Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 06 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாகிய கடந்த 2ஆம் திகதி, சர்வதேச உதவி மற்றும் ஆதரவுடன் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறது இலங்கை அரசாங்கம்.
இதற்கு முன்னதாக, கொழும்பிலும் இலண்டன், வொஷிங்டன், நியூயோர்க், ஜெனீவா ஆகிய நகரங்களிலும் புதிதாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், உள்நாட்டு விசாரணை குறித்த வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவை அனைத்தும் இருதரப்பு சந்திப்புகள், பேச்சுக்களின்போது மூடிய அறைக்குள் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள்.
கடந்த ஜனவரி மாத பிற்பகுதியில், கொழும்பு வந்த அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால், அவர் வந்திருந்த காலகட்டத்தில் கொழும்பு வந்திருந்த கொமன்வெல்த் செயலர் கமலேஷ் சர்மா, கடந்த மாத முற்பகுதியில் கொழும்பு வந்த பிரித்தானிய வெளிவிவகார பணியக இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த ஐ.நா. பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் ஆகியோரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் உள்நாட்டு விசாரணை குறித்த வாக்குறுதிகளை அளித்திருந்தனர்.
அதுமட்டுமன்றி, இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணங்களின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடமும் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் இதே வாக்குறுதியை அளித்திருந்தனர்.
ஜனாதிபதியின் விசேட தூதுவராக ஜெனீவாவுக்கு சென்றிருந்த அவரது வெளிவிவகார ஆலோசகர் ஜெயந்த தனபால, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனிடம் உள்நாட்டு விசாரணைகளின் மூலம் பொறுப்புக்கூறல் பிரச்சினையை தீர்ப்பதாக உறுதிமொழி அளித்திருந்தார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்கா சென்றிருந்தபோது, வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் போன்றோரிடமும் நியூயோர்க்கில் வைத்து ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன், ஐ.நா. வுக்கான அமெரிக்கத்தூதுவர் சமந்தா பவர் ஆகியோரிடமும் உள்நாட்டு பொறிமுறையின் மூலம் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த வாக்குறுதிகள் எவையுமே பொது அரங்கில் பகிரங்கமாக பொதுமக்கள் முன்னிலையில் அளிக்கப்பட்டவை அல்ல.
ஆனால், கடந்த திங்கட்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது அமர்வில் ஆற்றிய உரையில் அவர் கொடுத்த உள்நாட்டு விசாரணை பற்றிய வாக்குறுதி பகிரங்கமானது, வெளிப்படையானது.
இந்த வாக்குறுதியின் கனபரிமாணத்தை இலங்கை அரசாங்கமும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் எந்தளவுக்கு புரிந்துகொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், இந்த வாக்குறுதி, 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தவுடன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்ட கூட்டறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு சற்றும் சளைத்ததல்ல. அந்தக் கூட்டறிக்கையில் தெரிந்தோ, தெரியாமலோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டிருந்தார். அந்தக் கூட்டறிக்கை தமது அரசாங்கத்தை மிக மோசமான நெருக்கடிக்குள் தள்ளிவிடப்போகிறது என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. அவ்வாறு உணர்ந்திருந்தால், நிச்சயமாக அதில் கைச்சாத்திடுவதிலிருந்து எப்படியாவது நழுவிக்கொண்டிருந்திருப்பார்.
பொறுப்புக்கூறுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அந்தக் கூட்டறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதுவே, இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களுக்கு காரணமென்று இப்போதைய அரசாங்கம் கூறிவந்தது.
இப்போது அதே அரசாங்கம் தான், சர்வதேச ஆதரவு, ஆலோசனை, உதவியுடன் உள்நாட்டு விசாரணையை நம்பகமான முறையில் முன்னெடுக்கப்போவதாக உறுதியளித்திருக்கிறது.
முன்னைய அரசாங்கம், தாமே குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று ஒருபோதும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தெளிவான வாக்குறுதியை அளித்திருக்கவில்லை.
இராணுவ நீதிமன்றம் அமைத்து விசாரிக்கிறோம், காணாமற்போனோர் குறித்து ஆணைக்குழு அமைத்து விசாரிக்கிறோம் என்று மட்டுமே கூறிவந்தது.
போர்க்குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளவோ, அது குறித்து சர்வதேச ஒத்துழைப்புடன் உள்நாட்டிலேயே விசாரிக்கிறோம் என்றோ உறுதியளிக்கவில்லை. அத்தகைய நம்பகமான விசாரணையொன்றை முன்னைய அரசாங்கம் முன்னெடுக்க இணங்கியிருந்தால், நிச்சயமாக சர்வதேச சமூகம் அதற்கு எதிராக திரும்பியிருக்காது.
சர்வதேச சமூகம் கொடுத்த அழுத்தங்களே, இலங்கையின் இன்றைய மாற்றங்கள் எல்லாவற்றுக்கும் காரணம்.
ஜெனீவா கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்த அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி, இதனை தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நாடுகளை அழுத்தங்களின் மூலம் வழிக்கு கொண்டுவரமுடியும் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறிப்பாக, இலங்கையிலும் பர்மாவிலும் நிகழ்ந்த மாற்றங்களின் பின்னணியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பங்களிப்பை அவர் பெரிதும் புகழ்ந்துரைத்திருந்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஊடாக கொடுக்கப்பட்ட அழுத்தங்கள், இலங்கையின் இப்போதைய அரசாங்கத்தை நம்பகமான உள்நாட்டு விசாரணையை நோக்கி திருப்பியிருக்கிறது.
அதுமட்டுமன்றி, சர்வதேச அழுத்தங்களுக்கு பணியமாட்டேன் என்ற பிடிவாதமே மஹிந்த ராஜபக்ஷவையும் வீழ்ச்சி நிலைக்கு கொண்டுசென்றிருந்தது.
நம்பகமான உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்குமாறு 2012, 2013ஆம் ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களை நிறைவேற்றியபோது, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அதனை ஏற்றுக்கொண்டு செயற்பட்டிருந்தால், ஒருவேளை ஆட்சி மாற்றம் கூட சாத்தியமற்றதாகியிருந்திருக்கலாம்.
என்றாலும், ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டு விசாரணை பொறிமுறையொன்றுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிள்ளையார் சுழி போட்டிருந்தார். அதுவே, அவரதும் அவரது அரசாங்கத்தினதும் வீழ்ச்சிக்கும் காரணமாகியது.
அதற்கு பின்னர், இப்போதைய அரசாங்கம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வைத்து நம்பகமான உள்நாட்டு விசாரணையை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறது. இந்த வாக்குறுதியை எப்படியாவது நிறைவேற்றியே தீரவேண்டிய நிலை அரசாங்கத்துக்கு உள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போல, மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால் இனி மாறமுடியாது. அதற்கான சூழலும் இல்லை. அதுபோலவே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போல சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதியை மறந்தோ, மறுத்தோ செயற்படவும் முடியாது.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பலவீனத்தை பயன்படுத்தியே இப்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது மாத்திரமன்றி, அதை வைத்தே சர்வதேச சமூகத்தையும் தனது கைக்குள் போட்டு வைத்திருக்கிறது. எனவே, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்த தவறையே தானும் செய்வதற்கு ஒருபோதும் முயற்சிக்கமுடியாது. அவ்வாறானதொரு முயற்சி தம்மை எங்கு கொண்டுபோய் நிறுத்துமென்பதை தற்போதைய அரசாங்கமும் நன்கறியும். எனவே, ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை அளிக்கப்பட்ட வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் அவ்வளவு இலகுவாக எடுத்துக்கொள்ளமுடியாது.
இந்த உள்நாட்டு விசாரணை நம்பகமானதாக இருக்காது என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் ஏற்பட்டிருப்பது அரசாங்கத்துக்கு முக்கியமானதொரு சவால். இந்த அவநம்பிக்கை, சர்வதேச சமூகத்திடமிருந்து இலங்கைக்கான அழுத்தங்களை இன்னும் அதிகரிக்கச் செய்யக்கூடியது. அதாவது, இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள உள்நாட்டு விசாரணை, இன்னொருகால இழுத்தடிப்பாகவே அமையும் என்றும் இந்த விசாரணை நம்பகமாக, பக்கச்சார்பின்றி முன்னெடுக்கப்பட வாய்ப்பில்லை என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் காப்பாற்றப்படக்கூடும் என்றும் தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
இந்த அவநம்பிக்கையின் வெளிப்பாடாக, வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
காணாமற்போனோரின் உறவினர்கள் நடத்தும் பேரணிகள் மட்டும் அரசாங்கத்துக்கு சவால் இல்லை. காணாமற்போனோர் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகளை புறக்கணிக்கப்போவதாகவும் முறைப்பாட்டாளர்களான உறவினர்களும் தமிழ் சிவில் சமூக அமையமும் முடிவெடுத்துள்ளன.
இது உள்நாட்டு விசாரணை விடயத்திலும் தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. உள்நாட்டு போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், அது முறையாகவும் பக்கச்சார்பின்றியும் மேற்கொள்ளப்படுவதற்கு தமிழ் மக்களின் பங்களிப்பு அவசியம்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சாட்சியங்களை அளித்தாலே, உள்நாட்டு விசாரணைக்குழுவினால் முன்நோக்கி நகரமுடியும்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின்போது, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அந்தத் தெரிவுக்குழுவில் தனது பெரும்பான்மை பலத்தை வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மடக்கப்பார்த்தார் மஹிந்த ராஜபக்ஷ. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பொறிக்குள் விழவில்லை.
கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு தமது பிரதிநிதிகளை நியமிக்க மறுத்ததால், கடைசிவரை அதனை வைத்து மஹிந்த ராஜபக்ஷவினால் எதுவுமே செய்யமுடியாமல் போனது.
தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க, தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்பு எவ்வளவு அவசியமாக இருந்ததோ, அதுபோலவே உள்நாட்டு போர்க்குற்ற விசாரணைக்கும் தமிழ் மக்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அவசியம்.
போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே என்ற வகையில் அவர்களின் பங்களிப்பு, சாட்சியங்கள், ஒத்துழைப்பு இல்லாமல் உள்நாட்டு விசாரணையை புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கமுடியாது.
புதிய அரசாங்கம், உள்நாட்டு விசாரணை விடயத்தில் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதில் வெற்றி கண்டிருந்தாலும், உள்நாட்டு விசாரணையின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளாவிடின், எந்தப் பயனும் அற்றதாகவே முடியும். அவ்வாறு தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறத் தவறினால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வைத்து அளித்த வாக்குறுதியை நிறைவேற்றமுடியாத நிலை இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்படும்.
காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாபதிபதி ஆணைக்குழுவை புறக்கணிக்கும் முடிவை எடுத்தது போன்று, உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை விடயத்திலும் முடிவுகளை எடுக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டிய பெரும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது. அதற்கு உள்நாட்டு விசாரணை நம்பகமாக, பாரபட்சமின்றி, வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்படவேண்டும்.
சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம், என்றோ ஒரு நாள் போர்க்குற்றவாளிகள் தண்டனை பெறுவார்கள் என்று தமிழ் மக்கள் நம்பியிருந்தனர். கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அந்த நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. என்றாலும், அத்தகைய சர்வதேச போர்க்குற்ற விசாரணையிலுள்ள சிக்கல்களை பலரும் அறியாமலே இருந்தனர். இன்னமும் இருக்கின்றனர்.
இப்போது சர்வதேச விசாரணைக்கான சூழல் மாற்றமடைந்து உள்நாட்டு விசாரணை என்ற நிலை உருவாகியிருப்பது தமிழ் மக்களால் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது. ஆனால், உள்நாட்டு விசாரணை நம்பகமாக முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டனைக்குட்படுத்தப்படுவர் என்ற உத்தரவாதம், தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படவேண்டும். அதனை அவர்கள் நம்பும் அளவுக்கு நல்லெண்ணத்தை காட்டவேண்டியது அரசாங்கத்தினது பொறுப்பு.
உள்நாட்டு விசாரணைகளின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்பதை கருத்திற்கொண்டு அரசாங்கம் சர்வதேச ஒத்துழைப்பு, ஆலோசனை, உதவிகளுடன், விசாரணையை நடத்தப்போவதாக கூறியிருக்கிறது. ஆனால், அதனை செயலில் காட்டவேண்டும். அடுத்து, ஐ.நா. விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை உள்நாட்டு விசாரணைகளுக்கான அடிப்படையாக பயன்படுத்தவுள்ளதாக இன்னொரு வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. இவை மட்டும் தமிழ் மக்களை திருப்திப்படுத்தாது.
ஐ.நா. விசாரணை அறிக்கையை எவ்வாறு பிற்போடச் செய்ததோ, அதுபோலவே அதனை விரைவாக வெளியிடுவதையும் உத்தரவாதப்படுத்தவேண்டும். ஏனென்றால், அந்த அறிக்கையின் பரிந்துரைகளையும் உள்நாட்டு விசாரணையில் கவனத்திற்கொள்ளப்படும் என்று கூறியிருப்பதால், முதலில் அந்த அறிக்கை வெளியாகவேண்டும்.
இவையெல்லாம், தமிழ் மக்களுக்கு உள்நாட்டு விசாரணை பற்றிய முழு நம்பிக்கையை ஏற்படுத்தாதுபோனாலும், கொஞ்சமாவது நம்பிக்கை ஏற்படும். இதையெல்லாம் செய்யாமல் வெறுமனே உள்நாட்டு விசாரணை என்று அரசாங்கம் கிளம்பினால், மஹிந்த ராஜபக்ஷ அளித்த வாக்குறுதிக்கு என்ன நடந்ததோ, அதுவே மங்கள சமரவீரவின் வாக்குறுதிக்கும் நிகழும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
4 minute ago
13 minute ago