2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

ஏலத்திற்கு புதிய டிஜிட்டல் முறைமை

R.Tharaniya   / 2025 நவம்பர் 03 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 117% ஐ பூர்த்திசெய்யக் கிடைத்திருப்பதாக இலங்கை சுங்கத்தின் அதிகாரிகள், பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர்.
 
2025 செப்டெம்பர் 30ஆம் திகதியில் இலங்கை சுங்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் ரூ.1485 பில்லியன் என்றும், ரூ.1737 பில்லியனை வருமானமாகப் பெற முடிந்திருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
 
பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர்   பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க  தலைமையில்   பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
 
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் ஒவ்வொரு மாதமும் இலங்கை சுங்கத்தின் வருமானம் கணிசமானளவு அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.
 
இதற்கு அமைய 2025 ஒக்டோபர் 14ஆம் திகதியாகும்போது வாகன இறுக்குமதியால் அதிக வருமானமாக ரூ.587.11 பில்லியன் கிடைத்திருப்பதாகவும், இது ஒட்டுமொத்த வருமானத்தில் 37% என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 
 
இதற்கமைய ஒக்டோபர் 14ஆம் திகதியாகும்போது 55,447 மோட்டார் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் ஊடாக ரூ.472.26 பில்லியன் சுங்கவரி வருமானம் கிடைத்துள்ளது. 733 சரக்குப் போக்குவரத்து வாகனங்களின் இறக்குமதியின் மூலம் ரூ.48.67 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.
 
142,524 மோட்டார் சைக்கிள் மற்றும் 15,035 முச்சக்கர வண்டிகளின் இறக்குமதியின் ஊடாக முறையே ரூ.30.3 பில்லியனும், ரூ.15.10 பில்லியனும், 1679 பொதுப் போக்குவரத்து பஸ் மற்றும் வான் ரக வாகன இறக்குமதியின் ஊடாக ரூ.12.66 பில்லியன் வருமானம் கிடைத்திருப்பதாகவும் அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
 
இலங்கை சுங்கத்தின் எதிர்கால இலக்குகள் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. அரசுடமையாக்கப்பட்ட பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு புதிய டிஜிட்டல் கட்டமைப்பை (E-Tendering system)  அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஏனைய அரசாங்க நிறுவனங்களுக்கும் முன்னுதாரணமானதாக இருக்கும் என குழு சுட்டிக்காட்டியது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X