2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஊழல் குற்றச்சாட்டை மறுக்கிறார் நாமல்

Freelancer   / 2022 மே 03 , பி.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாம் தொடர்புபடாத இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் இடம்பெற்ற பரிவர்த்தனைகள் குறித்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நல்லாட்சி அரசாங்கம் தன்மீது சுமத்திய பல குற்றச்சாட்டுகளுக்காகவே தான் இன்னும் நீதிமன்றத்துக்கு செல்வதாகவும் இதனுடன் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை பல மில்லியன் டொலர் பெறுமதியான வைத்தியசாலைத் திட்டத்துடன் தொடர்புடைய பாரிய ஊழலை அவுஸ்திரேலிய ஊடகமொன்று ஆவணப்படத்தின் மூலம் வெளியிட்டிருந்தது, அதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (03) பதில் பதிவிட்டிருந்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை நாமல் தெரிவித்திருந்தார்.

2012 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை நிர்மாணத்தின் போது பொருட்கள், சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் திட்டத்தை அவுஸ்திரேலியாவின் அஸ்பென் மெடிக்கல் நிறுவனம் பெற்றுள்ளது.

அஸ்பென் மெடிக்கலினால் இலங்கைக்கு செய்யப்பட்ட முதல் பரிவர்த்தனையில், இலங்கையர் ஒருவருக்குச் சொந்தமான சபர் விஷன் ஹோல்டிங்ஸ் என்ற பிரித்தானியாவின் விர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட  நிறுவனத்துக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தப்பட்டதாக ஃபோர் கோர்னர்ஸ் ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைக் கொண்ட டச்சு நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக அஸ்பென் மெடிக்கல் நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ள நிலையிலேயே மேற்குறிப்பிட்ட பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளது.

மேற்குறிப்பிட்ட 2.1 மில்லியன் அஸ்பென் மூலம் செலுத்தப்பட்ட 4.3 மில்லியன் தொகையின் ஒரு பகுதியாகும் என்றும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் நிமல் பெரேரா, பல தசாப்தங்களாக இலங்கையின் பலம் வாய்ந்த அரசியல் குடும்பமான ராஜபக்ஷ குடும்பத்துடன் தொடர்புடையவர் என, ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்சவின் சார்பில் பணம் வசூலித்ததாக நிமல் பெரேரா வாக்குமூலம் அளித்தமையாலேயே 2016ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டதாக ஃபோர் கோர்னர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .