Kogilavani / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
இலங்கையின் புதிய அரசியல் யாப்புக்கான முன்மொழிவுகளை, மலையக மக்கள் முன்னணி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து, இன்று (21) மாலை அரசியல் நிபுணர் குழுவிடம் கையளித்துள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான சங்கரன் விஜயசந்திரன், முன்னணியின் பிரதித் தலைவர் ஏ.லோரன்ஸ், மலையகத் தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா, உப தலைவர் சிவலிங்கம் சதீஸ்குமார், மலையக மகளிர் முன்னணியின் பிரதித் தலைவி திருமதி சுவர்ணலதா இளங்கேஸ்வரன், பிரதிச் செயலாளர் திருமதி கிருஸ்ணவேனி விஜயகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த முன்மொழிவுகளில் பின்வரும் முக்கிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் பிரதான நான்கு தேசிய இனங்களாக சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் அங்கிகரிக்கப்படுவதோடு பரங்கியர், ஆதிவாசிகள், மலாயர் ஏனைய சிறு சமூகங்களும் இலங்கையின் மக்கள் என குறிப்பிடப்பட வேண்டும்.
'கல்வி, தொழில்வாய்ப்பு, சுகாதாரம், வாழ்வாதாரம் உயிர்வாழ்வதற்கான உத்தரவாதம் என்பன அடிப்படை உரிமைகளாக அங்கிகரிக்கப்பட வேண்டும்.
'இனங்களினது குறிப்பாக சிறுபான்மை இனங்களினது அடையாளங்களை பாதுகாத்தல், அவர்களுடைய கலாசார சமய மரபுகளைப் பாதுகாத்தல், அவர்களுடைய வரலாற்றுச் சான்றுகளை பாதுகாத்தல், அவர்களுடைய இன அடையாளங்களுக்குறிய மற்றும் தொல்பொருள் சான்றுகளை பாதுகாத்தல் என்பன குழு உரிமைகளாக அங்கிகரிக்கப்பட வேண்டும்.
'நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடரப்பட வேண்டும்.
அதேநேரம் இலங்கையில் சிறுபான்மை இனத்தைச் சார்ந்த ஒருவர் ஒருநாளும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட முடியாது. எனவே இலங்கையின் சிறுபான்மை இனங்களான வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்களுக்கு அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மூவினங்களுக்கான உப ஜனாதிபதிகள் மூவர் பாராளுமன்றத்தில் சிறுபான்மையினர் மத்தியிலிருந்து தெரிவுசெய்யப்பட வேண்டும்.
'இரண்டாவது மக்கள் பிரதிநிதித்துவ முறையாக செனட்சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு உப ஜனாதிபதி செனட்சபையை தலைமை தாங்கும் பொறுப்பும், சில அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்.
'பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படும் தேசிய பட்டியல் உறுப்பினர்களில் 25 சதவீதத்தினராவது மூன்று சிறுபான்மை இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாக இருக்க வேண்டும்.
'தற்போதைய தேர்தல் முறைமை பற்றிய குறைபாடுகளும்; இது சிறுபான்மை மக்களை பாதுகாக்க முடியாத நிலைபற்றியும் பலரும் சுட்டிகாட்டி இருப்பதால், சிறுபான்மை இனங்களின் விகிதாசாரத்துக்கு ஏற்பவும் அவர்கள் பிராந்திய அடிப்படையில் செறிவாகவும், சில பகுதிகளில் பரவளாகவும் வாழ்வதைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு தேரிய ரீதியானதும் பிராந்திய அடிப்படையிலும், பாராளுமன்ற, மாகாண உள்ளுராட்சி அடிப்படையிலான அரசியல் பிரதிநிதித்துவத்தை அரசியல் யாப்பில் உறுதிப்படுத்த வேண்டும்.
'சிங்களமும் தமிழும் தேசிய உத்தியோகபூர்வ நிர்வாக மற்றும் நீதித்துறை மொழிகளாக இருக்க வேண்டும். விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் மொழிகளும் இதற்குள் உள்வாங்கப்பட வேண்டும்.
'இலங்கையில் முழுiமாயன ஓர் அதிகார பகிர்வு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இச் செயல்முறைக்கு முஸ்லிம்கள், மலையக தமிழர்களுக்கான விசேட தன்னாதிக்க அலகுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
'அத்தோடு இத்தன்னாதிக்க அலகுக்கு வெளியில் வாழுகின்ற மலையக முஸ்லிம் மக்களுடைய கலாசாரம், அபிவிருத்தி, பொருளாதார மேம்பாடு போன்றவற்றை உறுதிப்படுத்தக் கூடிய நிர்வகிக்கக்கூடிய நிலத் தொடர்பற்ற அபிவிருத்தி சபைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
'மலையகத் தமிழர்கள் வாழ்கின்ற பெருந்தோட்ட பிரதேசங்கள், பொதுநிர்வாகக் கட்டமைப்புக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டு அக்குடியிருப்புகள் கிராமங்களாக அங்கிகரிக்கப்பட்டு நாட்டின் கிராமிய முறைமைக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.
'இலங்கை அரசியலில், மலையக தமிழர்கள் 50 வருடங்களுக்கு மேலாக புறக்கணிக்கப்பட்டிருந்தமை கவனத்திற்கொண்டு அவர்களை தேசிய அபிவிருத்தி நீரோட்டத்தில் ஒன்றிணைக்கும் வகையில் விசேட ஏற்பாடுகள் புதிய அரசியல் சீர்திருத்தத்தில் கொண்டுவரப்பட வேண்டும்.
'பெருந்தோட்ட மக்களுக்கு பாதிப்பாகவுள்ள சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் உட்பட இன்னும் பல யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 minute ago
12 minute ago
19 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
19 minute ago
23 minute ago