Freelancer / 2026 பெப்ரவரி 16 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் இலங்கைத் தமிழர்களை சட்டவிரோத குடியேறிகளாக கருதக்கூடாது. இதை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: கடந்த 1983-ம் ஆண்டு முதல், இலங்கையில் ஏற்பட்ட இனமோதல்களால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த மண்ணில் இருந்து வெளியேறிய இலங்கைத் தமிழர்களுக்கு தங்குமிடம், வாழ்வாதார உதவி, கல்வி, மருத்துவ வசதிகளை தமிழகம் தொடர்ந்து வழங்கி வருகிறது.
தமிழகத்தில் தற்போது 89 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில் கணிசமானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிப்பவர்கள். அதிலும் 40 சதவீதத்தினர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள். ஆனால், அவர்களுக்கு குடியுரிமை அல்லது நீண்டகால விசா போன்ற நிலையான சட்டப்பூர்வமான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை.
‘ஆக்கப்பூர்வ அணுகுமுறை’ - இந்த நிலையில், சமீபத்திய மத்திய அரசின் கொள்கை முன்னேற்றங்கள், குறிப்பாககுடிவரவு மற்றும் வெளிநாட்டினர் ஆணை 2025 ஆக்கப்பூர்வமான மற்றும் மனிதாபிமான நோக்கத்துடன் கூடிய அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. அந்த ஆணைப்படி, ‘2015 ஜன.9-ம் தேதி வரை இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத்தமிழர்களை சட்ட விரோதமாககுடியேறியவர்களாக கருதக்கூடாது’ என்று முறையான விளக்கம் மத்திய அரசால் வழங்கப்பட வேண்டும்.
எனவே, இலங்கைத் தமிழர்களிடன் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்க தடையாக உள்ள முந்தைய நிர்வாக உத்தரவை மத்திய அரசு ரத்து செய்து, தமிழக அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நீண்டகால விசா விண்ணப்பங்களுக்கு தற்போதைய நடைமுறையில் பாஸ்போர்ட் மற்றும் விசா தேவைகளை தள்ளுபடி செய்யும் நிர்வாக விளக்கத்தை வழங்க வேண்டும். குடியுரிமை, நீண்டகால விசா விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்களுக்கு அதிகாரம்வழங்க வேண்டும்.
இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களின் நிலையை சட்டவிரோதம் என வரையறுப்பது மனிதாபிமான சூழலை பிரதிபலிக்கவில்லை. குறிப்பாக, 2015 ஜன.9 வரைஇந்தியாவில் வசித்து வரும்இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதக் கூடாது என்ற விளக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும். இந்த கருத்துகளை விரைவாக, மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து நல்ல முடிவை எடுப்பீர்கள் என நம்புகிறேன்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார். (a)
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026