2026 மே 21, வியாழக்கிழமை

சிறுவனின் நடைபயணம்: புஷ்பா விளக்கம்

Editorial   / 2026 மே 21 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மலையக மக்களுக்குக் காணி உரிமையைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி, தலவாக்கலையிலிருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் நோக்கி 7 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் புதன்கிழமை (20) காலை நடைபயணத்தை மேற்கொண்டார். எனினும், ஹட்டன் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் ஹட்டன் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடையுத்தரவைத் தொடர்ந்து, பொலிஸார் அச்சிறுவனின் நடைபயணத்தை ஹட்டன் நகரில் வைத்து இடைநிறுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, மலையக மக்கள் முன்னணியின் கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினரும் வர்த்தக சங்கத்தின் தலைவருமான லெட்சுமன் விஸ்வநாதன் (புஷ்பா) விளக்கமளித்துள்ளார்.  

"சிறுவன் தனது 5ஆவது வயதிலேயே 10 கிலோமீற்றர் தூரத்தை 90 நிமிடங்களில் நடந்து சாதனை புரிந்தமைக்கான சான்றிதழைப் பெற்றவர். இத்தகைய முயற்சியை அவரது தந்தையின் வழிகாட்டலில் சிறுவன் மேற்கொண்டுள்ளார். இந்த நடைபயணத்திற்காகத் தேவையான மருத்துவச் சான்றிதழ் மற்றும் அனுமதியையும் அவர் பெற்றிருந்தார். தலவாக்கலையில் நடைபயணத்தை ஆரம்பித்தபோது, பொலிஸார் சிறுவனை வாழ்த்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஹட்டன் வரை பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

சிறுவனின் தந்தை என்னைத் தொடர்புகொண்டு, கொட்டகலையில் ஒரு வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். சாதனை புரியப்போகும் ஒரு சிறுவனை அந்தச் சமூகத்தைச் சார்ந்தவன் என்ற வகையில் பாராட்டுவதும் ஊக்குவிப்பதும் எமது கடமை. அந்த வகையில், அவரது சான்றிதழ்களைப் பரிசீலித்த பின்னரே வரவேற்புக்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டோம்.

ஆனால், 'காணி உரிமை' என்ற கோரிக்கையைச் சிறுவன் தெளிவாகக் கூறியதன் பின்னரும், அது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்த உடனேயே, ஹட்டனில் பொலிஸார் நடைபயணத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். நாம் கொட்டகலையில் வரவேற்பை மட்டுமே வழங்கினோம், வேறு எந்தவித ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. ஒரு சிறுவனின் சாதனையை ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே இந்த வரவேற்பு நிகழ்வை நடத்தினோம்," என்று விளக்கமளித்துள்ளார்.

மேலும் அவர் தனது விமர்சகர்களிடம் கூறுகையில், "எந்தப் போராட்டத்தை மேற்கொண்டாலும் காணி உரிமை எமது மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை என்பது உறுதி," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X