2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

“இதற்குத்தான் மருமகளின் கழுத்தை அறுத்து கொன்றேன்”

S.Renuka   / 2026 ஜனவரி 05 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மருமகளை கழுத்தை அறுத்து கொன்றமை குறித்து பொலிஸாரால் கைதான மாமியார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ள சம்பவம் ஒன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. தொழிலாளியான இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த நந்தினி (வயது 29) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா தற்கொலை செய்து கொண்டார்.

தனிமையில் வசித்து வந்த நந்தினி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விரியூரை சேர்ந்த சாலமோன் மகன் பிசியோதெரபிஸ்ட்டான மரிய ரொசாரியோ(36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது மரிய ரொசாரியோவின் தாய் கிறிஸ்தோப்மேரிக்கு(55) பிடிக்காததால் அடிக்கடி மாமியார்-மருமகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 29ஆம் திகதி கிறிஸ்தோப்மேரி, குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுவதை தடுக்க கோவிலில் மாந்திரீகம் செய்வதாக கூறி நந்தினியை அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தார். இது குறித்து சங்கராபுரம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கிறிஸ்தோப்மேரி மற்றும் அவரது தோழி எமிலி(52) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பாக கிறிஸ்தோப்மேரி பொலிஸில் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நானும், எனது மகனும் ஊரில் நல்ல வசதியுடனும், மரியாதையுடனும் வாழ்ந்து வந்தோம். ஆனால், எனது மகனை 2ஆவதாக திருமணம் செய்து எங்கள் குடும்பத்தை சீர்குலைத்த நந்தினியை கொலை செய்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். பின்னர், எனது மகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று எண்ணினேன்.


பல மாதங்களாக நந்தினியை கொலை செய்யும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். இதனால் கடந்த 4 மாதமாக எனது மருமகள் நந்தினியிடம் நன்றாக பழகினேன். 

இதுகுறித்து எனது தோழியான எமிலியிடம் தொிவித்தேன். அதற்கு எமிலி, உனது மருமகளை மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்து வா என்றும், அங்கு வைத்து அவரை கொலை செய்துவிடலாம் என்றும் கூறினார்.

அந்த திட்டத்தின்படி 29ஆம் திகதி அதிகாலை நந்தினியை அழைத்து கொண்டு நானும் எனது தோழி எமிலியும் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு மணிமுக்தாற்றின் கரையோரம் சென்றோம். 

அங்கே பூஜை செய்யும்போது கண்ணை மூடிக்கொள் என்று கூறி, நந்தியின் கையில் எலுமிச்சை பழத்தை கொடுத்தேன். எமிலி பூஜை செய்வது போல் பாவனை செய்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் நான் பின்பக்கமாக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தேன். பின்னர், நந்தினியின் தலைமுடியை பிடித்து இழுத்து அவரது கழுத்தை அறுத்து தலையை துண்டித்தேன். இதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் தலையை தனியாகவும், உடலை தனியாகவும் ஆற்றங்கரையில் புதைத்துவிட்டு நானும், எமிலியும் எதுவும் நடக்காதது போல் வீட்டிற்கு சென்று விட்டோம். எனது மகன் பொலிஸில் புகார் கொடுத்ததால் சிக்கிக் கொண்டோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .