2026 மே 21, வியாழக்கிழமை

’கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ பா.ஜ.க-வை முந்தியது

Mayu   / 2026 மே 21 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை விட, புதிதாகத் தொடங்கப்பட்ட 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janta Party - CJP) என்ற நையாண்டி இயக்கம் குறுகிய நாட்களில் 10 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களுடன் முந்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் இவ்வியக்கத்தின் அதிகாரப்பூர்வ X (ட்விட்டர்) கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதியரசர் சூர்யகாந்த் வெளியிட்டதாகக் கூறப்படும் சர்ச்சை கருத்து ஒன்றே இந்த இயக்கத்தின் ஆரம்ப புள்ளியாகும்.

வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் ஆன்லைன் ஆர்வலர்களை "கரப்பான்பூச்சிகள்" மற்றும் "சமூகத்தின் ஒட்டுண்ணிகள்" என அவர் ஒப்பிட்டதாக வெளியான தகவல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

(பின்னர் நீதியரசர் இதற்கு விளக்கமளித்து, தனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், போலிப் பட்டப்படிப்புகளைப் பயன்படுத்தி தொழிலுக்குள் நுழைபவர்களை மட்டுமே தான் அவ்வாறு குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்).

இருப்பினும், இந்த ஆதங்கத்தை கையில் எடுத்த பாஸ்டன் பல்கலைக்கழக பட்டதாரியும், முன்னாள் ஆம் ஆத்மி சமூக ஊடகப் பணியாளருமான 30 வயது அபிஜீத் திப்கே (Abhijeet Dipke), "அனைத்து கரப்பான்பூச்சிகளும் ஒன்றிணைந்தால் என்ன?" என்ற நையாண்டியுடன் கடந்த மே 16 அன்று இந்த இயக்கத்தைத் தொடங்கினார்.

பா.ஜ.க-வை முந்தியது: தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இவ்வியக்கம் இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் (1 கோடி) பின்தொடர்பாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. இது பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ பக்கத்தை (8.7 மில்லியன்) விட அதிகமாகும். (காங்கிரஸ் 13 மில்லியனுடன் முதலிடத்தில் உள்ளது).

தங்களை "மதச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக மற்றும் சோம்பேறி" (Secular, Socialist, Democratic, Lazy) இளைஞர்களின் முன்னணி என அறிவித்துக் கொண்ட இவ்வியக்கம், வேடிக்கையான மீம்கள் மூலம் தங்களின் அரசியல் கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறது.

இந்த விசித்திரமான கட்சியில் இணைய "வேலையில்லாமை, சோம்பேறித்தனம், எந்நேரமும் ஆன்லைனில் இருப்பது மற்றும் தொழில்முறை ரீதியாகக் குமுறல்களை வெளிப்படுத்தும் திறன்" ஆகிய 4 தகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் தங்களது X தளம் முடக்கப்பட்டதை நிறுவனர் அபிஜீத் திப்கே உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கணக்கு முடக்கப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே, "Cockroach is Back" என்ற புதிய கணக்கைத் தொடங்கியுள்ள அபிஜீத், அதில் "கரப்பான்பூச்சிகள் இறப்பதில்லை" எனப் பதிவிட்டுள்ளார். இந்த புதிய கணக்கும் சில மணிநேரங்களில் 15,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைப் பெற்றுள்ளது.

வெறும் நகைச்சுவையாகத் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், தற்போது இந்தியாவின் மிக முக்கியப் பிரச்சினைகளான பல்கலைக்கழக பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டம் (29.1%), NEET உள்ளிட்ட பரீட்சை வினாத்தாள் கசிவுகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு பிரம்மாண்ட இளைஞர் இயக்கமாக உருவெடுத்துள்ளது.

இதற்கு ஆதரவாக பிரபல சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் நகைச்சுவையாக தங்களை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X