2021 மே 13, வியாழக்கிழமை

’அரசாங்கத்தின் முதுகிலும் தலைவர்களின் தலையிலும் சுமத்துவதற்குப் பிரயத்தனம்’

Editorial   / 2021 மார்ச் 09 , மு.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தமது அரசாங்கத்துக்கு  உள்ள பொறுப்பிலிருந்து விலகமுடியாதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமை, அவருக்கு முதுகெலும்பு உள்ளதென்பதை நிரூபித்துவிட்டார். அதற்காக மகிழ்ச்சி அடைகின்றேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

எனினும், அவரது தலைமையின் கீழிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருக்கும் ஐ.தே.கவின் முன்னாள் உறுப்பினர்கள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குற்றச்சாட்டை, எமது அரசாங்கத்தின் முதுகிலும் அதன் தலைவர்களின் தலையிலும் சுமத்துவதற்கு முயற்சிக்கின்றனர். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், அவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினருக்கு எதிராக, எமது கட்சியின் உறுப்பினர்கள் சிலர் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், இத்தாக்குதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்றது. ஆனால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  2018ஆம் ஆண்டு பெப்ரவரியில் உள்ளூராட்சித் தேர்தலில் தனது வெற்றியை நிலைநாட்டியது என்றார்.

300க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளில் 239 சபைகளைக் கைப்பற்றி, பிரதான கட்சிகளுக்கு எதிராகத் தனியாக எழுந்து நின்று, இலங்கையில் அடுத்த அரசாங்கத்தை அமைக்க போவது நாமென்றும், அடுத்த ஜனாதிபதியை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே தீர்மானிக்கும் என்ற சக்தியை மக்கள் வழங்கினர். அக்காலப் பகுதியில்தான், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெற்றது என்றார்.
 
தாக்குதல் நடத்தப்படுமென, சர்வதேசங்களினதும் இலங்கையினதும் புலனாய்வாளர்களால் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  எனினும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் பின்வாங்கிய, அல்லது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்கத் தவறிய,  எடுக்கத் தெரியாத அப்போதைய அரசாங்கமே இதற்குப் பொறுப்பு கூற வேண்டுமே தவிர, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவோ அதன் தலைவர்களோ இதற்குப் பொறுப்புக் கூறவேண்டுமென்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .