2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நவநீதம்பிள்ளையின் பதவி நீடிப்பை இலங்கை எதிர்க்காதது ஏன்?

Super User   / 2012 ஜூன் 02 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                 (கே.சஞ்சயன்)

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பதற்கு, கடந்தவாரம் ஐ.நா பொதுச்சபை அங்கீகாரம் அளித்துள்ளது.

இவரது பதவியை மேலும் இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுமதி கோரியதை அடுத்து, இந்த அனுமதி கொடுக்கப்பட்டது. அதுவும் ஏகமனதான அங்கீகாரம் கிடைத்தது.

193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா பொதுச்சபையில் நவநீதம்பிள்ளையின் பதவி நீடிப்புக்கு எந்த நாடுமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது தான் ஆச்சரியமான விடயம். நவநீதம்பிள்ளையை கடுமையாக எதிர்த்த நாடுகளில் ஒன்று இலங்கை.

அவர் பாரபட்சமான முறையில் நடந்து கொள்வதாகவும், ஐ.நா சாசனங்களை மீறிச் செயற்படுவதாகவும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர்களில் இலங்கைப் பிரதிநிதிகளால் குற்றம் சுமத்தப்பட்டவர் தான் நவநீதம்பிள்ளை.

அப்படியிருந்தும் ஐ.நா பொதுச்சபையில் இலங்கைப் பிரதிநிதியான பாலித கொஹன்ன, அவருக்கு எதிராக எந்தக் கருத்தையும் கூறவில்லை. பாரபட்சமாக நடக்கும் ஒருவர், மீண்டும் அந்தப் பதவிக்கு வருவதை இலங்கை எதிர்த்திருக்க வேண்டும். அது தானே முறை.

ஜெனிவாவில் நவநீதம்பிள்ளை மீது சுமத்திய குற்றச்சாட்டு உண்மையானதென்றால்இ நியூயோர்க்கில் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்க வேண்டும். அப்படிக் களமிறங்கியிருந்தால், இலங்கைக்கு ஆதரவளிக்க ஐ.நா பொதுச்சபையில் பல நாடுகள் இருந்தன.

குறிப்பாக ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான், சிரியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு கொடுக்கக் கூடிய நிலையில் தான் இருந்தன.

ரஷ்யாவும், சீனாவும் ஏற்கனவே ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியிருந்தன.

அத்துடன் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் மேற்கு நாடுகளின் செல்வாக்கே அதிகம் இருப்பதாகவும் இவை குறை கூறி வருகின்றன. கியூபாவும் கிட்டத்தட்ட அதே நிலைப்பாட்டில் தான் இருந்தது.

சிரியாவோ தன் மீது நவநீதம்பிள்ளையின் அலுவலகம் கடும்போக்கு காட்டுவதாகவும்- பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் விமர்சித்து வந்தது.

பாலஸ்தீனர்களின் விவகாரத்தில் தனக்கு எதிராக நவநீதம்பிள்ளையின் அலுவலகம் செயற்படுவதாக இஸ்ரேலும் கூறிவந்தது.

இப்படி ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் செயற்பாடுகளால், அதன் தலைமையைப் பிடிக்காத பல நாடுகள் இருந்தன. இந்த நாடுகள் தமது நாடுகளின் மீதான தலையீட்டை விரும்பவில்லை அல்லது விமர்சனங்களை சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. இவற்றோடு இலங்கையும் இருந்தது.

ஆனாலும் இந்த நாடுகள் எதுவுமே நவநீதம்பிள்ளைக்கு எதிராக குரல் கூடக் கொடுக்கவில்லை. மற்றெல்லா நாடுகளும் மௌனமாக இருந்தது ஆச்சரியமல்ல.

இலங்கை எதற்காக அமைதியாக இருந்து, அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் தயங்கியது என்ற கேள்வி முக்கியமானது.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தின் பின்னணியில் நவநீதம்பிள்ளையின் அலுவலகமே இருந்ததாக அரசாங்கம் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்த இந்தியா மீதான இலங்கை அரசின் கோபம் இன்னும் குறையவேயில்லை. நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஐ.நா பொதுச்சபையில் வந்தபோதுஇ ஜெனிவா தீர்மானத்தை மனதில் வைத்து, இந்தியா நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து வாக்களித்தது.

ஆனால், ஜெனீவா தீர்மானத்தின் தீவிரத்தைக் குறைத்து, தலையோடு போக வேண்டியதை  'தலைப்பாகை'யுடன் காப்பாற்றிய இந்தியாவை எதிர்த்த இலங்கை-
இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவதில் பின்னணியில் இருந்ததாகக் கூறிய நவநீதம்பிள்ளைக்கு எதிராக வாக்களிக்காமல் வேடிக்கை பார்த்துள்ளது.

இதை வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு நாம் வரமுடிகிறது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானம் அரசாங்கத்தை ஒரு 'வழிக்கு' கொண்டு வரத் தொடங்கி விட்டது என்பதே அது.

வெளிவிவகார அமைச்சர் பீரிசின் அமெரிக்கப் பயணம், அமெரிக்கா கேட்டுக் கொண்ட பல விடயங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் காட்டும் முனைப்பு என்பன இதனைச் சுட்டிக்காட்டுகின்றன.

வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலை மீளாய்வு செய்யப்படவுள்ளது.

இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மீளாய்வு.  இலங்கை குறித்த இந்த மீளாய்வுக்கு இந்தியா, பெனின், ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகள் தான் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் துரதிஷ்டம் என்னவென்றால், இவை மூன்றுமே ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்தவை என்பது தான்.

எனவே அரசாங்கம், வரும் நவம்பவர் மாதம் நடைபெறப் போகின்ற மீளாய்வை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட முடியாது. இலங்கைக்கு, இந்தியா தயவு காட்டும் என்ற நம்பிக்கை இருந்தாலும், கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர், இந்தியாவுடன் நெருக்கம் குறைந்து போயுள்ளது.

ஏனைய நாடுகள் இரண்டும் இலங்கைக்கு சார்பாக நடந்து கொள்ள அவ்வளவுக்கு வாய்ப்பில்லை.

எனவே சர்வதேச அரங்கில் தனது போக்கையும், அணுகுமுறைகளையும் சற்று மாற்றிக் கொள்ளத் தலைப்பட்டுள்ளது என்றே விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஐ.நாவுக்கோ, ஐ.நா அதிகாரிகளுக்கோ அல்லது மேற்குலக நாடுகளுக்கோ எதிராக எந்தக் கருத்தையும் வெளியிட வேண்டாம் என்ற தகவல் ஐரோப்பாவில் உள்ள இலங்கை இராஜதந்திரிகளுக்கு கொழும்பில் இருந்து பரிமாறப்பட்டுள்ளதாகவும் தகவல்.

ஜெனிவா தீர்மானத்தின் பின்னர் வெளிநாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திரிகள் சிலர் வாய்க்கு வந்தபடியெல்லாம் மேற்குலகையும் ஐ.நா அமைப்புகளையும் வசைபாடியிருந்தனர்.

அப்படியொரு சந்தர்ப்பத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் கொடும்பாவி எரிக்கும் போராட்டத்துக்கு பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தலைமை தாங்கியும் இருந்தார்.

இவையெல்லாம் சர்வதேச அரங்கில் இலங்கையின் பெயரைக் கெடுத்து- அந்த நாடுகளுடனான  உறவுகளையும் சீர்குலைத்து விட்டன என்ற உண்மை இப்போது தான் அரசுக்கு உறைக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் தான் நவம்பர் வரை அமைதியாக- குட்டையைக் குழப்பாமல் இருக்கும்படி அறிவுறுத்தல் சென்றுள்ளதாகத் தெரிகிறது.

நவநீதம்பிள்ளைக்கு பதவிநீடிப்புச் செய்யும் தீர்மானம் ஐ.நா பொதுச்சபையில் விவாதத்துக்கு கொண்ட வரப்பட்ட போது, இலங்கைப் பிரதிநிதி பாலித கொஹன்ன வாய் திறக்காமல் இருந்ததற்கு இதுவே காரணம்.

சர்வதேச சமூகத்தின் பகையை - எதிர்ப்பை இனிமேலும் சம்பாதிக்காமல் குறைந்தபட்சம் இப்போதுள்ள நிலையாவது தொடர வேண்டும் என்றே அரசாங்கம் விரும்புகிறது.

அதேவேளைஇ நவநீதம்பிள்ளை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பதவியில் இருப்பதற்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தை, அரசாங்கம் விரும்பி வரவேற்றது என்று கூற முடியாது.

அவர் ஒரு தமிழர் என்பதால்- தமக்கு விரோதமாக நடந்து கொள்ளக் கூடுமோ என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கலாம். அவர் இந்தப் பதவிக்கு முதல்முறையாக நியமிக்கப்பட்ட போதே அரசாங்கம் இந்த அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தது.

நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவுக்கு வந்திருந்தால், ஏனைய 192 நாடுகளை விட அதிகம் சந்தோசப்பட்டிருப்பது இலங்கையாகத் தான் இருக்க முடியும்.

காரணம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரே, ஜெனிவா தீர்மானத்தின் அடிப்படையில்- இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான அறிக்கையை அளிக்க வேண்டும்.

நவநீதம்பிள்ளை அடுத்த இரண்டு ஆண்டுகள் ஜெனிவாவில் சக்திவாய்ந்தவராக இருக்கப் போவது இலங்கைக்கு கவலை தரும் விடயமாகவே இருக்கும்.

எpர்வரும் நவம்பரில் நடக்கவுள்ள மீளாய்வுக் கூட்டம், வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை என்பன அரசுக்கு கணிசமான நெருக்கடிகளைக் கொடுக்கும்.

இந்தச் சூழலில் ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய, இலங்கைக்கு ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப  உதவிகளை வழங்குவது பற்றிக் கலந்துரையாட ஒரு குழுவை அனுப்பவுள்ளதாக நவநீதம்பிள்ளை அறிவித்துள்ளார்.

ஜுலை மாதம் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ள இந்தக் குழுவை வரவேற்க அரசாங்கம் தயாராக இல்லை. தமக்கு யாருடைய ஆலோசனையோ தொழில்நுட்ப உதவிகளோ தேவையில்லை என்கிறது அரசாங்கம்.

ஒருபக்கத்தில் ஐ.நாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதை தவிர்த்துக் கொண்டாலும், இன்னொரு பக்கத்தில் ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் அரசாங்கம் இன்னமும் முரண்பட்டுக்கொண்டே இருக்கிறது.

அரசாங்கத்தின் இந்தப் பிடிவாதம் நிலைத்து நிற்குமா அல்லது தளர்ந்து போகுமா என்பதை பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .