2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

அரசமைப்புச் சபை இரண்டு நிமிடங்களில் மௌனித்தது

Nirshan Ramanujam   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்புக்கான அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம், அரசமைப்புச் சபையில் இரண்டு நிமிடங்களில் நிறைவடைந்தது.   
இந்த விவாதம் அரசியலமைப்பு சபையின் தலைவர் கருஜயசூரியவின் தலைமையில் இன்று ​(11) கூடியது.

அந்த விவாதத்தில் உரையாற்றுவதற்கு, ஆளும் எதிர்த்தரப்பினைச் சேர்ந்த பத்து உறுப்பினர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டபோதும் உரையாற்றுவதற்காக அவர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.  

புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீது ஏற்கெனவே ஒக்டோபர் மாதம் 30, 31ஆம் திகதிகளிலும், நவம்பர் முற்பகுதியில் இரண்டு நாட்களும் விவாதங்கள் நடைபெற்றன.  

இந்நிலையில் அரசமைப்புச் சபையின் அனைத்து உறுப்பினர்களும் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன உள்ளட்ட பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் ஏகோபித்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 
 
இதற்கமைவாக நேற்று அரசமைப்புச் சபையானது, அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்காக உறுப்பினர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டன.  

எஸ்.எம்.சந்திரசேன, அசோக பிரியந்த, மகேந்த திஸாநாயக்க, ரவீந்திர சமரவீர, அனோமா கமகே, அமீர் அலி, சத்துர சேனாரத்ன, ஹிருணிக்கா பிரேமச்சந்திர, லக்கி ஜயவர்தன, வஜிர அபேவர்தன, ஆகியோரின் பெயர்கள் சபையின் தலைவரால் கூறப்பட்டபோது அவர்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை.   

இதனையடுத்து சபை ஒத்திவைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டு சபையானது முற்பகல் 11.32இற்கு நிறைவுக்கு வந்தது. அத்துடன் 2018ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .