2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

“அனுராதபுரம் பிரபஞ்சத்தின் சொத்து”

S.Renuka   / 2025 ஏப்ரல் 03 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் வரலாற்று சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது. அனுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்து என  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஏப்ரல் முதலாம் திகதி 'இலங்கையின் உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான ஒன்றிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச நிபுணர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் இணைந்து யுனெஸ்கோ ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்தும்வாய்ந்த UNESCO உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரத்தை பாதுகாப்பதற்கான நிரந்தர உபாய மார்க்கங்களை கலந்துரையாடும் வகையில் சர்வதேச நிபுணர்களின் பங்கேற்புடன் இந்த மாநாடு இடம்பெற்றது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி,

யுனெஸ்கோ மற்றும் இலங்கைக்கிடையிலான தொடர்புகள் 75 வருடங்களை அண்மிக்கும் தருணத்தில் யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே அவர்கள் கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் பிரதிபலனாக அனுராதபுரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த மாநாடு இடம்பெறுகிறது.

யுனெஸ்கோ மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், கலாசாரங்களுக்கிடையிலான உரையாடல், மரபுரிமைகளை பாதுகாத்தல், கல்வி, நிலைபேறான அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் இந்த மாநாடு கைகொடுக்கும்.

எதிர்கால சந்ததியினருக்கென கலாசார பாரம்பரியத்தை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை பலப்படுத்துவதற்கு உலகளாவிய தலைவராக யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு முன்னரை விடவும் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் காலப்பகுதியில் நாம் உள்ளோம்.

கலாசாரத்திற்கென முன்னர் இல்லாத மகத்தான வரவேற்பைப் பெறுதல், உலக அமைதி, அபிவிருத்திக்கான அறிவுத்திறன் மற்றும் புத்தாக்கங்களை பயன்படுத்தல், AI தொழில்நுட்பத்தை உயர் நெறிமுறைகளுடன் கையாளுதல், நிலைபேறான கல்வி, சமுத்திர உயிரியல் பல்வகைத்தன்மை மற்றும் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் திறனை மேம்படுவதற்காக யுனெஸ்கோ எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதுடன் காலத்திற்கு ஏற்றவை.

கலாசார முக்கோணம் நிறுவப்பட்டுள்ள அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை இராச்சியங்களில் காணப்பட்ட மிகவும் முன்னேற்றகரமான நாகரிகம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதற்கு 1980களிலிருந்து யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

எமது அரசு இனவாதத்தை புறக்கணிக்கிறது. அனைவருக்கும் சமமான உரிமைகளுடன் அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது.

குரோத அரசியல் இலாபங்களுக்கு எதிராகவும், மக்கள் பிளவுபடுவதை விரும்பாதவர்களுமே இந்த தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளனர்.

எதிர்காலத்தில் இலங்கையின் அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய 3 நகரங்களையும் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தினால் உருவாகியுள்ள பேரழிவுகள் தொடர்பில் அந்த நாடுகளின் அரசுகள் மற்றும் மக்களுக்கு இலங்கை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.

யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே, இலங்கையின் புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் செனவி உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் மற்றும் சர்வதேச நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

பிரதமர் ஊடக பிரிவு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .