Editorial / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருவேறு சம்பவங்களில் ஐவரைப் படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இருவருக்கு, இருவேறான நீதிமன்றங்கள், மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளன.
அநுராதபுரம், மொனராகலை ஆகிய மேல் நீதிமன்றங்களிலேயே மேற்கண்டவாறு, தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன.
அநுராதபுரம், எப்பாவலை பகுதியில் நால்வரைக் கொலை செய்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நபரைக் குற்றவாளியாக இனங்கண்ட, அநுராதபுரம் மேல் நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள், மகன் ஆகியோர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, 2010ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதியன்று படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான வழக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையிலேயே, அந்த வழக்கின் தீர்ப்பு, நேற்று (21) வழங்கப்பட்டது.
சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த எப்பாவல பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞனே குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வழக்கில், மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள குற்றவாளி, உயிரிழந்தவர்களின் உறவினர் எனவும் தெரியவருகிறது.
மனிதப் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்கண்ட, நபருக்கு, மொனராகலை மேல் நீதிமன்றம், மரண தண்டனைத் தீர்ப்பளித்துள்ளது.
மொனராகலை பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான நபருக்கே, மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கோழிப் பண்ணையில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில், கழுத்தை நெரித்து, நபரொருவரை படுகொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அந்தக் குற்றச்சாட்டு, சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதி, அவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .