Editorial / 2021 ஜனவரி 07 , மு.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரமணியம் கவிதா
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் உட்பட, இலங்கை அரசாங்கத்தின் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான அர்ப்பணிப்புகள் அனைத்தும், இலங்கையின் சொந்த நலனுக்காகவே எனத் தெரிவித்த, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், 13 விடயங்கள் தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
இலங்கை வெளிவுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் ஒன்றிணைந்து நேற்று (06) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 'ஒன்றுபட்ட இலங்கைக்குள், சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுவது, இலங்கையின் சொந்த நலனிலேயே உள்ளது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் உள்ளிட்ட அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பாக, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த கடமைகளுக்கே இது சமமாகப் பொருந்தும்' என்று இதன்போது அவர் தெரிவித்தார்.
இதன் விளைவாக, இலங்கையில் நல்ல முன்னேற்றமும் செழிப்பும் ஏற்படும் என்றும் இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு, இந்தியா உறுதியான கடமைகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, மேலும் கருத்துத் தெரிவித்த அவர், எமது இரண்டு நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றால், கடுமையான மற்றும் பொதுவான சவால்களை எதிர்கொண்டுள்ள நேரத்தில், நான் இலங்கைக்கு வந்துள்ளேன். அதேநேரத்தில், எங்களது இரண்டு நாடுகளும் மேலும் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு, கொரோனா வைரஸ் ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது என்றே நான் நினைக்கின்றேன். அயலவர்கள் என்ற கொள்கையைப் பிரதிபலிக்கும் வகையில், சரியான நேரத்தில், மருத்துவ உதவி மூலம் கொரோனா வைரஸைச் சமாளிக்கும் இலங்கையின் முயற்சிகளை, இந்தியா ஆதரித்துள்ளது. அத்துடன், இலங்கையில் சிக்கித்தவித்த இந்தியப் பிரஜைகளை, இங்கிருந்து வெளியேற்றுவதில்,இலங்கை அரசாங்கத்தின் உதவி, வசதிகளைப் பாராட்டிப் பதிவு செய்கிறேன்.
'எங்கள் இருதரப்பு ஒத்துழைப்பை, கொரோனா வைரஸால் சிதைத்து விடமுடியவில்லை என்பதையும் கவனத்தில் கொள்கிறேன். கடந்த ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற மெய்நிகர் இருதரப்பு உச்சிமாநாடு, ஓர் உயர்ந்த அடையாளமாக இருந்தது. இன்று காலை, இலங்கை ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை விரிவாக மதிப்பாய்வு செய்தோம்.
'இப்போது, இரண்டு நாடுகளும் கொரோனா வைரஸின் தாக்கத்தை அனுபவித்து, அதிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இது ஒரு பொது சுகாதாரப் பிரச்சினை மாத்திரமல்லாது, பொருளாதார நெருக்கடியும்கூட. இந்தியாவைப் பொறுத்தவரை, கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டன என்பதையும் விரைவில் தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பு இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். இந்தியாவின் பொருளாதாரம், கடந்த சில மாதங்களில் மீட்கப்படுவதற்கான வலுவான அறிகுறிகளைக் காட்டியுள்ளது. அடுத்த காலாண்டில், இது முழுமையடையும் என்று நம்புகின்றோம். இந்த முன்னேற்றங்கள், இலங்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதேநேரம், நிதி, வர்த்தகம் ஆகியவற்றில் குறிப்பிட்ட சில சவால்கள் உள்ளன. எனது வருகை, அந்தச் செயன்முறையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
'உட்கட்டமைப்பு, எரிசக்தி, இணைப்பு போன்ற பல திட்டங்கள் கலந்துரையாடல்களில் இடம்பெற்றன. இதன் ஆரம்பக்கட்ட நடைமுறைகள், பரஸ்பர ஆர்வத்தில் உள்ளன. நிச்சயமாக, இலங்கையின் பொருளாதார மீட்சியை இத்திட்டங்கள் துரிதப்படுத்தும். இலங்கையில் முதலீடு செய்வதில், இந்திய வணிகம் கடுமையான அக்கறை கொண்டுள்ளது.
'பிராந்தியத்தில், அமைதி, நல்வாழ்வை நாங்கள் ஊக்குவிப்பதால், இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு. இந்தியா உறுதி வழங்குகின்றது. இலங்கையின் நல்லிணக்க செயல்முறைக்கு, எங்கள் ஆதரவு நீண்டகாலமாக உள்ளது. இந்தியப் பெருங்கடலிலுள்ள நாடுகளான இந்தியாவும் இலங்கையும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில், ஆர்வத்தைக் காட்டி வருகின்றன. வளர்ந்து வரும் கடல் மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள, இலங்கையின் திறன்களை மேம்படுத்த நாங்கள் தயாராக இருக்கின்றோம்' என்றும் இதன்போது அவர் உரையாற்றி இருந்தார்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026