Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 18 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச நிறுவனங்களில், 2015ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து 2018 டிசெம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடி, குற்றவியல் ரீதியான மீறுகை உள்ளிட்ட அரச வருமானத்துக்குப் பாரதூரமான நட்டங்களை ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவை தவிசாளராகக் கொண்டு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினீ குசலா வீரவர்தன, ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் அதிபதி ஆரச்சிகே பேமதிலக, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் ஆர்.டி.சில்வா மற்றும் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜய அமரசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த ஆணைக்குழு, விசாரணை ஆரம்பிக்கப்பட்ட முதல் மூன்றுமாத காலத்துக்குள் முதலாவது இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டும் என்பதுடன், மாதத்துக்கு ஒருமுறை இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமென்றும், ஆறுமாத காலத்துக்குள் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவால் கையொப்பமிடப்பட்ட மேற்படி ஆணைக்குழுவை நியமிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், கடந்த 14ஆம் திகதியன்று வெளியிடப்பட்டது.
இந்த ஆணைக்குழுவானது, ஏழு விடயங்கள் தொடர்பில், அதிகூடிய கவனத்தைச் செலுத்தவேண்டுமென கோரப்பட்டுள்ளதுடன், விசாரணையை அல்லது அதன் ஒரு பகுதியைப் பகிரங்கமாக நடத்தக் கூடாதென்று கோரப்பட்டுள்ள அதேவேளை, புலனாய்வுகளுக்காக, சகல அரச உத்தியோகத்தர்களும், நியதிச்சட்ட சபைகளின் உத்தியோகத்தர்களும், வேறு நபர்களும் உதவிகளை வழங்கவேண்டுமெனப் பணிக்கப்பட்டுள்ளது.
1. மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில், அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதெனக் கூறப்படும் ஊழல் செயற்பாடுகள், மோசடிகள், குற்றவியல் ரீதியான நம்பிக்கை மீறுதல், சொத்துகள் மீதான குற்றவியல் ரீதியிலான மீறுகை, ஏமாற்றுதல், அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்களையும், சிறப்புரிமைகளையும் துஷ்பிரயோகம் செய்தல், அவற்றின் ஊடாக அரச சொத்துகள் மற்றும் அரச வருமானத்துக்கு பாரதூரமான நட்டங்கள் மற்றும் சோதங்களை ஏற்படுத்தியிருத்தல்.
2. மேலே குறிப்பிட்டுள்ளவை தொடர்பில் பக்கச்சார்பற்ற விரிவான விசாரணைகளை நடத்துதல்.
3. பொறுப்பாகவிருந்த அல்லது பொறுப்பாகவுள்ள ஆட்களைக் கண்டறிதல்.
4. பொறுப்புக்கூறவேண்டிய நபர்களுக்கு எதிராகப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாட்சிகளை அடையாளமறிதல்.
5. மேலே கூறப்பட்ட குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிராக, முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகளை வகைப்படுத்தல்.
6. குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு எதிரான வழக்குத் தாக்கல் செய்வதற்காக, அவற்றுக்குரிய ஆவணங்களை சட்டமா அதிபருக்குச் சமர்ப்பித்தல்.
7. குற்றங்களைப் புரிந்த நபர்களுக்கு எதிராக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் அவ்வாறான குற்றங்கள் மற்றும் குற்றச்செயல்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதைத் தவிர்த்துக் கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல்.
ஆகிய ஏழு விடயங்களின் அடிப்படையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாகக் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவை தவிசாளராகக் கொண்ட, இதே உறுப்பினர்கள் அடங்கிய, ஜனாதிபதி ஆணைக்குழு, 2010 ஜனவரி 10ஆம் திகதியிலிருந்து 2015ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பிலான விசாரணையின் இறுதி அறிக்கையை, 2018 ஜனவரி 2ஆம் திகதியன்று ஜனாதிபதியிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
40 minute ago