடன் அவரது கணவர் நடராஜன், மற்ற உறவினர்களான திவாகரன், டி.டி.வி. தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ், எம்.ராமச்சந்திரன், இராவணன், மிடாஸ் மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி, பழனிவேல், கலியபெருமான், சந்தானலட்சுமி சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா, சுந்தரவதனம் ஆகியோரும் நீக்கப்பட்டார்கள். அதேபோல் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் நீக்கி உத்தரவிட்டிருந்தார் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. போயஸ் கார்டன் மற்றும் அ.தி.மு.க.வின் அதிகார மையத்திலிருந்து இப்படி மொத்தம் 19 பேர் நீக்கப்பட்டார்கள்.

சசிகலா உள்ளிட்ட 20 பேரின் நீக்கம் கட்சிக்குள் ஒரு புதிய மாற்றத்தை தோற்றுவித்தது. "இனிமேல் கட்சிப் பதவியோ, அமைச்சர் பதவியோ உழைப்பவர்களுக்கு கிடைக்கும்" என்ற எண்ணம் சீனியர் லீடர்கள் மத்தியில் மேலோங்கியது. ஆனால் இவர்கள் எல்லாம் நீக்கப்பட்டு நூறு நாட்களுக்குப் பிறகு சசிகலா விடுத்துள்ள பரபரப்பு அறிக்கை அ.தி.மு.க.விற்கு மிகப்பெரும் சுனாமி ஒன்றே உருவாக்கியுள்ளது. இந்த அறிக்கை வெளிவந்ததன் பின்னணி சற்று வித்தியாசமானது. சசிகலா உள்ளிட்டோர் விலக்கி வைக்கப்பட்டவுடன், பொலிஸ் அவர்களுக்கு எதிரான புகார்களை அவசர அவசரமாக வாங்கியது. அரசு வேலைகளுக்காகவும், கட்சி பதவிகளுக்காகவும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பட்டியல் நாளுக்கு நாள் புகார் மழையாக கொட்டத் தொடங்கியது. ஆனால் அதன் மீது நடவடிக்கைகள் மிகவும் கவனமாகவே எடுக்கப்பட்டன. தஞ்சையில் எம்.நடராஜனுடன் சேர்ந்து பொங்கல் விழாவினை படு விமரிசையாக நடத்திய திவாகரன் மீது முதலில் நில அபகரிப்பு புகார் பாய்ந்தது. அவரை கைது செய்ய பொலிஸ் வலை போட்டு தேடியது. திவாகரன் தலைமறைவு ஆகிவிட்டதால், அவரது மனைவியையே பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக வரச் சொல்லி நெருக்கடியை கொடுத்தார்கள். வேறு வழியின்றி திவாகரன் பிறகு பொலிஸின் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இன்னும் ஜெயிலில்தான் இருக்கிறார்.

அடுத்து கைது நடவடிக்கைக்கு உள்ளானவர் இராவணன். இந்த முறை அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு "அதிகார மையம் நான்தான்" என்ற தோரணையில் களம் இறங்கி செயல்பட்டவர் இவர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், கொன்ட்ராக்டர்கள் எல்லாம் "இராவண கடாட்சம்" கிடைக்காதா என்று ஏங்கிய காலமாக மாறியது. பிரபல அதிர்ஷ்ட லாப சீட்டு அதிபர் மார்ட்டின் மூலம் முதலில் இராவணனுக்கு எதிராக புகார் வாங்க முயற்சி செய்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இந்த வேளையில் திடீரென்று ராதாகிருஷ்ணன் என்பவர் தன் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி விட்டார்கள் என்று கோயம்புத்தூர் பொலிஸில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் சசிகலாவையும் சேர்த்துக் கொடுத்திருந்தார். ஆகவே அந்த புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு மணல் கொன்ட்ராக்ட் வாங்கித் தருகிறேன் என்று கூறி பணம் பெற்றார் என்று ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இராவணன் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இன்னும் சிறையில் தான் இருக்கிறார். மூன்றாவதாக கைது நடவடிக்கைக்கு உள்ளானவர் சசிகலாவின் கணவர் நடராஜன். இவர் மீது அவரது சொந்தக்கிராமமான விளாரிலேயே நில அபகரிப்புப் புகார் வந்து, அப்புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அவரும் இன்னும் திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருக்கிறார். சசிகலா மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்ற பட்டிலிலும் முதல் மூன்று ஸ்தானத்தில் இருந்த இராவணன், திவாகரன், நடராஜன் ஆகிய மூவரும் முதல் ரவுண்டில் சிறையில் தள்ளப்பட்டார்கள். இதில் கடைசி ரவுண்டாக மிடாஸ் மோகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சசிகலாவின் அரசியல் மற்றும் அரசு நடவடிக்கைகளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தவர் என்று அனைவராலும் அறியப்பட்டவர். இவர் கைதிற்கு பிறகே சசிகலாவின் அறிக்கை வெளிவந்தது. அதில், "அக்காவிற்கு (முதல்வர் ஜெயலலிதா) எதிராக துரோகம் செய்தார்கள் என்று தெரிந்து மன வேதனைப்பட்டேன். அவருக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கு வேண்டாதவர்கள். அவர்களோடு ஒட்டோ உறவோ கிடையாது" என்று ஆணித்தரமாக அந்த அறிக்கையில் சொன்னார்.

அறிக்கையின் பின்னணியில் பெரும் பாசப்போராட்டம் இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவிற்கும், சசிகலாவிற்கும் ஏறக்குறைய 28 ஆண்டு கால நட்பு. அதில் எந்த காலகட்டத்திலும் சசிகலா தனக்கு துரோகம் செய்வார் என்று முதல்வர் ஜெயலலிதா எண்ணியதில்லை. அவரது உறவினர்கள் துரோகம் செய்வார்கள், சசிகலா செய்யமாட்டார் என்பதில் அவருக்கு நம்பிக்கையுண்டு. அது முதலில் கோவையில் ராதாகிருஷ்ணன் என்பவர் இராவணனுக்கு எதிராக புகார் கொடுத்த போதே தெரிய வந்தது. அந்த புகாரில் சசிகலாவும் சேர்க்கப்பட்டிருந்ததால், அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. சசிகலாவின் நீக்கத்திற்கு பிறகு பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கு சூடுபிடித்தது. எல்லோரும் முதல்வர் ஜெயலலிதாவை சசிகலா மாட்டிவிடப் போகிறார் என்றெல்லாம் கட்டுரைகள் எழுதினார்கள். ஆனால் சசிகலாவோ, முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் என்ன சொன்னாரோ, அதற்கு வலு சேர்க்கும் விதத்திலேயே நீதிமன்றத்தில் விளக்கங்களைச் சொன்னார். "முதல்வருக்கு இதில் சம்பந்தமில்லை", "அவருக்கு எதுவும் தெரியாது", "எல்லாம் நான்தான் செய்தேன்" என்றே நீதிபதி முன்பு அந்த சொத்துக்குவிப்பு வழக்கில் பதில் சொன்னார். சசிகலா தனக்கு துரோகம் நினைக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா நம்புவதற்கு கிடைத்த இரண்டாவது சந்தர்ப்பம் அது. அது மட்டுமின்றி சசிகலா நீக்கப்பட்ட போதே, "எங்கள் வீட்டு ஆண்கள் எல்லாம் சேர்ந்து தவறு செய்து விட்டார்கள். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எல்லாம் என் அக்காவின் துரோகிகள்" என்றே தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார். இதுவும் மாநில உளவுத்துறை மூலம் முதல்வர் ஜெயலலிதாவிற்கு வந்துள்ளது. இது மாதிரி சந்தர்ப்பத்தில்தான் தனது உறவினர்கள் தொடர்பை துண்டித்து விட்டதாக அறிக்கை விடுத்தார் சசிகலா. முதல்வரின் மீதுள்ள பாசத்தில், முன்பொரு முறை தனது கணவர் நடராஜனின் உறவை துண்டித்து அறிக்கை விட்டிருக்கிறார் சசிகலா. அதனால்தான் இன்றும் கூட அவர் தன் பெயரை "என்.சசிகலா" என்று போடுவதற்கு பதில் "வி.கே.சசிகலா" என்றே போட்டு வருகிறார்.

அறிக்கை வந்த பிறகு மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டுமா என்ற மனப்போராட்டம் முதல்வருக்கு ஆரம்பித்தது. அவரைப் பொறுத்தமட்டில் நூறு நாட்களுக்கு மேல் சசிகலா இல்லாமல் அரசு பணியில் கவனம் செலுத்தி வருகிறார். இருந்தாலும், தன் மனதில் பட்ட விடயங்களை வெளிப்படையாக விவாதிக்க கார்டனில் அவருக்கு இணையாக யாரும் இல்லை. அது மட்டுமின்றி முதல்வரின் உணவு பழக்கங்கள், உடல் நிலைக்கு தேவையான விடயங்கள் எல்லாமே சசிகலாவிற்கு அத்துப்படி. இந்தமுறை முதல்வரானவுடனேயே, "நீங்கள் சசிகலா அன்ட் குடும்பத்தை நீக்கி வைக்க வேண்டும்" என்று சொன்னார்கள். அப்போது முதல்வர் ஜெயலலிதா, "நீக்க வேண்டாம். சசிகலாவின் உறவினர்களை கன்ட்ரோல் பண்ணுகிறேன்" என்று கூறியிருக்கிறார். அது எளிதான காரியமல்ல. ஆகவே நீக்கிவிடுங்கள் என்று கூறவே, அப்போது சசிகலா மற்றும் அவரது உறவினர்களை நீக்கினார். ஆனால் இப்போது "வில்லன்கள்" என்று முதல்வர் ஜெயலலிதா நினைக்கும் திவாகரன், இராவணன், நடராஜன் ஆகிய மூவரும் சிறையில் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் மீதும் நான்கு, ஐந்து வழக்குகள் இருக்கின்றன. அவற்றில் இராவணனுக்கு எதிரான வழக்கு ஒன்றில் குற்றப் பத்திரிகையே தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் இவர்கள் அனைவருக்கும் இனிமேல் தங்கள் வழக்குகளை சமாளிப்பதற்கும், அதில் ஆஜராவதற்குமே நேரம் சரியாக இருக்கும். ஆகவே இவர்கள் இனி ஆட்சிக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட நேரம் இருக்காது என்ற முடிவிற்கு வந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அதனால்தான் சசிகலாவின் அறிக்கையை ஏற்று, அவர் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டதை மார்ச் 31ஆம் திகதி ரத்து செய்துள்ளார். அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அந்த அறிக்கையிலேயே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு விடயத்தை அழுத்தம் திருத்தமாக அறிவித்திருக்கிறார். அது சசிகலா தவிர மற்றவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் (கட்சியை விட்டு நீக்கியது) எந்தவித மாற்றமும் இல்லை. அந்த நடவடிக்கை அப்படியே தொடரும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். இதை முன்னிட்டே சசிகலா அறிக்கை வெளிவந்த பிறகே கூட, அதே பகுதியை சேர்ந்த குடவாசல் ராஜேந்திரன் என்ற அ.தி.மு.க. நிர்வாகியை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். இன்னொரு மணமேல்குடி ஒன்றிய செயலாளராக இருந்த கார்த்திகேயேன் என்பவரை கட்சியை விட்டு நீக்கி, கைதும் செய்திருக்கிறார். சசிகலா போயஸ் கார்டனுக்கே வந்து அந்த அறிக்கையை வெளியிட்டதாகவே தகவல். இப்போது போயஸ் கார்டனுக்குள் வந்து விட்டாரா என்று இன்னும் உறுதி செய்ய முடியாத சூழ்நிலை நிலவினாலும், அ.தி.மு.க.வில் சேர்க்கப்பட்டு விட்டார். கட்சி விரோத நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. ஆகவே எந்த நேரமும் போயஸ் கார்டனுக்குள் சசிகலா வருவார். ஆனால் அவரை எதிர்த்து அறிக்கை விட்ட முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், சசிகலா நீக்கத்தை எதிர்த்து ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய அ.தி.மு.க. நிர்வாகிகள் எல்லாம் ஏக டென்ஷனில் இருக்கிறார்கள். சசிகலாவின் நீக்கம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது என்றால், இப்போது அவர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்பட்டிருப்பது அக்கட்சிக்குள் "சுனாமி"யை உருவாக்கியுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லாம் "இனி என்ன நடக்கும்" என்ற கலக்கத்தில் இருக்கிறார்கள்.


  Comments - 0

  • MADURANKULI KURANKAAR Tuesday, 03 April 2012 07:39 AM

    இந்த அம்மாவுக்கு வேற வழியில்லை

    Reply : 0       0

    Riswan Tuesday, 03 April 2012 09:09 PM

    அம்மா என்றால் சும்மாவா !!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .