2026 மே 06, புதன்கிழமை

‘அரிசி இறக்குமதிக்கு கோட்டா அனுமதியார்’

Kogilavani   / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

அரிசி மாபியாக்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், கடந்த நல்லாட்சி அரசாங்கம் செய்ததுபோல, சர்வதேசச் சந்தைகளில் இருந்து குறைந்த விலைக்கு அரசியைக் கொள்வனவு செய்து (இறக்குமதி), நாட்டின் சந்தைகளுக்கு அவற்றைப் பகிர்ந்தளிக்க வேண்டுமெனத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, எனினும் ஜனாதிபதி இதற்கு இடமளிப்பதில்லை எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு அரிசி உற்பத்தியை ஊக்குவிக்கவே ஜனாதிபதி விரும்புவதாகத் தெரிவித்த வர்த்தக அமைச்சர், ஜனாதிபதி இந்தக் கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டாரெனவும் தெரிவித்தார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தைப் போல, அரிசி இறக்குமதி செய்யப்பட்டால், எந்தவோர் அரிசி மாஃபியாக்களையும் கட்டுப்படுத்த முடியுமென்றும் கூறினார்.

சபாநாயகர் தலைமையிலான நேற்றைய (20) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு, எதிர்க்கட்சி எம்.பி ஹேஷா விதானகே எழுப்பிய வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அமைச்சர், அரிசி இறக்குமதிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இடமளிப்பதில்லை எனவும் இறக்குமதிக்கு இடமளித்தால் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் தெரிவித்ததோடு, இதனால்தான், நாட்டரிசி, சம்பா, பச்சையரிசி ஆகியவற்றின் விலைகளை, புதுவருடக் காலத்தில் கட்டுப்படுத்த முடிந்ததென்றார்.

கீரி சம்பா உள்ளிட்ட ஏனைய சம்பா அரிசிகளின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாது போனதாகவும் எனினும், எதிர்காலத்தில் இதன் விலைகளையும் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

“2015இல் 275,357 மெட்ரிக் தொன், 2016இல் 28,293 மெட்ரிக் தொன், 2017இல் 669,322 மெட்ரிக் தொன், 2018இல் 2,433 மெட்ரிக் தொன், 2019இல் 23,934 மெட்ரிக் தொன் அரிசி, இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்காக, 2015 - ரூ. 17,496 மில்லியன், 2016இல் 1,825 மில்லியன், 201இல் 41,743 மில்லியன், 2018இல் 14,115 மில்லியன், 2019இல் 2,276 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன.

“மேலும், ஒரு கிலோகிராம் அரிசிக்காக, 2015இல் 0.35 சதமும், 2016இல் 5.42 சதமும், 2017இல் 0.36 சதமும், 2018இல் 0.43 சதமும், 2019இல் 6.74 சதமும் வரியாக அறிவிடப்பட்டுள்ளது.

“இதேவேளை, 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் நாட்டரிசியின் விலை முறையே 81.81, 79.94, 94.37, 95.08, 94.07 ரூபாயாகக் காணப்பட்டதாகவும் சம்பா அரசியின் விலைகள் முறையே 91.20, 92.75, 98.79, 109.33, 102.16 ரூபாயாகக் காணப்பட்டுள்ளது.

சிவப்பு மற்றும் வௌ்ளைப் பச்சையரிசிகளின் விலைகள், கடந்த ஐந்து வருடங்களில் முறையே 69 ரூபாய்க்கும் 89 ரூபாய்க்கும் இடைப்பட்டதாகவே காணப்பட்டுள்ளன” என்றும், அமைச்சர் குணவர்தன மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .