2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கடன்தொகை கணிசமாக உயர்வு

Freelancer   / 2023 செப்டெம்பர் 26 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்ததுடன், ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியானது கடன் நெருக்கடிக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும் என்றார்.

அனைத்து பெரிய சக்திகளும் கடன் பெற்றிருந்தாலும், ஒரு தேசத்தை நடத்துவதற்கான முக்கிய காரணி கடன்களை திருப்பிச் செலுத்தும் திறனாகும் என்று தெரிவித்த அவர், அரசாங்கம் முதலில் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பாரிய கடன்களைக் கொண்டிருக்கும் சில நாடுகளாகும் என்றும் ஆனால் அவற்றின் அரசாங்கங்களால் அவற்றை திருப்பிச் செலுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கை தனது கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் கவனம் என்றும் அதற்கமைவாக சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளின் நம்பிக்கையை வென்றெடுக்க முடிந்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், நாட்டை ஸ்திரப்படுத்துவதில் அரசாங்கம் மேலும் முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறினார்.

இலங்கையின் வங்குரோத்து நிலையை அகற்றுவதற்கான மாபெரும் நடவடிக்கையாக சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை ஜனாதிபதி இறுதி செய்வார் என்றும் குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .