2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படல் ஆகாது’

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை உள்ளிட்ட ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில், கொவிட்-19 நெருக்கடி காலப்பகுதியில், கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுத்தல் தொடர்பாக அனைத்து நாடுகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகள், குறிப்பிட்ட அளவில் பேணப்படவேண்டும் எனக் குறிப்பிட்டள்ளார்.

 இலங்கையில், கொவிட் – 19 தொடர்பான அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுதல், உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என, பதில் பொலிஸ்மா அதிபரால் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஏப்ரல் 25ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் பொலிஸ் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், அரசாங்கத்தை விமர்சிப்பதன் அடிப்படையில், எவராவது கைது செய்யப்பட்டால் அது அரசியல் யாப்புக்கு எதிரான செயற்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் எனினும் இலங்கையில் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இப்பிராந்திய நாடுகளில் ஏற்கெனவே பொய்யான செய்திகள், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் சட்டங்கள் காணப்படுகின்றன என்றும் எனினும் அவை அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலான முறையான பேச்சுகள், விமர்சனங்கள் ஆகியவற்றை தடுப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்றும் இவ்வாறான நடவடிக்கைகள் சட்டபூர்வமான தன்மை, தேவை, சட்டம் ஆகிய கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கான அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொவிட் – 19 நெருக்கடியை அடுத்து, அரசாங்கத்தின் பதிலை விமர்சிக்கும் நபர்களை தன்னிச்சையாக கைதுசெய்து தடுத்து வைப்பது அல்லது தொற்று பற்றிய தகவல்கள் அல்லது கருத்துக்களைப் பகிர்வது ஆகியவற்றை மேலும் கட்டுப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அல்லது தவறான தகவல்களை பரப்பியதாக பங்களாதேஷ், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நிலையற்ற காலகட்டத்தில் தவறான தகவல்களின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .