2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அரசியலில் தலையிடுமா இராணுவம்?

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 26 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியை தழுவினால், அமைதியான முறையில் அதிகாரத்தை கையளிப்பேன் என்று சர்வதேசவளவில் பிரபலமான பினான்சியல் ரைம்ஸ் நாளிதழுக்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.  

இத்தகையதொரு கேள்வியை பினான்சியல் ரைம்ஸ் எழுப்பியமைக்கு முக்கிய காரணம், தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால், அதிகார கைமாற்றம் சுமுகமான முறையில்  நடைபெறுமா என்ற சந்தேகமே.  

ஜனாதிபதித் தேர்தலில் கடுமையான போட்டி உருவாகியுள்ள நிலையிலும் இந்தப் போட்டி நாளுக்குநாள் தீவிரமடைந்துவருகின்ற நிலையிலும் வெற்றி, தோல்வி என்பது நிச்சயமற்றதொன்றாக மாறியுள்ளது.

வெளிப்படையாக சொல்வதானால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
மயிரிழையில் பொதுவேட்பாளர்  மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக  அமெரிக்க ஆய்வு மையமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மதில் மேல் பூனைகளாக இருக்க முற்பட்டவர்களும் அரச தரப்பில் இருந்தவர்களும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்தில் இணையத்; தொடங்கியுள்ளமை எதிரணியின் பலத்தை அதிகப்படுத்திவருகிறது.

இத்தகைய நிலையில், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால், எப்போது பதவி ஏற்பது என்பதில் தொடங்கி, அடுத்தடுத்து என்னென்ன நடக்கும் என்பதற்கான நிகழ்ச்சிநிரல் கூட, எதிரணியால் தயாரிக்கப்பட்டுவிட்டது. பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பது, ஜனாதிபதியின் செயலாளராக சரித்த ரத்வத்தையை நியமிப்பது, அமைச்சரவை நியமனம், நாடாளுமன்றம் கலைப்பு, நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு, புதிய தேர்தல், அமைச்சர்கள் நியமனம் என்று ஒவ்வொன்றாக நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது வெற்றியின் மீது எதிரணியினர் கொண்டுள்ள நம்பிக்கை வலுப்பெற்றுவருவதை மட்டும் காட்டவில்லை. அரசாங்கத் தரப்புக்கு தோல்வியின் அச்சத்தை கொடுக்கின்ற ஓர் உளவியல் உத்தியாகவும் கூட கருதப்படுகிறது.

இந்தத் தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றால், அதை அடுத்து எதுவுமே நடக்கப்போவதில்லை. ஏனென்றால், அவர் தனது மூன்றாவது பதவிக்காலத்தை கூட உடனடியாக ஆரம்பிக்கப்போவதில்லை.

ஓர் ஆண்டு கழித்து, 2015ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதியே, தனது மூன்றாவது பதவிக்காலத்தை அவர் ஆரம்பிப்பார். எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், சம்பிரதாயமாக ஒரு தேர்தல் நடத்தப்பட்டதாக மட்டுமே இருக்கும். அதை அடுத்து எத்தகைய பரபரப்பான சம்பவங்களோ, நிகழ்வுகளோ நடக்காது. வேண்டுமானால், சில மாதங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம். ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டவர்கள் பழிவாங்கப்படலாம். இதற்கப்பால், வேறு எந்தப் பரபரப்பையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை.

ஆனால், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால், தொடர்ச்சியான பரபரப்பான பல நிகழ்வுகள் நடந்தேறும் வாய்ப்புகள் உள்ளன. அதில் மிக முக்கியமான விடயம் அதிகார கைமாற்றம்.

அதிகாரத்திலிருக்கும் ஒருவர் தேர்தலொன்றில் தோல்வியை தழுவினால், வெற்றி பெற்றவரிடம் அதிகாரத்தை முறைப்படி ஒப்படைக்கவேண்டும். அது அமைதியாகவும் சுமுகமாகவும் நடந்தாலே ஜனநாயகம் வெற்றி பெற்றதாக கருதப்படும். இந்தத் தேர்தலில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால், அதிகாரம் சுமுகமான முறையில் கைமாற்றப்படுமா என்ற கேள்வி இப்போது வலுவாக எழுந்துள்ளது. அதற்கு, தற்போதுள்ள அரசியல் சூழலும் அரசாங்கத்திலும் பாதுகாப்புக் கட்டமைப்பிலும் நிலவுகின்ற தனியொரு குடும்பத்தின் ஆதிக்கமுமே  பிரதான காரணங்கள்.

தேர்தலில் தோல்வி அடைந்தால்,  என்ன நடக்குமென்று வெளிப்படையாகவே இரண்டு தரப்பினரால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முதலாவதாக, இந்தக் கேள்வியை எழுப்பியது கத்தோலிக்க ஆயர்கள். இரண்டாவதாக, இந்தக் கேள்வியை எழுப்பியது பினான்சியல் ரைம்ஸ் நாளிதழ்.

ஆயர்களை பொறுத்தவரையில் இந்த விடயம் தொடர்பில் அதிகம் கவலை கொண்டுள்ளவர்களாக இருக்கின்றனர். ஆயர்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த கத்தோலிக்க மக்களுக்குமே இதுவொரு கரிசனைக்குரிய விவகாரமாக இருந்துவருகிறது. ஏனென்றால், ஜனாதிபதித் தேர்தல் முடிவு வெளியான ஐந்தாவது நாளில், பாப்பரசர் பிரான்சிஸ் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கப்போகிறார். அவர் வரும்போதும் இங்கு தங்கியிருக்கின்றபோதும் அமைதியான சூழல் நிலவவேண்டும். எந்தப் பதற்றமும் இருக்கக்கூடாதென்றும் விமான நிலையத்தில் அவர் சுமுகமான முறையில் அரச தலைவர்களால் வரவேற்கப்பட வேண்டுமென்றும் கத்தோலிக்க திருச்சபை விரும்புகிறது. எனவே, தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்தால்,  என்ன நடக்குமென்று அவர்கள் அறிந்துகொள்ள விரும்பியதில் ஆச்சரியமில்லை.

தோல்வி அடைந்தால், தாம் உடனடியாகவே வெற்றி பெற்றவரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிடுவேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆயர்களிடம் வாக்குறுதி அளித்திருக்கிறார். இதனை, கர்தினால் மல்கம் ரஞ்சித் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையிலேயே, கடந்த வாரம் பினான்சியல் ரைம்ஸ்  நாளிதழின் மும்பைச் செய்தியாளர், மின்னஞ்சல் மூலமாக எழுப்பிய கேள்விக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதே வாக்குறுதியை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், ஆயர்களுக்கு நேரடியாக வாக்குறுதி அளித்தமைபோன்று, பினான்சியல் ரைம்ஸ் நாளிதழிடம் வெளிப்படையாக அவர், அதிகார கைமாற்றம் தொடர்பில் குறிப்பிடவில்லை என்றே கூறலாம். 'நான் தோல்வி அடையமாட்டேன், தோல்வி அடைந்தால்,  அமைதியாக ஆட்சியை ஒப்படைத்துவிடுவேன்' என்று அவர் கூறியதாக பினான்சியல் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை ஒரு முதிர்ந்த, துடிப்பான ஜனநாயகத்தை கொண்ட நாடு என்றும் எப்போதுமே அதிகார கைமாற்றம் சுமுகமாகவே நடந்திருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். இலங்கையின் ஜனநாயக முதிர்ச்சிக்கும் இங்குள்ள இப்போதைய சூழலுக்குமிடையில் எந்தளவுக்கு வேறுபாடுகள் உள்ளதென்ற சந்தேகம் பலருக்கும் இருக்கச்செய்கிறது.

இதற்கு முன்னர் நிகழ்ந்த எந்தவொரு தேர்தலுடனும் இப்போதைய ஜனாதிபதித் தேர்தலை ஒப்பிடமுடியாது. அதாவது, இதற்கு முன்னதாக, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவிக்காக, மூன்றாவது முறை எந்தவொரு வேட்பாளரும் போட்டியிட்டதே இல்லை.

இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் சந்திரிகா குமாரதுங்கவும் தமது கட்சியின் வாரிசுகளுக்கு வழிவிட்டுக் கொடுத்துவிட்டு ஒதுங்கினர். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை பொறுத்தவரையில், தனது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்வதற்கு போதிய பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டிருந்தபோதும், அதனை செய்ய முயற்சிக்கவில்லை. சந்திரிகாவினால், தனது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்வதற்கு நாடாளுமன்ற பெரும்பான்மை இருக்கவில்லை.

ஆனால், முதன்முறையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மூன்றாவது முறை போட்டியிடுவதற்காக தடைகளை அகற்றுவதற்கு தேவையான நாடாளுமன்ற பெரும்பான்மையும் கிடைத்தது.  அதற்காக போட்டியிடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.
இலங்கையில் தொடர்ச்சியாக ஒரு தசாப்தகாலத்துக்கும் மேலாக அதிகாரத்தை தக்கவைப்பதற்கான எத்தனிப்பில் ஈடுபட்டுள்ள முதலாவது அரச தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே குறிப்பிடலாம். இதற்கு முன்னர், இத்தகைய வாய்ப்போ அல்லது சந்தர்ப்பமோ எந்தவொரு ஜனாதிபதிக்குமோ பிரதமருக்குமோ கிடைத்திருக்கவில்லை.

அதிகார எல்லை நீண்டு செல்லும்போது, அதனை தக்கவைப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுவது  வழக்கமும் வரலாறுமாகும். எனவே, வரையறை அற்ற பதவிக்காலத்துக்கு ஆட்சி புரியும் வாய்ப்பை பெற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தால், அதிகாரத்தை சுமுகமாக கைமாற்றுவதற்கு இணங்குவாரா என்ற சந்தேகம் எழுந்தது. அரசியல் ரீதியாக மட்டுமன்றி, பாதுகாப்பு ரீதியாகவும் இந்தச் சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.

போரை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்பு முற்றிலுமாக, அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவின் வெளியேற்றத்துக்கு பின்னர், மாற்றுக்கருத்துடைய அதிகாரிகள் களையெடுக்கப்பட்டு, முற்றிலும் அரச விசுவாசிகளான இராணுவ அதிகாரிகளால், இராணுவக் கட்டமைப்பு நிரப்பப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஷவும் படைகளை கட்டுப்படுத்தும் முழுமையான அதிகாரம் பெற்றவர்களாக விளங்குகின்றனர்.

போரில் வெற்றி பெறக் காரணமான அரசு என்ற நன்றிக்கடன், போர்க் குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாப்புத் தரும் அரசாங்கம் என்ற நம்பிக்கை உணர்வு, அரசாங்கத்தின் மீதுள்ள தீவிர விசுவாசம் எல்லாமே படையினரை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு வாய்ப்பாக அமைந்துள்ள விடயங்கள் எனலாம். அதைவிட, இதற்கு முன்னர் இருந்த எந்தவொரு அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்குமிடையில் இந்தளவுக்கு நெருக்கமான நிலை இருந்ததெனக் கூறவும் முடியாது. கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவம் மற்றும் அரசாங்கத்துக்கு சார்பாக மாற்றப்பட்டுவிட்ட படைக்கட்டமைப்பு எல்லாமே, இராணுவத் தளபதியே, வெளிப்படையாக படையினர் மத்தியில் ஜனாதிபதிக்காகவும் பாதுகாப்புச் செயலருக்காகவும் ஒவ்வொரு படைத்தளங்களாக சென்று பிரசாரம் செய்யும் அளவுக்கு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னெப்போதும் இருந்த அரசாங்கங்கள், படையினருக்கு இந்தளவுக்கு வசதிகளை செய்து கொடுத்திருக்கவில்லை என்று வெலிக்கந்தையில் தொடங்கி மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு என்று எல்லா பிரதான படைத்தளங்களிலும் அவர் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார். இவ்வாறானதொரு நிலையில், அதிகார கைமாற்றத்துக்கு இராணுவம் எந்தளவுக்கு ஒத்துழைக்குமென்ற சந்தேகம்; அதிகமாக இருந்துவருகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்தால்,  இராணுவம் தலையிட்டு, அரசியல் குழப்பத்தை விளைவிக்க முனையலாம் என்ற அச்சம், எதிரணியினர் மத்தியிலும் உருவாகியுள்ளது. அண்மையில், இது பற்றி எதிரணியினர், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இலங்கையை பொறுத்தவரையில் ஜனநாயக அமைப்பு வலுவானதாகவே இருந்தாலும், இப்போதைய அரசியல், இராணுவச் சூழல் என்பது அரசியலில் இராணுவத் தலையீடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை நிராகரிக்கமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவ ஆட்சி ஏற்படுவதையோ, இராணுவத் தலையீடு ஒன்று ஏற்பட்டால், அது நிலையானதாக நீடிப்பதையோ, பிராந்திய, சர்வதேச அதிகார சக்திகள் அனுமதிக்காது என்ற நம்பிக்கை உள்ளது.

என்றாலும், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால், சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு படையினர் கொண்டுசெல்லப்படும் நிலை உருவாகும். வடக்கிலிருந்து 50 சதவீத இராணுவம் குறைக்கப்படும். உயர் பாதுகாப்பு வலயங்கள் சுருக்கப்படும். பாதுகாப்புச் செலவினம் 40 சதவீதத்தினால் குறைக்கப்படும் என்பன போன்ற இராணுவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் நடந்தேறுமென்று அரச தரப்பு வலுவாக பிரசாரம் செய்துவருகிறது. இதுவொரு கட்டத்தில் அரசியலில் இராணுவம் தலையிடுவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் நிலவுகிறது.
அரசியலில் இராணுவத்தின் தலையீட்டுக்கான வாய்ப்பு முற்றிலும் இல்லையென்றோ, அதற்கான முயற்சிகள் முன்னெப்போதும் இடம்பெறவில்லையென்றோ மறுத்துரைக்கமுடியாது.

1962ஆம் ஆண்டு பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியை கவிழ்க்க இராணுவப்புரட்சி  மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது ஆரம்பக்கட்டத்திலேயே தோற்கடிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு தனது ஆட்சியை கவிழ்க்க புரட்சி மேற்கொள்ளப்படவுள்ளதாக அப்போதைய ஜனாதிபதி ஜேர்.ஆர்.ஜெயவர்த்தன, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் கூறி, இந்தியப்படைகளை இலங்கைக்கு வரவழைத்ததாக, இந்திய வெளிவிவகார அமைச்சராக இருந்த நட்வர்சிங் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கூட, அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி செய்ததாக சரத் பொன்சேகா மீது அரசாங்கம் குற்றஞ்சாட்டி அவரை சிறையில்; அடைத்திருந்தது. எனவே, இலங்கை அரசியலில் இராணுவத் தலையீட்டுக்கான முயற்சிகள் முன்னெப்போதும் நிகழந்திருக்கவில்லை என்று தெளிவாக மறுத்துரைக்க முடியாது.

முன்னெப்போதையும் விட, இப்போது அதற்கான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அதற்கு சாதகமாக உள்ளன.
போர் ஒன்று நடந்துகொண்டிருக்கும்போது, அரசியலில் தலையீடு செய்யும் ஆர்வம் இராணுவத்துக்கு பெரும்பாலும் ஏற்படாது.
போர் இல்லாத சூழலும் சர்வதேச அளவில் தமக்கு சாதகமற்ற நிலை ஏற்படுமோ என்ற அச்சமும் அளவுக்கு மிஞ்சியதாக பருத்துவிட்ட இராணுவ ஆளணிக் கட்டமைப்பும் இத்தகைய முயற்சிகளுக்கு சாதகமான விடயங்கள் என்பதை மறுக்கமுடியாது.

எவ்வாறாயினும், அரசியல் தூண்டுதல் ஏதுமில்லாமல், இராணுவத் தலையீடுகள் ஏற்பட வாய்ப்பில்லை.
தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், தோல்வியை சகித்துக்கொள்ளும் மனோநிலை  எல்லா அரசியல் கட்சிகளிடமும் இருந்தாலே, ஜனநாயம் வெற்றி பெறும். இல்லாவிட்டால், குழப்பங்கள் ஏற்படுவதுடன், ஜனநாயகத்தின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகிவிடும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X