Freelancer / 2026 ஜனவரி 21 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ஹரிணி அமரசூரிய மீதான விமர்சன தாக்குதல்களைக் கண்டிக்கும் அதேவேளை அவரினால் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி மறுசீரமைப்பு முயற்சிகளை முழுமையா ஆதரிப்பதாக யாழ்ப்பாண கல்விச் சமூகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல முன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலாநிதிகள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், மருத்துவ நிபுணர்கள். பொறியியலாளர்கள் வங்கியலாளர்கள், பொருளியலாளர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் என 55 க்கும் மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டுள்ள அந்த அறிக்கையின் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி. ஹரிணி அமரசூரியவை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படும் அருவருப்பான, பெண் விரோதமான, அவதூறான தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையும் கடும் கண்டனத்தையும் பதிவு செய்கிறோம்.
கலாநிதி. ஹரிணி அமரசூரிய ஒரு அரசியல் தலைவி மட்டுமல்ல; அவர் ஒரு அறிஞர், புத்தி ஜீவி, சமூக நீதி, சமத்துவம் மற்றும் கல்விக்காக உழைப்பவர் . கொள்கை விவாதங்களினை விடுத்து, தனிப்பட்ட அவதூறுகள் மூலம் அவரை இழிவுபடுத்தமுயற்சிப்பது, அவரை மட்டுமல்ல, ஜனநாயக மதிப்புகள், பெண்களின் அரசியல் தலைமை,மற்றும் பொது வாழ்வில் அறிவுசார் நேர்மை ஆகிய அனைத்தையும் அவமதிப்பதாகும்.
இத்தகைய தாக்குதல்கள் அநியாயமானவையும், ஒழுக்கமற்றவையும் மட்டுமல்ல, அவை ஜனநாயக உரையாடலையே இல்லாமல் ஆக்குகின்றன. தர்க்கப்பூர்வமான, ஆதாரமுள்ள, விவாதங்களை மேற்கொள்ளாமல், சில அரசியல் சக்திகளும் அவர்களின் ஆதரவாளர்களும் திரிவுபடுத்தப்பட்ட மற்றும் தவறான தகவல்கள் மூலம் உணர்ச்சிகளைத் தூண்டும் யுக்திகள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
இனவாதம் மற்றும் உணர்ச்சி பூர்வ அரசியலுக்காக இலங்கை கடந்த தசாப்தங்களில் மிகப் பெரிய விலையைச் செலுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும் சமூக சீர்கேடும் இத்தகைய தோல்வியடைந்த அரசியல் முறைகளின் நேரடி விளைவுகளாகும்.
மக்கள் இத்தகைய அரசியலை 'அரகலய' போராட்டம் வழியாக தெளிவாக நிராகரித்தனர். இன்று இலங்கை ஒரு வரலாற்றுத் திருப்புமுனையில் நிற்கிறது. ஊழல், இனவாதச் சுரண்டல் மற்றும் கொள்கை முடக்க நிலை ஆகியவற்றால் சபிக்கப்பட்டிருந்த பல தசாப்தங்களுக்குப் பிறகு, மக்கள் கட்டமைப்பு சார்ந்த மாற்றங்களுக்கான தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.
இந்த முக்கியமான தருணத்தில், இலங்கைக்கு முறையான மறுசீரமைப்புகள் அவசியம்;அதில் குறிப்பாக, கல்வி மறுசீரமைப்பு மிக முக்கியமானது. கல்வியே நீண்டகால தேசிய வளர்ச்சி, சமூக உயர்வு மற்றும் உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றின் அடித்தளம். ஆனால், நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான அமைந்த அதே சக்திகள், மீண்டும் ஒருமுறைமத, கலாசார மற்றும் உணர்ச்சி சார்ந்த விவகாரங்களைப் பயன்படுத்தி இந்த மறு சீரமைப்புகளைத் தடுக்க அல்லது திசைதிருப்ப முயற்சிப்பதை நாம் காண்கிறோம்.
வெறுப்பு, பயம், மற்றும் பிளவுகளால் எந்த நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என்பதைக் தீர்மானமாக வலியுறுத்துகிறோம். கல்வி மறுசீரமைப்பு ஒரு அரசியல் அச்சுறுத்தல் அல்ல, அது ஒரு தேசிய அவசியம். தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் உண்மையினை திரிவுபடுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் அவசியமற்ற சர்ச்சைகள் வழியாக மறுசீரமைப்புகளைத் தகர்க்க முயல்வது, நாட்டை பலவீனமாகவும் பிளவுபட்டதாகவும் வைத்திருந்து, அதன் மூலம் மீள அதிகாரத்திற்கு வர முயலும் சிலரின் அதிகார ஆசைகளுக்கே உதவும்.
இன்று கலாநிதி. ஹரிணி அமரசூரிய அவர்களை தாக்குவோர் கலாசாரத்தையோஒழுக்கத்தையோ பாதுகாப்பவர்கள் அல்ல. அவர்கள் பாதுகாக்க முயல்வது தமக்கான சலுகைகளையும் தங்களது அரசியல் உயிர்வாழ்தலையும் தான். கடந்த 75 ஆண்டுகளாக இனவாதம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அறிவு விரோத அரசியல் மூலம் நாட்டை தோல்வியடையச் செய்தவர்கள், இன்று சிந்திக்கத் தெரிந்த, கல்வியறிவு பெற்ற, புதியதலைமுறை உருவாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.
அதனால்தான் அவர்கள் இலக்காக்குவது:
ஒரு மாற்றத்தை முன்னெடுக்கும் சீர்திருத்தவாதியை.எனவே, நாம் தெளிவாகத் தெரிவிக்க விரும்புவது, ஒரு அறிஞரை, ஒரு பெண்ணை, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருக்கு எதிரான அனைத்து வகையான அவதூறுகள்,பாலின அடிப்படையிலான தாக்குதல்கள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களை கடுமையாக கண்டிக்கிறோம்.
இலங்கையின் கல்வி மறுசீரமைப்புகளை வழிநடத்தும் கலாநிதி. ஹரிணி அமரசூரியஅவர்களின் தலைமையினை முழுமையாக ஆதரிக்கிறோம்.
மக்களின் ஆணையினையும், தேசியக் கொள்கையினையும், அடிப்படையாகக்கொண்டு, அரசு தயக்கமின்றி கல்வி மறுசீரமைப்புகளை உறுதியாக முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தவறான தகவல்கள் மூலம் மக்களை அச்சமூட்டி மறுசீரமைப்புகளைத் தடுக்க முயலும் பிற்போக்குச் சக்திகளுக்கு எதிராக, கல்வியாளர்கள், தொழில்முனைவோர், ஆசிரியர்கள், பெற்றோர், குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என அழைக்கிறோம்.
நாட்டை அழித்தவர்களால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.கல்வி சீர்திருத்தம் குறித்தது அஞ்சுபவர்களால் எதிர்காலத்தை உருவாக்க முடியாது. சிலரின் அதிகார ஆசைகளுக்காக இலங்கையின் எதிர்காலம் பலியிடப்படக் கூடாது.கல்வி அறிவு, மரியாதை மற்றும் தைரியத்துடன் இலங்கை முன்னேற வேண்டும்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago