2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இணைந்த எதிரணி விவகாரம் சபையில் நேற்றும் சூடுபிடிப்பு

Gavitha   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணைந்த எதிர்க்கட்சிக்கு உரிய வரப்பிரசாதங்களை நாடாளுமன்றுக்குள் வழங்குமாறு, ஏற்கெனவே முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு உரிய பதிலளிக்குமாறு? இணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள், அவையில் நேற்றும் கோரி நின்றனர். இதனால், ஆளும் தரப்புக்கும் இணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. ஆளும் தரப்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவும் கருத்துரைத்தனர்.

இணைந்த எதிரணியில், நாடாளுமன்ற உறுப்பினர்களான, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, விமல் வீரவன்ச மற்றும் சந்திரசிறி கஜதீர கருத்துரைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கேள்வியெழுப்பியவுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய, பதிலளித்ததன் பின்னரே, வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

பொதுப்பிரச்சினை குறித்து கேள்வியெழுப்புவதற்கு இணைந்த எதிரணிக்கு சந்தர்ப்பம் தரவேண்டும் என்று தினேஷ் குணவர்தன எம்.பியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டாலும் தனது கட்சி உள்ளிட்ட கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள், அவையில் சுயாதீனமாகவே செயற்படுகின்றது என்று விமல் வீரவன்ச எம்.பியும் தெரிவித்தனர்.

இதன்போது எழுந்த, பந்துல குணவர்ன எம்.பி,  51 உறுப்பினர்கள் கொண்ட பொது எதிரணிக்கு, விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுவதற்கு சந்தப்பமளிக்கவேண்டும் என்று கோரிநின்றதுடன், மக்களின் பிரதிநிதிகளான எங்களுக்கு மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் அவையில் குரல்கொடுப்பதற்கு சந்தர்ப்பமளிக்கவேண்டும் என்று சந்திரசிறி கஜதீர எம்.பியும் கோரிநின்றனர்.

குறுக்கிட்ட, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவிருக்கின்றது. அதன்பின்னர், இந்தவிவகாரத்துக்கு தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையே எழுந்த அவைமுதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, விசேட கூற்றொன்றை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் அல்லது எதிரணியில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே உரையாற்றமுடியும்.

இவ்வாறான நிலையில், இணைந்த எதிர்க்கட்சியின் தலைவர் யார்? இங்கு பலரும் கூச்சலிடுகின்றீர்கள், தலைவர் யார்?, யார் தலைவர் என்று கேள்விகளைக்கேட்டார். அக்கேள்விக்கு இணைந்த எதிரணியினர் என்று கூறிக்கொள்ளும் எவருமே பதிலளிக்கவில்லை. இதனால், சபையில் சிரிப்பொலியும் அதன் பின்னர் சிறு சலசலப்பும் ஏற்பட்டது.

இதேவேளை, இந்த விவகாரத்துக்கு முன்னதாகவே பதிலளித்த, சபாநாயகர் கரு ஜயசூரிய, இணைந்த எதிரணிக்கு கூடுதல் நேரம் ஒத்துக்கிக்கொடுக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக்குழுக்களில் தங்களுடைய பிரதிநிதிகளையும் இணைந்துகொள்வதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கான பெயர் விவரங்களை கோரியுள்ளோம்.

அத்துடன், சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுவதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது என்றார்.

எனினும், அரசியலமைப்பு, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் சர்வதேச நடைமுறைகளின் அடிப்படையில், நாடாளுமன்றில் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றுவதற்கு, எதிர்க்கட்சி தலைவருக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டுமே இடமளிக்கமுடியும், இந்நிலையில், ஒரு கட்சிக்குள் இன்னொரு கட்சி இருக்கின்றதா என்று வினவியதுடன் அதற்கு அனுமளியப்பதற்கு எனக்கு உரிமையில்லை என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X