Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஜூலை 12 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
“எனது மகனை தன்னுடைய வீட்டுக்கு அனுப்புமாறும், அவரை ஏ.எஸ்.பி (உதவி பொலிஸ் அத்தியட்சகர் ) ஆக ஆக்குவதாகவும் வாஸ் குணவர்தன, எங்களிடம் கூறினார்” என, நிபுண ராமநாயக்கவின் தாயார், கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (11) சாட்சியமளித்தார்.
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவக மாணவனான நிபுண ராமநாயக்க, 2009 ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியன்று தாக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மனைவி, அவரது மகன் ரவிந்து வாஸ் குணவர்தன, பொலிஸார் ஐவர் உட்பட எட்டுப்பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்குத் தொடர்பான சாட்சிய விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க முன்னிலையில் நேற்று (11) எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குணரத்ன, ஏற்கெனவே சாட்சியமளித்த நிபுண ராமநாயக்கவின் சாட்சியத்தில் உள்ள எழுத்து மற்றும் சொற்பிழைகளைத் திருத்தியதையடுத்து, அவருடைய தாயாரிடம் சாட்சிய விசாரணை மேற்கொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“எனது இளைய மகளின் பிறந்த தினமான ஓகஸ்ட் 4ஆம் திகதி, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் விரிவுரையாளர் ஒருவரிடமிருந்து அழைப்பொன்று வந்தது. அதன்போது, என்னுடைய கணவர் எங்கே? எனக் கேட்டார். தோட்டத்துக்குச் சென்றுள்ளார் என நான் கூறினேன்.
“என்னுடைய மகனை, யாரோ கடத்திச் சென்றுள்ளனர் என்றும் அது தொடர்பில் அத்துருகிரிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அங்கு வருமாறும் கூறினார்.
“அதனையடுத்து, எனது கணவரும் நானும், இரத்தினபுரியிலுள்ள எங்களுடைய வீட்டிலிருந்து அத்துருகிரியவுக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, கொஸ்கமவில் வைத்து, விரிவுரையாளரிடமிருந்து அழைப்பொன்று வந்தது. பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஆட்களால் உங்களுடைய மகன், கொழும்பு குற்றப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அங்கு செல்லுமாறும் கூறப்பட்டது.
“தெமட்டகொடையிலுள்ள பிரிவுக்கு, நாங்கள் சென்றபோது, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவக மாணவர்கள் அங்கு குழுமியிருந்தனர். வாஸ் ஐயாவைச் சந்திக்கவேண்டும் என நாங்கள் கூறியபோது, எங்களை அமருமாறு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.
“பின்னர், மேல்தளத்துக்கு அழைக்கப்பட்டு அங்கும் அமரவைக்கப்பட்டோம். அங்கு என்னுடைய மகனின் நண்பர்கள் நால்வர் குந்தியிருக்க வைக்கப்பட்டிருந்தனர். ‘எங்களை வெளியில் விடுகிறார்கள் இல்லை’ என, அவர்கள் கூறினர்.
“15 நிமிடங்களின் பின்னர், வாஸ் குணவர்தனவின் அறைக்கு நாங்கள் அழைக்கப்பட்டோம். ‘என்னுடைய மகனை உங்களது மகன் அடித்துள்ளான். அதனால் தான் இங்கு கொண்டுவந்தோம்’ என அவர் கூறினார்.
“என்னுடைய மகன் அவ்வாறு செய்திருக்கமாட்டான். அவனுக்கு பரீட்சை இடம்பெறுகிறது. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அழைப்பெடுத்து ஆசிபெற்றே பரீட்சைக்குச் செல்வான் என நான் கூறியதுடன், எனது மகன் எங்கே என கேட்டேன்.
“உங்களுக்கு ஏதும் பொருளாதாரப் பிரச்சினை இருக்கிறதா?” என அவர் கேட்டார். அந்தளவு இல்லை எனக் கூறிய நாங்கள், எங்களுடைய மகன் எங்கே என்றே கேட்டுக்கொண்டிருந்தோம். அதற்கு அவர், “உங்களுடைய மகனை என்னுடைய வீட்டுக்கு அனுப்புங்கள். நான் அவரை ஏ.எஸ்.பி ஆக்குகிறேன்” என்றார்.
பின்னர், ஓரிரு மணித்தியாலங்கள் கழித்து, என்னுடைய மகனை பொலிஸார் இருவர் தூக்கிக் கொண்டு வந்தனர். குற்றவாளியொருவரை அடிப்பது போலல்லவா அடித்துள்ளீர்கள் என, நானும் எனது கணவரும் கேட்டோம்” என கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.
“மகனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டும் எனக் கேட்டதற்கு கொண்டு செல்லுமாறு கூறினார். எங்களால் அவரைத் தூக்க முடியவில்லை. அவருடைய நண்பர்கள் நால்வருமே அவரைத் தூக்கிவந்து எங்களுடைய ஜீப்பில் ஏற்றினர்.
“மகன் சோர்வாக இருந்ததால் சாப்பாடு கொடுக்க முயன்றோம். அவர் உண்ணவில்லை. பால் பக்கெட் ஒன்றைப் பருக்கியபோது, கொஞ்சம் குடித்துவிட்டு, வாந்தியெடுத்துவிட்டார். பின்னர் அவரை தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தோம்.
“அவசர சிகிச்சைப் பிரிவிலுள்ள வைத்தியர்கள் அனைவரும் வந்து பார்த்ததுடன், சம்பவத்தைக் கேட்ட பின்னர் பொலிஸ்மா அதிபருக்கு முறையிடுமாறு எம்மிடம் கூறினர்” என சாட்சியமளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
2 hours ago