Editorial / 2026 மார்ச் 02 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் திடீர் கேஸ் தட்டுப்பாட்டால், சிலிண்டர் வாங்கப் போய் கடைசியில் சொந்த சிலிண்டரையே பறிகொடுத்த ஒரு ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் 'அலப்பறை' கதை இது. தென் மாகாணத்தின் ஒரு நகரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
நமது கதையின் நாயகன் ஒரு ஓய்வுபெற்ற அதிகாரி. பிள்ளைகள் நல்ல வேலையில் இருக்க, மனைவியுடன் நிம்மதியாகக் காலத்தைக் கழித்து வந்தார். திடீரென கேஸ் தட்டுப்பாடு என்றதும் பதறிப்போன அவரது மனைவி, "உடனே போய் ஒரு சிலிண்டரைத் தூக்கிக்கொண்டு வாரும்" என 'உத்தரவு' பிறப்பித்தார்.
மனைவியின் கட்டளைக்கு மறுபேச்சு ஏது? ஒரு த்ரீவீலரைப் பிடித்துக்கொண்டு கேஸ் கடைக்கு ஓடினார். அங்கே ஏற்கெனவே ஒரு நீண்ட வரிசை நின்றிருந்தது. தனது சிலிண்டரை அடையாளம் காண்பதற்காக, சட்டைப் பையில் இருந்த தனது பழைய கைக்குட்டை (லென்சு) ஒன்றை எடுத்து சிலிண்டரின் கைப்பிடியில் பலமாக ஒரு முடிச்சுப் போட்டுவிட்டு வரிசையில் வைத்தார்.
கேஸ் லாரி வர இன்னும் இரண்டு மணிநேரம் ஆகும் போலத் தெரிந்தது. அப்போதுதான் அங்கு அவர் தனது 'உயிர்த்தோழன்' ஒருவரைச் சந்தித்தார். "லாரி வர நேரமாகும் மச்சான், அதுவரைக்கும் ஒரு 'அடி' (மது) அடிச்சிட்டு வருவோமா?" என நண்பன் ஒரு 'அபூர்வ' ஆலோசனையை வழங்கினார்.
அவ்வளவுதான்! சிலிண்டரையும், லென்சு முடிச்சையும் அப்படியே விட்டுவிட்டு, இருவரும் பஸ் ஏறி அருகில் உள்ள நகருக்குச் சென்று 'ஜாலியாக'ச் சப்பாயமாகிவிட்டுத் திரும்பினர்.
திரும்பி வந்து பார்த்தால்... லாரி வந்து கேஸ் விநியோகத்தை முடித்துவிட்டுச் சென்றிருந்தது. நண்பனோ, "நான் வேற ஒருத்தன்கிட்ட காசைக் குடுத்துட்டுப் போனேன், அவன் எனக்காக வாங்கிட்டான்" என்று நழுவிவிட்டார். ஆனால், நம் நாயகன் தேடிப் பார்த்தபோது, லென்சு கட்டிய அவரது சிலிண்டரைக் காணவில்லை!
குடித்த 'சரக்கு' உடனே இறங்கிப்போய், பதற்றத்தில் கடைக்காரரிடம் அழுது புலம்பினார். கடைக்காரர் பரிதாபப்பட்டு அங்கிருந்த CCTV கேமராவைச் சோதித்துப் பார்த்தார். அதில் ஒரு சிவப்பு நிற த்ரீவீலரில் வந்த மர்ம நபர்கள், 'லென்சு' கட்டிய சிலிண்டரை லாவகமாகத் தூக்கிக் கொண்டு செல்வது தெரிந்தது. ஐயா தனது அடையாளத்திற்காகக் கட்டிய லென்சு, திருடர்களுக்குச் சிலிண்டரை அடையாளம் காட்ட வசதியாகப் போய்விட்டது!
கடைசியில் பொலிஸ் நிலையம் சென்றபோது, அங்கிருந்த அதிகாரிகள், "பொறுப்பில்லாமல் சிலிண்டரை விட்டுவிட்டு குடிக்கப் போவீர்களா?" என இவரை லெப்ட்-ரைட் வாங்கிவிட்டனர்.
இப்போது கேஸ் சிலிண்டரும் இல்லை, வீட்டில் மனைவியின் அர்ச்சனை வேறு! வீதியில் இறங்கினால் பார்ப்பவர்கள் எல்லாம் "என்ன சார்.. சிலிண்டர் கிடைச்சதா?" எனக் கேலி செய்வதால், இப்போது அவர் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே 'சுய ஊரடங்கு' போட்டுக்கொண்டு பதுங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
56 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
3 hours ago
3 hours ago